அனுமன்-62 : சால்பின் வரைத்து…

‘எந்தக் கணத்தில் அவன் காட்சிக்குள் வருகின்றானோ, அந்தக் கணம் முதல் வாசகனைத் தன் வசப்படுத்திவிடுகின்றான். இராமனுக்கும், சீதைக்கும் இணையான ஈர்ப்பு அவன்பால் ஏற்படுகிறது. இவனைப் பற்றிய ஒரு முழுமையானதும், போதுமானதுமான மனச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமானால், இராமாயணத்தின் கடைசி மூன்று காண்டங்களையும், தொடக்க முதல் கடைசி வரை கற்றாக வேண்டும்,’ என்பார் வ வே சு ஐயர், அனுமனைக் குறித்து.

முற்றிலும் உண்மை. என் சக்தியற்ற சொற்களால் நான் இந்தத் தொகுப்பில் செய்ய முற்பட்டதும் அதைத்தான்.

கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமன் பிரவேசிக்கும் காட்சி தொடங்கி, சுந்தர காண்டத்தில் ஒரு பகுதியும், யுத்த காண்டத்தில் சில பகுதிகளும் என்று அனுமன் தோன்றும் காட்சிகளில் பலவற்றைக் கண்டோம். இவை முழுமையானவை என்று சொல்ல மாட்டேன். இன்னும் சில பகுதிகளை மற்ற பாத்திரங்களை ஆயும் போது, அவர்களோடு சேர்த்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக விட்டு வைத்திருக்கிறேன். கதையின் நிகழ்வில் கூட, சில காட்சிகளை முன்னும் பின்னுமாகப் போட்டிருக்கிறேன். பாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதற்குத் தேவை என்பதனால். சொன்ன காட்சிகள் கூட, விரிவாக இருப்பதைப் போல் தோன்றினாலும் முழுமையானவை என்று எண்ணிவிட வேண்டாம். என் விவரிப்புக்கு ஏற்ற வகையில் உள்ள சில கவிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை உங்கள் முன் வைத்தேன். அவ்வளவே.

ஐதராபாத் நிஜாமிடமிருந்த முத்துகளை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்தால், நியூயார்க் நகரத்தின் ஒரு வீதி முழுவதையும் மூடும்படியாகப் பாவி விடலாம் என்பார்கள். கம்பனுடைய கவிதைகள் ஏழு ஐதராபாத் நிசு¡ம்களிடமிருந்திருக்கக் கூடிய முத்துகளைக் காட்டிலும் பெரியவை; உருண்டு திரண்டவை. இன்னொரு உபசார வழக்காக, உயர்வு நவிற்சியாகச் சொல்கிறேன் என்று நீங்கள் எண்ண மாட்டீர்கள் என்பதனை. இந்தப் பக்கங்களில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் கம்ப விருத்தங்களே போதுமான சான்றளிக்கும்.

அனுமனை அளக்க இந்தக் காட்சிகள் போதா. அனுமனை அளக்க என் ஆற்றல் போதாது. இந்தச் சக்தியற்ற சொற்களுக்குள் அடங்குபவனல்லன் அனுமன். இருந்த போதிலும், ஓரளவுக்கேனும் நான் கம்பனிலும், வான்மீகத்திலும் கண்ட அவனைக் காட்சிப்படுத்த முடிந்திருந்தால் அது என் பேறு. இரண்டு கவிஞர்களின் பார்வையிலும், சித்திரத்திலும் அவன் எடுத்திருக்கும் வடிவத்தை இந்தப் பக்கங்களில் காட்சிப் படுத்தினோம். ஆயினும், நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் என்று சொல்வதற்கில்லை. சொல்ல முடியாது. அதற்கு இன்னொரு கம்பன் பிறந்தாக வேண்டும்.

இருந்த போதிலும், நிர்வாகவியல், உளவியல் என்று பல துறைகளைச் சார்ந்த பார்வையில் அனுமனைப் பலவிதமான கோணங்களில் பார்த்திருக்கிறோம். ஒளி விடும் பல முகங்களைக் கொண்ட இந்த வைரத்தின் தன்மைகளில் பெரும்பாலானவற்றை, உருப்பெருக்கியின் அடியில் வைத்துப் பார்த்தோம். இனி வரும் ஒவ்வொரு பாத்திரத்தையும் இந்தப் பன்முக, பல கோணப் பார்வைக்கு உட்படுத்தப் போகிறோம்.

