தினந்தோறும் திருப்புகழ் : 398

பகுதி – 398

பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இப்பாடல், ‘நாள்தோறும் உன்னை முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே’ என்று வேண்டுகிறது. இறைவனை ‘சுத்த தமிழ்ஆர் ஞான முருகோனே’ என்று விளிக்கிறது.

ஒற்றொழித்து அடிக்கு 25 எழுத்துகள்; 5, 6, 12, 13, 19, 20 ஆகிய எழுத்துகள் நெடில், மற்றவை குறில்; சீரான இடைவெளிகளில் வல்லொற்று பயில்கிறது. ஒவ்வோரடியிலும் ஒன்று, மூன்று, ஐந்தாம் சீர்களில் தொடர்ச்சியாக எதுகை அமைந்திருக்கிறது.

தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான தனதான

கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
கட்டுவிடு மோர்கால மளவாவே
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
கற்புநெறி தான்மாய வுயர்காலன்
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி
யிட்டவிதி யேயாவி யிழவாமுன்
எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத
இட்டமினி தோடார நினைவாயே
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்
தொக்கில்நெடு மாமார்பு தொளையாகத்
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
சுத்ததமி ழார்ஞான முருகோனே
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
மத்தமயில் மீதேறி வருநாளை
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத பெருமாளே.


தினந்தோறும் திருப்புகழ் : 378

இன்று சற்றே நீளமான சந்த அமைப்புள்ள பாடலைப் பார்க்கிறோம்.  இது சிவகிரி, சிவமலை என்றெல்லாம் பெயர்கொண்ட பழனி (திருவாவினன்குடித் தலத்துக்கானது.  இறையருளைக் கோருகிறது.

ஒற்று நீக்கி ஒரு மடக்குக்கு 16 எழுத்துகள் கொண்ட அமைப்பு மூன்று முறை மடங்கி, நான்கெழுத்துகளைக் கொண்ட தொங்கல் சீரோடு நின்று, இப்படி ஓரடிக்கு இரண்டு அடுக்குகள் உள்ளன.  ஆகவே அடிக்கு ஒற்று நீக்கி 104 எழுத்துகள்; முதல் மடக்கில் ஒற்று சேர்த்து ஒவ்வொரு இரண்டாம் எழுத்தும் மெல்லொற்று; அதைத் தொடர்வது நிரைநிரை என்ற அமைப்பைக் கொண்டதும், வேகமான ஓட்டத்தைக் கொண்டமான சந்தம்.  இவை அனைத்துமே குறில்.  தொங்கல் சீரில் மட்டுமே நெடில் பயிலக் காணலாம்.  விவரங்களைச் சொல்லும்போதே தலைசுற்ற வைக்கும்படியான சிக்கலான இந்த அமைப்பில், பல இடங்களில் சிலேடைப் பிரயோகங்கள்; பல புராணச் சம்பவங்கள்; எத்தனையோ கதைகள் அடங்கியுள்ளன என்பதுதான் மூச்சுமுட்டுகின்ற செய்தி. பாடலைப் பாருங்கள்; படிப்பதைக் கேளுங்கள்.

தந்தந் தந்தந் தந்தந் தந்தந்
தனதன தனதன தனதன தனதன
தந்தந் தந்தந் தந்தந் தந்தந்
தனதன தனதன தனதன தனதன
தந்தந் தந்தந் தந்தந் தந்தந்
தனதன தனதன தனதன தனதன             தனதான

குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்
கொஞ்சுங் கெஞ்சுங் செஞ்சும் வஞ்சஞ்
சமரச முறவொரு தொழில்வினை புரிபவர்    விரகாலும்
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர்   மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன      மருள்வாயே
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் – மருகோனே
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை – யடுவோனே
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுங் தங்கும்
விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை – புயவீரா
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு- திறலோனே
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
அங்கன் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
கயநிறை வளமுறு சிவகிரி மருவிய  – பெருமாளே.


https://drive.google.com/open?id=0B4GBReGAyfAmYmZ3STk2RF9wZ0E
https://drive.google.com/open?id=0B4GBReGAyfAmam9tbUlhaFZxT1U