இராமாயணத்தின் கடைசியில் இராமன் ஒவ்வொருவருக்கும் விடைகொடுத்து அனுப்பும் காட்சி வான்மீகத்தில் உத்தரகாண்டத்தில் வருகிறது. திருமுடி சூட்டும் – பட்டாபிஷேக – படலத்தில், இராமன் அனைவருக்கும் பரிசுகளை வழங்குகிறான். உத்தர காண்டத்தில், நாற்பதாவது சர்க்கத்தில்தான் விடைகொடுத்து அனுப்பிய விவரங்கள் பேசப்படுகின்றன. கம்பனோ எனில், இராமன் திருமுடி சூடுவதோடு தன் காதையை முடித்துக் கொள்கின்ற காரணத்தால், அடுத்த படலத்திலேயே விடை கொடுத்து அனுப்பும் காட்சிகளைத் தீட்டுகிறான். இந்தத் தருணங்களில் பல இடங்களில் வான்மீகத்தை ஒட்டியே காட்சி அமைக்கிறான்; ஆயினும் ஓரிடத்தில் வான்மீகம் தீட்டும் சித்திரத்தை அப்படியே தலைகீழாக வடித்துக் காட்டுகிறான். அப்படி அவன் மாற்றிய இடம் அனுமன் சம்பந்தப்பட்டது. அனுமனுக்குச் சீதை தந்ததும், அவனுக்கு இராமன் தந்ததும் என்ன என்பதைச் சொல்லும் இடங்களில், சீதை தந்தது எது என்பதை வான்மீகத்தை ஒட்டியும், இராமன் தந்தது எது என்பதை வான்மீகத்தை மாற்றியும் அமைத்தான் கம்பன்.

வான்மீகத்தை ஏன் மாற்றினான், அவ்வாறு மாற்றியதன் காரணம் என்ன, பொருத்தம் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

அனுமனுக்குச் சீதை செய்த சிறப்பை வான்மீகி விவரிக்கும்போது ஓர் அழகான காட்சியைத் தீட்டுகிறார்.

இராமன் முடி சூடும் சமயத்தில் நிகழ்கிறது இது.

இராமன் சற்று நேரத்துக்கு முன்னால்தான் சானகிக்கு ஒரு முத்து மாலையை அணிவித்திருக்கிறான். அந்த மாலையைக் கைகளால் நெருடியவண்ணம் காட்சியளிக்கிறாள் வைதேகி.

அவேக்ஷமாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸ¥னவே அவமுச்யாத்மனஹ கண்டாத்தாரம் ஜனகநந்தினி

அவைக்ஷத ஹரீன் ஸர்வான் பர்த்தாரம் ச முஹ¤ர்முஹ¤ஹ¤ தாமிங்திதக்னஹ ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜனகாத்மஜாம்

ப்ரதேஹி ஸ¤பகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி அத ஸா வாயுபுத்ராய தம் ஹாரமஸிதேக்ஷணா

தேஜோ த்ருதிர்யஷோ தாக்ஷ்யம் ஸாமர்த்யம் விநயோ நயஹ பெளருஷம் விக்ரமோ புத்திர்ய யஸ்மின்னே தானி நித்யதா

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 128, சுலோகம் 79-82)

அனுமன் தங்களுக்கு ஆற்றிய விலை மதிப்பிட முடியாத சேவைகளை எண்ணிய ஜனக புத்ரி, தன் கணவன் தனக்கு அணிவித்த முத்துமாலையைக் கழற்றி(க் கையில் வைப்பதா)னாள். (அவ்வாறு அந்த மாலையைக் கையில் வைத்தபடி) மீண்டும் மீண்டும் கூடியிருக்கும் வானரர்களைப் பார்ப்பதும், இராமனைப் பார்ப்பதுமாக நின்றாள். இராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். ஒருவரின் செயல்களைக் கொண்டு அவரின் உள்ளத்தை அளப்பதில் வல்லவனான அவன், ‘யாருக்கு இதனை அளிக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவருக்கே சந்தோஷமாகக் கொடு,’ என்று அவளிடம் சொன்னான். கரிய விழிகளைக் கொண்ட அவள், சக்தியும், உறுதியும், புகழும், திறமையும், தகுதியும், அடக்கமும், முன்னறிவும், வீர்யமும், வீரமும், விவேகமும் யாரிடத்தில் எப்போதும் ஒன்றாக உறைந்துளவோ, அந்த வாயு புத்திரனுக்கே அந்த முத்து மாலையை அணிவித்தாள்.

கம்பன் இந்தக் காட்சியை அப்படியே சுருக்கமாகப் படம் பிடிக்கிறான், ஒரே ஒரு விருத்த அளவில்.

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க, பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே.

தாமரைப் பூ ஆசனத்தை விட்டுவிட்டு, பொன்னால் பொதியப்பட்ட மதில்களை உடைய மிதிலை நகரத்தில் வந்து பூத்தவளான மைதிலியை இராமன் தன்னுடைய அருள் ததும்பும் முகத்தால் நோக்கினான். மறைகளுக்கு உரியவளான கலைமகள் தந்தான, பெரிய முத்துகள் கோக்கப்பட்ட மாலையைக் கையில் எடுத்து, அவள் மிக்க இன்பத்தை அடைந்தவளாகி, அந்தநாளில் தன் துன்பங்களை அறிந்து உதவிய அனுமனுக்கு அளித்தாள்.

இந்த இரண்டு கவிஞர்கள் தீட்டும் காட்சி எப்படி ஒத்துப் போகிறது என்பதைப் பாருங்கள். கம்பன் சொல்லியிருப்பது அப்படியே வான்மீகக் காட்சியைத்தான். சுருக்கமாக இருக்கிறது.

ஆனால், விடை கொடுத்த படலத்தில், அனுமனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் இராமனுடைய சொல்லையும் செயலையும் உத்தரகாண்டத்தில் வான்மீகி இவ்வாறு சொல்கிறார்:

ஏவம் ப்ருவாணம் ராமஸ்து ஹநூமந்தம் வராஸநாத் உத்தாய ஸஸ்வஜே ஸ்நேஹாத் வாக்யமேத துவாச ஹ

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 20 – 24)

(‘உன்பால் எனக்குள்ள பேரன்பு என்றென்றும் நிற்கட்டும். உன்பால் எனக்குள்ள விசுவாசம் எப்போதும் நிலைக்கட்டும்.

உன்மீது எனக்கள்ள பிரேமை வேறு எந்தப் பக்கத்திலும் சிதறாமல் இருக்கட்டும். தேவதைகள் எல்லாம் எனக்கு உன் காதையைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் அதனைக் கேட்டபடியே, காற்றால் சிதறுண்ணும் மேகங்களைப் போல், (உன்னைப் பிரிந்திருக்கும்) என்னுடைய ஏக்கமெல்லாம் (உன் காதையால்) சிதறுண்டு போகட்டும்’ என்றெல்லாம் வேண்டிய அனுமனுடைய பேச்சைக் கேட்ட இராமன்,)

தன் சிறந்த ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அன்புடன் அனுமனைத் தழுவினான். தழுவியவாறு இதனைச் சொன்னான் என்று (பெரியோர்) சொல்கின்றனர்.

யாரை யார் தழுவினார்கள்? இராமன், அனுமனைத் தழுவினான் என்கிறார் வால்மீகி. இந்த உத்தர காண்ட நிகழ்வை, மேற்படி ‘முத்து மாலையைத் தரும் சீதையின்’ காட்சிக்கு இரண்டு விருத்தங்களுக்கு முன்னால் அமைத்தான் கம்பன். Master stroke எந்த இடத்தில் விழுகிறது என்பதைக் கவனியுங்கள்.

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, ‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான்.

இராமன், மாருதியை மகிழ்ச்சியோடும், அருள் நிறைந்த கண்களோடும் நோக்கினான். ‘நீ செய்திருக்கும் உதவிகளை வேறு யார் செய்திருக்க முடியும்? நீ செய்திருக்கும் உதவிகளுக்குப் பிரதியாக, ஈடாக, பதிலாக, நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் எதுவும் இல்லை. அழகிய ஆபரணங்களை அணிந்த, என் போரின்போது (கூட இருந்தும், என்னுடன் நின்று போரிட்டும், என்னைச் சுமந்தும்) உதவிய பெருந்தோள்களை உடையவனே, நீ என்னைத் தழுவிக்கொள்வாயாக.