தினந்தோறும் திருப்புகழ் : 389

பதச் சேதம் சொற் பொருள்
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உ(ள்)ள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே அருக்கி: சுருக்கமாக; மெத்தெனச் சிரித்து: மென்மையாகப் புன்முறுவல் பூத்து; அறக் கறுத்த கண்: முழுவதும் கரிய நிறத்தைக் கொண்ட கண்; பயிலாலே: குறிப்பாலே, ஜாடையாலே;
அழைத்து அகப் படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்து அபத்தம் உற்று வித்தகர் போல ஒட்டற: ஒன்றையும் விடாமல், ஒட்டஒட்ட; பறிப்பவர்க்கு அடுத்து: பறிப்பவர்களை நெருங்கி, நாடி; அபத்தம்: பொய்; வித்தகர் போல: அறிவாளிகளை, ஞானியரைப் போல;
தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் தரிக்கும்: நடிக்கும்; வித்தரிக்கும்: விஸ்தாரமாக, விரிவாக; ப்ரசித்தி: புகழ், கீர்த்தி;
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இப் பிறப்பு பெற்றிடலாமோ சமைத்து உரைத்து: புனைந்து உரைத்து;
பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்பு உற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் பொருக்கு: காய்ந்த, வற்றி உலர்ந்த; அரக்கர் கொத்து: அரக்கர் கூட்டம்; பொருப்பினில்: (கிரெளஞ்ச) மலையில், பெருக்க உற்றிடு மாயம்: பெருகி, நிரம்ப இருந்த மாயம்;
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா அடல் கரம்: வலிமையுள்ள கரம்; கற்பகபுரி: கற்பக மரம் இருப்பதான தேவலோகம்;
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை  குறத்தியை தினை புன கிரி தலத்து இடை தோயும் திருத்த முத்தமிழ்: திருத்தமான, செம்மையுடைய முத்தமிழ்; மைக் குறத்தி: மை தீட்டிய கண்களை உடைய வள்ளி; தினைப்புன கிரி: தினைப்புனம் உள்ளதான வள்ளி மலை; தோயும்: தோய்ந்த, அணைத்த;
சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே. குக்குடக் கொடி: சேவற் கொடி; செருக்க: பெருமிதம் கொள்ள; உற்பல சுனை: நீலோற்பலம்—கரு நெய்தல்;

அருக்கி மெத்தெனச் சிரித்து உருக்கி இட்டு உ(ள்)ளக் கருத்து அழித்து அறக் கறுத்த கண் பயிலாலே… சுருக்கமாகவும் (சின்னதாக) மென்மையாகவும் சிரித்து; பார்க்கின்றவர்களின் மனங்களை உருக்கி; மனத்திலே உள்ள கருத்தை அழித்து, மிகவும் கரியதாகிய கண்ணின் குறிப்பால்—ஜாடையால்,

அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்து அபத்தம் உற்று… கூப்பிட்டு, தம்முடைய வசப்படுத்திக் கொண்டு, ஒன்றும் மிஞ்சாதபடி பொருளைப் பறிக்கும் பொருட்பெண்டிரைத் தேடிச் சென்றும்; பொய்யை உற்று (பொய்யாக),

வித்தகர் போலத் தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி… ஞானியரைப் போல நடித்தும் விஸ்தாரமாகத் தத்துவங்களைப் பேசுகின்ற பெரும்புகழ்,

எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம் சமைத்து உரைத்து… எந்த உலகத்திலும் யாருக்கும் இல்லை என்று ஞானம் உள்ளது போன்ற சொற்களைப் பொய்யாகப் பேசி (உண்டாக்கிப் பேசி);

இமைப்பினில் சடக்கெனப் படுத்து எழச் சறுக்கும் இப் பிறப்பு பெற்றிடலாமோ… கண் இமைக்கின்ற நேரத்துக்குள் சட்டென்று படுத்து எழுவதைப் போல சறுக்கி அழிகின்ற இந்தப் பிறவியைப் பெற்றிடலாமோ? (பெறாமல் இருக்க வேண்டும்.)

பொருக்கு எழக் கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்பு உற… வறட்சியடைந்து உலர்ந்த தன்மை வெளிப்படுமாறு கடற்பரப்பு வற்றவும்; அரக்கர் கூட்டம் மடியவும்;

பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம் புடைத்து இடித்து அடல் கரத்து உறப் பிடித்த… கிரெளஞ்ச மலையில் நிரம்பி இருந்ததான மாயம் உடைந்து கெடும்படியாகவும், வலிய கரத்தில் பொருந்துமாறு (வேலைப்) பிடித்தவனே!

கற்பகப் புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா… கற்பக மரங்கள் நிறைந்ததான தேவலோகத்தின் மீது கருணைகொண்ட அழகும் ஒளியும் நிறைந்த வேலை ஏந்துபவனே!

திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த… திருத்தமான முத்தமிழில் பாடும் பாடலுக்கு (உரியவன்) ‘இவன் ஒருவனே’ என்று நிற்பவனே!

மைக் குறத்தியைத் தினைப் புனக் கிரித் தலத்து இடை தோயும்… மை தீட்டிய கண்களை உடைய வள்ளியை, அவளிருந்த தினைப்புனம் உள்ளதான வள்ளி மலையில் அணைத்தவனே!

சிவத்த குக்குடக் கொடிச் செருக்க உற்பலச் சுனைச் சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.… (திருக்கரத்திலுள்ள) சேவற்கொடி(யிலுள்ள சேவல்) பெருமிதம் அடைந்து கூவுகின்றதும்; நீலோற்பலங்கள் மலரும் சுனைகளைப் பெற்றிருக்கும் சிறப்புள்ளதமான திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

கடற்பரப்பு பொருக்குத் தட்டியது போல உலந்துபோகும்படியும்; அரக்கர்கூட்டம் மடியும்படியும்; மாயம் நிரம்பி இருந்ததான கிரெளஞ்ச பர்வதம்—அந்த மாயையோடு—உடைந்து அழியும்படியும் (வீசிய) வேலை, வலிய திருக்கரத்தில் பிடித்தவனே!  தேவலோகத்தின் மீது கருணை செய்தவனே!  முத்தமிழாலே திருத்தமாகப் பாடப்படும் கவிக்கு உரிய (ஒரே) ஒருவனாக விளங்குபவனே!  மைதீட்டிய கண்களை உடைய வள்ளியம்மையை, தினைப்புனங்கள் நிறைந்ததான வள்ளி மலையில் அணைத்தவனே!  கையில் பிடித்திருக்கும் கொடியில் விளங்குவதான சிவந்த சேவல் பெருமிதத்துடன் கூவுவதும்; நீலோற்பலங்கள் மலக்கின்ற சுனைகளை உடையதுமான திருத்தணிகையில் எழுந்தருளியுள்ள பெருமாளே!

சின்னதாகவும் மென்மையாகவும் புன்னகைத்தும்; காண்பார் உள்ளங்களை உருக்கியும்; அவர்களுடைய உள்ளத்திலுள்ள கருத்தை அழித்தும்; கரிய கண்களால் ஜாடை காட்டி அழைத்தும்; தம் வசப்படுத்தியும்; கையிலுள்ள பொருளை மொத்தமாகப் பறிக்கின்ற பொருட்பெண்டிரை நாடிச் சென்றும்; பொய்யாக ஞானியர்போல நடித்தும்; விரிவாகப் பேசியும்; உயர்ந்த ஞானங்களை எடுத்துச் சொல்வதால தனக்கு ஏற்பட்டிருக்கிற புகழைப்போல உலகத்திலே யாருக்குமே இல்லை என்று பகட்டிக்கொண்டும்; இல்லாதனவற்றைப் புனைந்து ஞான மொழிகளைப் போலப் பேசியும்; இமைப் பொழுதில் படுத்து எழுவதைப் போல (பொய் இன்பத்தைத் தந்து கணத்தில் மறைகின்ற இந்தப்) பிறவியைப் பெறலாமோ?  (பெறாதபடி அருள் செய்திடல் வேண்டும்.)


தினந்தோறும் திருப்புகழ் : 388

 பிறவிப் பிணியை அறுக்கக் கோரும் இன்றைய பாடல் திருத்தணித் தலத்துக்கானது. ‘அருக்கி மெத்தெனச் சிரித்து’ என்று இரண்டு பாடல்கள் தொடங்குகின்றன.  இன்றைய பாடல் அவற்றிலொன்று.  மற்றொன்று திருப்படிக்கரைத் தலத்துக்கானது.  ஒன்றேபோலத் தொடங்கினாலும் இரண்டு பாடல்களும் சற்றே வேறுபட்ட சந்த அமைப்பினைக் கொண்டவை.

ஒற்றொழித்து அடிக்கு 28 எழுத்துகளைக் கொண்ட இந்தப் பாடலில் ஒற்றைச் சேர்த்து ஒவ்வொரு சீரிலும் மூன்றாவது எழுத்து வல்லொற்றாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.  இப்பாடலின் இரண்டாமடியிலுள்ள ‘தரிக்கும்வித்’ என்பதிலும்; மூன்றாமடியின் இறுதிப் பகுதியில் உள்ள ‘புரிக்கிரக்கம் வைத்த’ என்பதிலுமுள்ள மெல்லொற்றான ‘ம்’ என்னும் எழுத்து ஒலிக்கப்பெறாது.  முதலடியிலுள்ள ‘பறிப்பவர் கபத்த முற்றுவித்து’ என்பதை ‘பறிப்பவர்(களுடைய) பத்தம் (பந்தம்) உற்று’ எனவும், ‘பறிப்பவர்க்கு (பறிப்பவரை) அபத்தம் உற்று’ என்றும் இரண்டுவிதமாகப் பிரிக்க முடியும்.  இதைப் பொருள் விளக்கத்தின் போது பார்க்கலாம்.  இப்போது பாடலைப் பார்ப்போம்.

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத்        –       தனதான

அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
தழித்தறக் கறுத்தகட் – பயிலாலே
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்
கடுத்தபத் தமுற்றுவித் – தகர்போலத்
தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்
தலத்துமற் றிலைப்பிறர்க் – கெனஞானம்
சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்
சறுக்குமிப் பிறப்புபெற் – றிடலாமோ
பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்
பொருப்பினிற் பெருக்கவுற் – றிடுமாயம்
புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்
புரிக்கிரக் கம்வைத்தபொற் – கதிர்வேலா
திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்
தினைப்புனக் கிரித்தலத் – திடைதோயுஞ்
சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப் – பெருமாளே.