என்ன சொல்கிறான்! ‘பொருந்துறப் புல்லுக!’ ‘என்னை நீ தழுவிக் கொள்!’ வால்மீகி தீட்டிய சித்திரத்துக்கு அப்படியே தலைகீழான சித்திரம். ‘இராமன் அனுமனைத் தழுவிக்கொண்டான்,’ என்று வான்மீகம் சொல்வதை மேலே கண்டோம். பின் ஏன் கம்பன் இப்படிக் காட்சியை மாற்றினான்! இதில் ஒரு குறிப்பு இருக்கிறது. அங்கே சொல்லியிருக்கிறான் பாருங்கள், ‘அன்று செய்த பேருதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை,’ என்று, அதைக் கொஞ்சம் விரித்துப் பார்க்க வேண்டும்.

‘நீ எனக்கச் செய்த உதவிகளுக்குப் பிரதியாக நான் உனக்கு ஏதாவது அளிக்கலாம் என்றால், எதுவுமே அவற்குக்கு ஈடாகா. இந்த நிலையில் நான் எதைத் தந்தாலும், அது உன்னுடைய உதவிகளைக் குறைத்து மதிப்பிடுவதாகும்.

சரி, வேண்டாம். பொருளாக இல்லாவிட்டாலும், செயலாகவாவது உனக்கு நான் ஏதாவது செய்யலாம் என்றால், நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை. ‘யான் செய் செயல் பிறிது இல்லை.’ நான் உனக்குச் செய்யக் கூடிய (உதவிகரமான) செயல் என்று எதுவுமே இல்லை. ஆகவே, நீ என்னைத் தழுவு.

இந்த, ‘நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை,’ என்பதற்கான விளக்கத்துக்கு நாம் வான்மீகத்துக்குத்தான் போக வேண்டும். மேலே நாம் காட்டியுள்ள இருபதாம் சுலோகத்தை அடுத்து வரும் நான்கு சுலோகங்கள் இவை.

ஏவமேதத் கபிஸ்ரேஷ்ட பவிதா நாத்ர ஸம்ஷயஹ சரிஷ்யதி கதா யாவதேஷா லோகே ச மாமிகா

தாவத்தே பவிதா கீர்த்திஹி ஷரீரேங்ப்ய ஸவஸ்ததா லோகாஹி யாவத்ஸ்தாஸ்யந்தி தாவத் ஸ்தாஸ்யந்தி மே கதாஹ

ஏகைகஸ்யோபகாரஸ்ய ப்ராணான் தாஸ்யாமி தே கபே ஷேஷஸ்யேஹோபகாரணாம் பவாம் த்ரிணினோ வயம்

மதக்னே ஜீரணதாம் யாது யத் த்வயோபக்ருதம் கபே நரஹ ப்ரத்யுபகாராணாமாபத்ஸ்வாயதி பாத்ரதாம்

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 21 – 24)

வானரரில் சிறந்தவனே! நீ நினைத்தபடியே நடப்பதாக. அப்படியே நடக்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த உலகில் என் காதை வழங்கிவருமளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும். என் காதை உலகுள்ள அளவும் இருக்கும்.

நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளில் ஒன்றே ஒன்றுக்குப் பிரதியாக ஏதேனும் தரவேண்டுமாயின் என் உயிரைத்தான் தரவேண்டியதிருக்கும். அப்படியே தந்தாலும், நீ செய்திருக்கும் மற்ற உதவிகளுக்கு எதுவும் ஈடாகத் தரமுடியாத கடனாளியாகவே நான் இருப்பேன். எனவே, உனக்கு என் இதயம் என்றென்றும் கடனாளியாகவே இருக்கட்டும். உனக்கு நான் எதையும் திரும்பச் செய்யும் நிலை தோன்றாமலே போகட்டும். (ஏனெனில், என் உதவி யாருக்குத் தேவைப்படும்? துன்பத்தில் ஆழ்பவனுக்கு. நீயோ துன்பங்களே என்றென்றும் நெருங்க ஒண்ணாதவன். உனக்கு நான் எந்தக் காலத்தில், எப்போது, என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே, நான் உனக்கு என்றென்றும் கடன்பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.)

இந்தப் பின்னணியில், கம்பனுடைய வாக்குக்குத் திரும்புவோம். இப்போது அனுமனை, இராமன் தழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அனுமனுடைய தராசு என்ன சொல்லும்? ‘உன் திருமேனியைத் தழுவுகின்ற பேறு ஒன்றே நான் செய்த(தாக நீ எண்ணும் – நான் அவ்வாறு எண்ணவில்லை) எல்லா உதவிகளுக்கும் ஈடாகிவிட்டதே! அதற்கும் மேலானது அல்லவா என்னை நீ பொருந்தத் தழுவியது!’ என்றல்லவா அனுமனுடைய பார்வை பேசும்? அதனால்தான், அந்தக் கடன் என்றென்றும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதனால்தான், இராமன், ‘நீ என்னைத் தழுவிக்கொள்,’ என்றான். இப்போது இராமனுடைய கடன் சுமைதான் ஏறுகிறதே தவிர, அவன் எதையும் திரும்பச் செலுத்தவில்லை.

‘கொடுப்பதற்குப் பொருளும் இல்லை, செய்வதற்குச் செயலும் இல்லை,’ என்றான பிறகு, தன் மேனியைத் தீண்டுதல் அடியவனால் எப்படிக் கொள்ளப்படுமோ, அந்தக் கணக்கின்படி கூட, ‘கணக்கு நேராகிவிட்டது,’ என்று யாராலும், எப்போதும் சொல்ல முடியாத ஒரு சித்திரம். நேர்த்தி என்றால் அது கம்பன்.

‘பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்’

என்று இராம-அனும முதல் சந்திப்பின்போது, அனுமன் தன்னுடைய பேருருவை எடுத்து நிற்கும் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பான் கம்பன். ‘பொன் மலையாகிய மேரு மலை, தன்னுடைய தோளுக்குக் கூட உவமையாகச் சொல்லப்படப் போதுமாயிராத அளவுடைய தன் பேருருவை எடுத்து நின்றான், தருமத்தின் தனிமையைத் தீர்ப்பதற்காக வந்தவனான அனுமன்.’

‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்,’ என்ற தொடரைப் பாருங்கள். பின்பற்றுவதற்கு யாருமே இல்லாமல், தன்னந் தனியே, கேட்பாரின்றி, நாடுவாரின்றிக் கிடந்ததான தருமம் தனிமையில் வாட விடாமல், அதனைப் பின்பற்றுவார் பல்கிப் பெருகுவதற்காகத் தோன்றியவனான அனுமன். என்ன பொருத்தமான சொற்கள்!

அயோத்தியின் அரியணையைத் தாங்கியவன் அனுமன். ‘அரியணை அனுமன் தாங்க,’ என்றுதான் இராமன் திருமுடி சூடும் காட்சியைச் சொல்லும் விருத்தம் தொடங்குகிறது. இராமன் திருமஞ்சனமாட ‘நான்கு கடல்களிலிருந்தும், ஏழு வகையான நதிகளிலிருந்தும்’ நீர் கொண்டு வந்தவன் அனுமன். ‘என்னை நீ தழுவுக,’ என்று இராமன் சொன்னதும், தன் நாயகன் தனக்குச் செய்கின்ற சிறப்பின் பெருமையை நன்குணர்ந்தவனான அனுமன் என்ன செய்தான்?

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி, பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும், வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான்.

இராமன் அவ்வாறு சொன்னது, வணங்கினான். வெட்கப்பட்டான். கை கொண்டு வாயை மூடியபடி, அவ்வளவு பெரிய சேனைக்கு முன்னால், பணிவோடு, தலை கவிழந்து நின்ற ஆற்றல் மிக்கவனை தலையோடு கால் முற்றும் நோக்கி, அவனுக்கு அணிகலன்களையும், ஆடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் வழங்கினான். (பதில் உதவியாக அன்று. பரிவின் காரணமாக.)

தன்னைத் தழுவுமாறு இராமன், தன்னைச் சொன்னதே அனுமனுக்குப் பேருவகையைத் தந்தது. ஏனெனில்,

உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவு, மதிப்பு, செய்யப்பட்ட செயலின் அளவையோ, கொடுக்கப்பட்ட தொகையின் அளவையோ வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. யாருக்கு அது செய்யப்பட்டதோ, அவருடை மன நிறைவின் அளவுதான் அந்த உதவியின் அளவைத் தீர்மானிக்கிறது.