தினந்தோறும் திருப்புகழ் : 387

பகுதி – 387

பதச் சேதம் சொற் பொருள்
சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே ஏய்: பொருந்திய, நிறைந்த; குரம்பை: கூடு—உடல்; கங்கு: கங்கம் என்பதன் சுருக்கம், கழுகு என்பது பொருள்; ஒழியாதே: தீராதே;
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு சேரிடு நரம்பு தான் இவை பொதித்து நிலை காணா தொந்த(ம்): உறவு, சம்பந்தம்; சேரிடு: சேர்ந்திடு;
ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார் பால் ஆயது: ஆனது, அப்படிப்பட்ட அது; ஊசிடும்: ஊசிப்போகின்ற; இடும்பை: துன்பம்; பேணி: போற்றி;
ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே விரக சிங்கி: விரகமாகிய சிங்கி; சிங்கி: விஷம்—உலோக நஞ்சு, lead monoxide இப்படிக் குறிப்பிடப்படுவது வழக்கம்;
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க வாய் பிளிறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே கஞ்சனால்: கம்சனால்; தன்கை: துதிக்கை
வாரி உற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம் வீறொடு: செருக்கோடு; வாரண(ம்): யானை—இங்கு குவலாய பீடமாகிய யானை; கோடு: தந்தம்; நெடியோன்: திருமால்;
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக வேய்: மூங்கில்; வேயின் இசை: புல்லாங்குழலிசை; கோநிரை: பசுக்கூட்டம்; மேயல்புரி: மேய்க்கின்ற; துங்க: தூய;
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே.

சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை… (உடலில் பெருகும்) சீழ், இரத்தம் ஆகியனவற்றில் பொருந்தியுள்ள புழுக்கள் நிறைந்திருப்பதும்; நிலையற்றதும்; மலம், நோய்களுக்கு இருப்பிடமுமான இந்தக் கூட்டை (உடலை);

தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே… தீயும்; நரிகளும்; கழுகுகளும்; காகங்களும் தின்பது முடிவிலாத ஒன்று;

தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த… தீமை உள்ள குணங்களே பெருகுகின்றதும்; மாயையின் சம்பந்தத்துடன் வளர்ந்ததும்;

தோல் தசை எலும்பு சேரிடு நரம்பு தான் இவை பொதிந்து நிலை காணா… தோல், சதை, எலும்பு முதலானவற்றோடு சேர்ந்துள்ள நரம்புகள்—எல்லாமும் பொதிந்திருப்பதும்; நிலைக்க முடியாததும்—

ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு பேணி… ஆன இது (இந்த உடலானது), யமன் கையிலே உயிர் போய்ச் சேர்ந்ததும்; அந்த நாழிகையிலேயே (அப்போதிருந்தே)  பெரிய அளவில் ஊசிப்போகின்ற (கெட்டுப் போகின்ற); துன்பத்தால் ஆகிய இந்த உடலைப் போற்றி;

நிலை என்று மடவார் பால் ஆசையை விரும்பியே… (இவ்வுடல்) நிலையானது என்று நினைத்துக்கொண்டு; பெண்களிடத்திலே ஆசையை வளர்த்துக்கொண்டும்; விரும்பியும்;

விரக சிங்கிதானும் மிக வந்து மேவிட மயங்கும் ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே… காமமாகிய நஞ்சும் வந்து பெரிய அளவில் சேர்வதால் மயங்கிப்போய்; ஆழமான துயரத்தில் விழுந்து மடிபவனான என்மீது அன்புகாட்டி அருளவேண்டும்.

மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க… மாயையில் வல்லவனான கம்சன் அனுப்பியதும்; கோபம் கொண்டு, மொத்த உலகமும் அண்டகேளங்களும் நடுநடுங்கும்படியாக;

வாய் பிளிறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே… வாயால் பிளிறிக்கொண்டும்; மேகத்தைப் போன்ற கரிய துதிக்கையாலே,

வாரி உற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த… அனைத்தையும் வாரிக்கொண்டும்; நெருங்கி வந்தும்; செருக்குடன் முழங்கியும்; நீரைப் பருகியும்; கோபத்துடனும் எதிர்த்து வந்தாகிய,

வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம்… குவலாயபீடம் என்னும் யானையுடைய இரண்டு தந்தங்களையும் ஒடித்து வென்ற நெடியோனும்;

வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக… புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக்கூட்டைக்களைக் காத்தும்; மேய்த்தும் (திரிந்தவனான) சிவந்த கண்களை உடையவனமான திருமாலுடைய மருகனே!

துங்கவேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக வேலை விடு கந்த… பரிசுத்தமான வேலை ஏந்தியவனே! கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகும்படி வேலை எறிந்த கந்தனே!

காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க… காவிரியாற்றின் (கரையிலே) விளங்குவதும்; நீர் நிறைந்ததுமான கலிசை என்னும் தலத்தில் வாழ்கின்ற ‘கலிசைச் சேவகன்’ உன்னை வணங்கிய காரணத்தால்,

வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே.… வீரை என்ற தலத்துக்கு வந்து எழுந்தருளிய பழநியாண்டவனே!  தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

மாயை வல்லவனான கம்சன் ஏவியதும்; கோபத்துடனே; உலகெல்லாமும் அண்டகோளங்களும் நடுங்கும்படியாக பிளிறிக்கொண்டு வந்து; மேகத்தைப் போலக் கரியதான தன்னுடைய துதிக்கையால் அனைத்தையும் வாரிக்கொண்டும்; அனைவரையும் நெருங்கியபடியும்; செருக்கோடு முழங்கியும்; நீரைப் பருகியும்; கோபத்தோடு எதிர்த்தும் வந்ததான குவலாயபீடம் என்னும் யானையுடை இரண்டு தந்தங்களையும் ஒடித்து வென்ற நெடியவனும்; புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக்கூட்டங்களைக் காத்து மேய்த்தவனும்; சிவந்த கண்களை உடையவனுமான திருமாலுடைய மருகனே!  பரிசுத்தமான வேலை ஏந்துபவனே!  கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகுமாறு வேலை வீசியவனே!  காவிரியாற்றங்கரையில் நீரால் சூழப்பெற்று விளங்குகின்ற கலிசை என்னும் தலத்தில் வாழ்ந்த கலிசைச் சேவகன் வேண்டிக்கொண்டதால், வீரை என்ற தலத்துக்கு வந்து எழுந்தருளிய பழநிப் பெருமாளே!  தேவர்கள் தலைவனே!

எங்கும் பெருகும் சீழிலும் ரத்தத்திலும் புழுக்கள் நிறைந்திருப்பதும்; நிலையற்றதும்; மலத்துக்கும் நோய்க்கும் இடமாக விளங்குவதுமான கூடாக உள்ள இந்த உடலை நெருப்பும், நரிகளும் கழுகுகளும் காகங்களும் தின்பது என்பது தீராத ஒன்று.

தீமையான குணங்களே பெருகுவதும்; மாயையின் சம்பந்தமுள்ளதும்; தோல், சதை, எலும்பு, நரம்பு போன்றவை சேர்ந்துள்ளதும்; நிலையற்றதுமான இந்த உடலிலிருந்து உயிர் பிரிந்து யமனுடைய கைக்குப் போன அதே சமயத்திலிந்து கெட்டுப்போகத் தொடங்கும் இந்த உடலைப்போய் நிலையானது என்று கருதிக்கொண்டும்; மங்கையர்கள்மேலே ஆசையை வளர்த்துக்கொண்டும்; விரும்பிக்கொண்டும்; விரகமாகிய விஷம் பெருகுவதால் மயங்கியும்; ஆழமான துயரத்தில் விழுந்தும் மாளுகின்ற என்மீது அன்பு செலுத்தி அருள்புரிய வேண்டும்.

தினந்தோறும் திருப்புகழ் : 386

‘என்னிடத்திலே அன்பு புரிந்தருள வேண்டும்’ என்று இறைவனை வேண்டும் இந்தப் பழநித் திருப்புகழ், அருணகிரிநாதர் பாடிய மூவரில் ஒருவரான கலிசைச் சேவகனாரைப் பற்றிய குறிப்புடன் கூடியது.  வீரை என்னும் தலத்தில் பழநி முருகனை எழுந்தருளச் செய்தவர் இவர் என்றும் அருணகிரியாருடைய நண்பரென்றும் அறிகிறோம்.  கலிசைச் சேவகனாரைக் குறிப்பிட்டுள்ள இன்னொரு பாடலான ‘சீறலசடன்’ என்று தொடங்கும் திருப்புகழை நம்முடைய 308ம் தவணையில் பார்த்தோம்.

இந்தப் பாடலில் கம்சன் அனுப்பிய குவாலயபீடம் என்ற யானையைப் பற்றிய குறிப்பும் வருணனையும் உள்ளன.  திருமாலுடைய கிருஷ்ணாவதாரம் பாடப்படுகின்றது.

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் முதலெழுத்தும் ஏழாவது எழுத்தும் நெடில்; ஒற்று சேர்த்து 6, 13 ஆகிய எழுத்துகள் (ஒவ்வொரு மடக்கிலும்) மெல்லொற்று.

தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த – தனதான

சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு காகமிவை தின்ப – தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து – நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்று – மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு – புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது மண்ட கோளமுந டுங்க
வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை – யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
வாரணஇ ரண்டு கோடொடிய வென்ற – நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து – பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் – பெருமாளே.


தினந்தோறும் திருப்புகழ் : 385

பதச் சேதம் சொற் பொருள்
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய புடை: புடைத்த, பருத்த; செப்பு: சிமிழ்; உள்பொருமி: உள்ளே விம்மி(ப் பருத்து);
புளக களப கெருவ தன மெய் புணர தலை இட்டு அமரே செய் புளகம்: மயிர்க்கூச்சம்; களபம்: (சந்தனக்) கலவை; கெருவ: கர்வ(ம் கொண்டு);
அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான அடைவு: ஒழுக்க முறை; அவசப்படுதல்: வசமிழத்தல்; எற்கு: எனக்கு; பதடி: உமி; அவமான: அவம் ஆன—வீணான;
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே கட: மத்தகம்; கரட: கன்னக் கதுப்பு; கலுழி: மதநீர்; களிறு: விநாயகன்;
குடி புக்கிட மிட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா குடி புக்கிட: குடிபுக; மிட்டு: மீட்டு (குறுக்கல் விகாரம்) தகர: தகர்ந்து போகுமாறு;
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள் படலை: குலையிலுள்ள சீப்பு; செறி: அடர்ந்த; கதலி: வாழை;
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே. பழனக் கரை: வயற்கரை; கழை: மூங்கில் (மூங்கில் முத்து பிறக்கும் இடங்களிலொன்று);

புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமிக் கலசத்து இணையாய புளகக் களபக் கெருவத் தன மெய்ப் புணரத் தலை இட்டு அமரே செய்… பருத்ததும்; சிமிழ்போன்றதும்; முத்து மாலை அணிந்ததும்; கச்சு தெறித்துப் போகும்படியாக விம்மிதம் எய்தியதும்; கலசத்தை ஒத்ததும்; மயிர்க்கூச்சம் கொண்டதும்; சந்தனக் கலவை பூசப்பட்டதுமாக செருக்குற்றுத் திமிர்ந்த மார்பகங்களோடு சேரத் தலைப்பட்டு பூசலிடுகின்ற,

அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே… ஒழுக்கத்தை எப்போதும் மேற்கொண்டு வசமிழந்து மயங்கும் என் மீது; அறிவற்றவனும்; பயனற்றவனுமான எனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாத உன்னுடைய கிருபையைக் கொண்டு, அடிமையாகிய எனக்கு ஒப்பற்ற உபதேசத்தைச் செப்பியருள வேண்டும்.

குடம் ஒத்த கடக் கரடக் கலுழிக் குணம் மெய்க் களிறுக்கு இளையோனே… குடத்தை ஒத்த கன்னக் கதுப்பிலிருந்து மதநீர் பெருகுகின்ற தன்மையையுடைய யானைமுகனான விநாயகனுக்கு இளையவனே!

குடி புக்கிட மி(மீ)ட்டு அசுரப் படையைக் குறுகித் தகரப் பொரும் வேலா… (தேவலோகத்துக்குக்) குடியேறுமாறு (தேவர்களைச் சூரனுடைய சிறையிலிருந்து) மீட்டு, அசுரப்படைகளை நெருங்கி, அவை தகர்ந்துபோகுமாறு போரிட்ட வேலனே!

படலைச் செறி நல் கதலிக் குலையில் பழம் முற்(றி) ஒழுகப் புனல் சேர் நீள் பழனக் கரையில் கழை முத்து உகு நல் பழநிக் குமரப் பெருமாளே.… சீப்புகள் அடர்த்தியாக நிறைந்துள்ள வாழைக் குலை நன்கு கனிந்து அதிலிருந்து தேன் ஒழுக; நீர் நிறைந்த வயற்கரைகளில் மூங்கில்கள் முத்தை உகுக்கின்ற பழநிப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

குடம்போன்ற மத்தகத்திலிருந்தும் கன்னக் கதுப்பிலிருந்தும் மதநீர் பெருகும் இயல்புள்ள களிறான விநாயகனுக்கு இளையவனே!  தேவர்கள் தம்முடைய லோகத்திலே மீண்டும் குடியேறுமாறு அவர்களை அசுரர்களின் சிறையினின்று மீட்டு; அசுரப் படைகள் தகர்ந்துபோகுமாறு போரிட்ட வேலனே!  சீப்புகள் அடர்த்தியாக நெருங்கியுள்ள வாழைக் குலைகள் கனிந்து அவற்றிலிருந்து தேன் ஒழுகுவதும்; நீர் நிறைந்த வயற்கரைகளில் மூங்கில்கள் முத்தை உகுப்பதுமான பழநிப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே!

பருத்ததும்; சிமிழ்போன்றதும்; முத்துமாலை அணிந்ததும்; கச்சு தெறித்துப் போகும்படியாக விம்முவதும்; கலசத்தை ஒத்ததும்; மயிர்க்கூச்சம் கொண்டதும்; சந்தனக் கலவை பூசப்பெற்று செருக்குற்றுத் திமிர்ந்ததுமான மார்பகங்களோடு சேர்வதை எண்ணிப் பூசலிடும் ஒழுக்கத்தையே என்றென்றும் மேற்கொண்டு தன் வசத்தை இழந்து மயங்குபவனும்; அறிவற்றவனும் பயனற்றவனுமான எனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாத உன்னுடை கிருபையை வெளிப்படுத்தி, அடிமையாகிய எனக்கு ஒப்பற்றதான உபதேசத்தைப் புரிந்தருள வேண்டும்.

தினந்தோறும் திருப்புகழ் : 384

பழனித் திருப்புகழான இன்றைய பாடல் உபதேசித்து அருளவேண்டும் என்று இறைவனைக் கோருகிறது.

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்று நீக்கி 22 எழுத்துகள்; தொங்கல் சீரைத் தவிர்த்து மற்ற அனைத்து சீர்களிலும் குறில் பயில்கிறது; ஒற்று சேர்த்தால் ஒவ்வொரு சீரிலும் நான்காவது எழுத்து வல்லின மெய்.  பாடலைப் பார்ப்போம்.

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத்  – தனதான

புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் – திணையாய
புளகக் களபக் கெருவத தனமெய்ப்
புணரத் தலையிட் – டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவி பதடிக் –  கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் – புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் – கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் – பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் – புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் பெருமாளே.

தினந்தோறும் திருப்புகழ் : 383

பதச் சேதம் சொற் பொருள்
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே மயல் பெருக: மயக்கம் பெருக; உரையும் அற: பேச்சும் நின்றுபோக; அனல் அவிய: உடலின் வெப்பம் அடங்கவும்;
அனையு மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே அனையு: அன்னையும்; மனை: மனையாளும்; அருகில் உற: பக்கத்தில் இருந்து; வெருவி அழ: பயந்து அழ; அழலின் நிகர்: நெருப்பை நிகர்த்த; மறலி: யமன்;
செறியும் இரு வினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே செறியும்: நெருங்கும்; இருவினை: நல்வினை, தீவினை; கரணம்: (புலன் என்றும் மனம் என்றும் பொருள்; இங்கே) மனம்; மருவு புலன்: பொருந்தியிருக்கும் ஐம்புலன்களும்;
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே சிவனை நிகர்: சிவனை ஒத்த; பொதியவரை முனிவன்: அகத்தியன்;
நெறி தவறி அலரி மதி நடுவன் மகபதி முளரி நிருதி நிதிபதி கரிய வன மாலி அலரி: சூரியன்; மதி: சந்திரன்; நடுவன்: யமன்; மகபதி: இந்திரன்; முளரி: அக்கினி; நிருதி: தென்மேற்கு திசைக்குரிய திக்கு பாலகன்; நிதிபதி: குபேரன்; கரிய வனமாலி: கரியவனும் துளசிமாலை அணிந்தவனுமான திருமால்;
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசு உரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே நிலவு மறையவன்: பொருந்திய பிரமன்; நிருதன்: அரக்கன், சூரபத்மன்; உரம்: மார்பு; அற: பிளக்க; அயிலை: வேலை;
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே மறி: மான்; பரசு: கோடரி; கரம் இலகு பரமன்: கரத்தில் வைத்துள்ள சிவன்;
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே. மதலை: மரக்கலம்; உததி: கடல்; தரள(ம்): முத்து; புளினம்: மணல் திட்டு, மணல் மேடு;

அறிவழிய மயல் பெருக உரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக…… அறிவு அழியவும்; மயக்கம் பெருகவும்; பேச்சு நின்று போகவும்; கண்கள் சுழலவும்; உடலின் சூடு தணிந்துபோகவும்; மலம், தானாகவே ஒழுகவும்;

அகலாதே அனையுமனை அருகிலுற வெருவியழ உறவுமழ அழலினிகர் மறலி யெனை அழையாதே… அருகிலிருந்து போகாமல் அன்னையும் மனைவியும் பக்கதிலிருந்தபடி பயந்து அழவும்; உறவினரும் அழவும்; நெருப்பை ஒத்தவனான யமன் என்னை அழைத்துச் செல்லாதபடி,

செறியுமிரு வினை கரண மருவுபுலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே… என்னை நெருங்கிருப்பதான நல்வினையும் தீவினையும்; மனமும்; பொருந்தியிருக்கின்ற ஐம்புலன்களும் யாவும் ஒழிந்துபோகும்படியாகவும்; உன்னுடைய உயர்ந்த திருவடிகளை அணுகும்படியாகவும் அடியேனுக்கு வரம் தந்தருள வேண்டும்.

சிவனைநிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே… சிவனை ஒத்தவரான பொதிய மலையைச் சேர்ந்த அகதிய முனிவனுடைய உள்ளம் மகிழும்படியும்; இரண்டு செவிகளும் குளிரும்படியும் இனிய தமிழைச் சொன்னவனே!

நெறிதவறி… அவரவருக்கு உரிய வழியிலிருந்து தவறி,

அலரி மதி நடுவன்…சூரியனும்; சந்திரனும்; யமனும்;

மகபதி முளரி… இந்திரனும்; அக்கினியும்;

நிருதி நிதிபதி… தென்மேற்கு திசையின் காவலனான நிருதியும்; குபேரனும்;

கரிய வனமாலி நிலவுமறையவன் இவர்கள் அலைய… கரிய நிறத்தையுடையவனும் துளசி மாலையை அணிந்திருப்பவனுமான திருமாலும்; பொருந்தியிருக்கும் பிரமனும் ஆகியோர்கள் அலைந்து திரியும்படியாக,

அரசுரிமை புரி நிருதனுரம் அற அயிலை விடுவோனே… ஆட்சி செலுத்திவந்த சூரபத்மனுடைய மார்பு பிளக்கும்படியாக வேலை விடுத்தவனே!

மறிபரசு கரமிலகு பரமனுமை இருவிழியு மகிழமடி மிசை வளரும் இளையோனே… மானையும் கோடரியையும் கரங்களில் ஏந்தியுள்ள பரமசிவனும் உமையம்மையும் தங்கள் விழிகளில் மகிழ்ச்சி பூக்கும்படியாக அவர்களுடை மடியின்மேல் வளர்கின்ற இளைய குமாரனே!

மதலைதவழ் உததியிடை வருதரள மணி புளின மறையவுயர் கரையிலுறை பெருமாளே… மரக்கலங்கள் தவழுகின்ற கடலிலிருந்து வருகின்ற முத்துகள், கரையிலுள்ள பெரிய மணல்மேடுகளை மறைத்து மூடும்படியாக வந்து இறைகின்ற திருச்செந்தூரின் கடற்கரையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

சிவனை ஒத்தவரும் பொதியமலை முனிவருமான அகத்தியரின் உள்ளம் மகிழும்படியாகவும் இரு செவிகளும் குளிர்ச்சியடையும்படியாகவும் இனிய தமிழை ஓதியவனே!  சூரியன், சந்திரன், யமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், துளசி மாலையை அணிந்த கரிய திருமால், பிரமன் இவர்கள் அனைவருமே தத்தமக்குரிய வழிகளைவிட்டு அலைந்து திரியும்படியாக அரசாண்ட சூரனுடைய மார்பைப் பிளப்பதற்காக வேலை வீசியவனே!  மானையும் மழுவையும் (கோடரியையும்) கரங்களில் ஏந்திய பரமசிவனார், உமையம்மை ஆகியோரின் உள்ளம் மகிழும்படியாக அவர்களுடை மடியின்மேல் வளர்கின்ற இளையவனே! மரக்கலங்கள் தவழும் கடலிலிருந்து வருகின்ற முத்துகள், கரையிலுள்ள மணல்மேடுகளை மறைக்கும் வண்ணம் விழுந்து இறைபடுகின்ற திருச்செந்தூர் கடற்கரையில் வீற்றிருருக்கும் பெருமாளே!

அறிவு அழியவும்; மயக்கம் பெருகவும்; பேச்சு அடைத்துப் போகவும்; கண்கள் சுழலவும்; உடலின் வெப்பம் தணியவும்; கட்டுப்பாடில்லாமல் மலம் ஒழுகவும்; தாயும் மனைவியும் அருகிலேயே இருந்தபடி பயத்தால் அழவும்; உறவினர்களும் அழவும்; தீயை ஒத்த எமன் என்னை அழைத்துச் செல்லாதிருக்கவும்; எப்போதும் என்னை நெருங்கியிருக்கும் என் இருவினைப் பயன்களும்; என் மனமும்; பொருந்தியிருப்பதான என் ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியும்;  உனது திருவடியை அணுகவும் எனக்கு வரம் தந்தருள வேண்டும்.

தினந்தோறும் திருப்புகழ் : 382

இறைவனுடைய திருவடியைப் பெறுவதை வரமாகக் கோரும் இப்பாடல் திருச்செந்தூர் தலத்துக்கானது.  தொங்கல் சீரை ஒழித்து மற்ற அனைத்து சீர்களும் குறிலெழுத்தாக அமைந்துள்ளது.  தொங்கல் சீரிலும் ‘பெருமாளே’ அல்லது ‘தம்பிரானே’ என்ற ஈற்றுச் சீர்களின் கடைசி இரண்டெழுத்துகளும் நெடிலாக இருப்பதால் இந்தச் சீர் நெடுகிலும் இதே அமைப்பே வரவேண்டுமென்றாலும், ஈற்றுக் குறில் நெடிலாக ஒலிக்கும் என்பதால் இதற்கு விலக்குண்டு.  மற்ற பாடல்களின் தொங்கல்சீர் அமைப்பை எடுத்துக் கொண்டு ஒன்றொன்றாகப் பார்த்தால் இது விளங்கும்.  ஆனால் இந்தப் பாட்டில் எட்டுத் தொங்கல் சீர்களில் ஏழில் இரண்டு ஈற்றெழுத்துகளும் நெடிலாகவே அமைந்திருக்கிறது.  ‘வனமாலி’ என்ற ஒரே ஒரு சீர் மட்டுமே விலக்கு.  இது ‘வனமாலீ’ என்று ஒலிப்பதைக் காணலாம்.

அடிக்கு 34 எழுத்துகள் உள்ள இப்பாடலில் ஓரிடத்தில் ‘ல்’; இரண்டிடங்களில் ‘ர்’ என இடையின மெய் பயின்றுள்ளது.  இடையின மெய் சந்தத்தைச் சிதைப்பதில்லை என்பதால் இது கணக்கில் வருவதில்லை. ‘நெறிதவறி’ என்று தொடங்கும் மூன்றாமடியில் ‘ன்’ என்ற மெல்லொற்று பயில்கிறது.  ‘இனியதமிழ்’ என்ற சீரில் ஒரு மெல்லொற்று (ழ்) பயில்கிறது.  இவையே விலக்கு.  இவற்றைத் தவிர்த்து பாடல் நெடுகிலும் எந்தவகையான ஒற்றும் பயிலவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன – தனதானா

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக – அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை – யழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர – மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் – பகர்வோனே
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய – வனமாலி
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை – விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு – மிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை – பெருமாளே.