அனுமன் தோன்றுகிற முதற் காட்சியிலிருந்து, கடைசிக் காட்சி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் தோன்றுவதையும், ஒவ்வொன்றும் தோன்றத் தோன்ற வெகு எளிதாக ஒவ்வொன்றையும் அனுமன் தீர்த்து வைப்பதையும் கண்டோம். தன்னுடைய ஆற்றல் தன் தலைவனால் போற்றப்பட்ட சமயம் ஒவ்வொன்றிலும் அவன் நாணம்கொண்டு நிற்பதையே காண்கிறோம்.

ஆண்டவனைத் தழுவியபடி அடியவன் நிற்கட்டும். நாம் அவர்களைப் பார்த்தபடி, அடுத்த பாத்திரத்தை நோக்கிப் பயணிப்போம்.

(அனுமன் முற்றும்.)

அனுமன்-61 : செய்யாமை செய்யாமை நன்று

பலத்திலும், போர்த் திறத்திலும் – பலத்திலும், போர்த் திறத்திலும் மட்டுமே – அனுமனுக்கு இணையானவர்கள் என்றால், இராவணனையும், கும்பகர்ணனையும் குறிப்பிடலாம். இந்த இருவரோடு போர்புரியும்போது, ‘இதற்கு நீ ஆற்றுவாயாகில் நான் உன்னோடு இதற்குமேல் போர்புரியேன்,’ என்று அனுமன் உரைப்பதையும், அனுமனால் அவர்களும், அவர்களால் அனுமனும் நிலைகுலைந்து போவதையும், அதன்பின்னர் அனுமன் அவர்களைத் தவிர்ப்பதையும் இரண்டு கவிஞர்களுமே சொல்கிறார்கள். இராவணனோடு அனுமன் துவந்த யுத்தம் செய்த காட்சியையும் ‘உன்னோடு இனிப் போர் செய்யேன்,’ என்று மாருதி அகன்றதையும் முன்னர் கண்டோம். (அனுமன் 24, 25: குரக்குக் கைக் குத்து)

கும்பகன்னனோடு நிகழ்ந்த போரிலும் இப்படி ஒரு காட்சியை அமைக்கிறார்கள் இரண்டு கவிஞர்களும். வான்மீகத்தில் கும்பகர்ணனோடு நிகழும் போரைக் குறித்த சித்திரம் அளவில், கம்பனுடைய சித்திரத்தைப் பார்க்கிலும் சிறியது. கம்பனுடைய சித்திரம் விரிவானது என்றாலும், அடிப்படையில் வான்மீகத்தை அடியற்றியதுதான்.

கும்பகன்னனோடு அங்கதன் நிகழ்த்திய போரில், கும்பகன்னன் கையே ஓங்கி நிற்க அனுமன் ஒரு மலையைப் பறித்தெடுத்தவாறு அவன் முன்னே தோன்றினான்.

‘எறிகுவென் இதனை நின்மேல்; இமைப்புறும் அளவில் ஆற்றல் மறிகுவது அன்றி, வல்லை மாற்றினை என்னின், வன்மை அறிகுவர் எவரும்; பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்; பிறிகுவென்; உலகில், வல்லோய்! பெரும் புகழ் பெறுதி’ என்றான்.

‘இதோ இந்த மலையை உன் மீது எறியப் போகிறேன். கண்ணிமைக்கும் நேரத்தில் உன் ஆற்றல் அழியப் போகிறது. அவ்வாறு அழியாமல் நீ இந்த மலையை, விரைவாகத் தடுத்துவிட்டாய் என்றால், உன் வல்லமை என்ன என்பதை அனைவரும் அறிந்துகொள்வார்கள். அதன் பிறகு நான் உன்னோடு போர் புரிய மாட்டேன். நீ மட்டும் இதைத் தடுத்து நிறுத்திவிட்டால், உனக்குப் பெரும் புகழ் உண்டாவதாக!’ என்றவாறு அனுமன் தான் பறித்தெடுத்த மலையை எறிந்தான். கும்பகன்னனோ, ‘கார்உதிர் வயிரக் குன்றைக் காத்திலன் தோள்மேல் ஏற்றான்,’ சூழ்ந்திருந்த மேகங்கள் உதிருமாறு தன்னை நோக்கி எறியப்பட்ட குன்றத்தைத் தடுக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை; மாறாகத் தன் தோள் மேல் ஏற்றான். ‘ஓர்உதிர் நூறு கூறாய் உக்கது எவ்வுலகும் உட்க,’ அப்படி அவன் தோளின் மீது (அனுமனால் எறியப்பட்ட முழு விசையோடு) பட்ட காரணத்தால், பல நூறு துண்டுகளாக அந்த மலைதான் சிதறி விழுந்தது. கும்பகன்னனுக்கு ஒன்றும் நேரவில்லை.

இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து, ‘இவனது ஆற்றல் அளக்குறற்பாலும் ஆகா; குலவரை அமரின் ஆற்றா; துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி பிளக்குமேல், பிளக்கும்’ என்னா, மாருதி பெயர்ந்து போனான்.

அப்படிப்பட்ட பெரிய மலையால் தாக்கப்பட்டும், சற்றும் தளர்ச்சியின்றி நின்ற தன்மையைப் பார்த்து, ‘இவனுடைய வலிமை இவ்வளவு என்று அளவிட்டுக் கூற ஒண்ணாதது. எட்டு திக்குகளையும் தாங்கும் மலைகளும் இவனுடைய வலிமைக்கு ஈடாக மாட்டா. இவன் யாராலும் அசைக்கக் கூடியவன் அல்லன். இவனைப் பிளப்பதானால், அது அழகிய தோள்களை உடைய இராமனுடைய அம்பு ஒன்றால் மட்டும்தான் கூடும்,’ என்றவாறு மாருதி அந்த இடத்தை விட்டு நீங்கினான்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, கும்பகன்னனோடு நேரடிப் போரில் அனுமன் ஈடுபடவில்லை.

வான்மீகி, சற்று வேறுபட்ட, ஆனால் இருவரும் சமமான வலிமைகொண்டவர்கள் என்பதான ஒரு சித்திரத்தைத் தீட்டுகிறார்.

ஸ கும்பகர்ண குபிதோ ஜகான வேகேன சைலோத்தம பீமகாயம் ஸஞ்சுக்ஷ¤பே தேன ததாபிபூதோ மேதார்த்ர காத்ரோ ருதிராவஸிக்த

ஸ ஷ¥லமாவித்ய தடித்ப்ரகாஷம் கிரி யதா ப்ரஜ்வலிதாக்னி ஷ்ருங்கம் பாஹ்யந்தரே மாருதி மாஜகான குஹோஞ்சலம் க்ரெளஞ்மிவோக்ர ஷக்த்யா

ஸ ஷ¥லநிர்ப்பின்ன மஹாபுஜாந்தரஹ ப்ரவிஹ்வலஹ ஷோணிதமுத்தமன் முகாத் நநாத பீமம் ஹனுமான் மஹாஹவே யுகாந்தமேகஸ்த நிதஸ்வனோ பமம்

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 67, சுலோகம் 18, 19, 20)

கோபம் கொண்ட அனுமன், மலைகளில் மிகச் சிறந்த மலையை ஒத்த திடமானதும், அஞ்சத்தக்கதுமான உடலைக் கொண்டவனான கும்பகர்ணனைக் குத்தினான். அந்தக் குத்தின் வேகத்தைத் தாங்க ஒண்ணாது கும்பகர்ணன் தடுமாறினான்.

(குத்திய வேகத்தால் வெளியே தெறித்த) குருதியும், கொழுப்பும் அவனை நனைத்தன. (ஆனால் உடனே சுதாரித்துக்கொண்ட அவன்) நெருப்பை மகுடமாகச் சூடிய மலையைப் போல், (மின்னலைப் போன்று பளிச்சிடும்) தன்னுடைய சூலத்தை எடுத்துக்கொண்டு அனுமனை அவனுடைய கரங்களுக்கிடையில் (நெஞ்சில்) முருகக் கடவுள், கிரவுஞ்ச பர்வதத்தைத் தாக்கியது போலத் தாக்கினான். அந்தத் தாக்குதலின் வேகத்தால் அனுமன் தடுமாறிப் போனான்; வாய்வழியாகக் குருதி கக்கினான். ஊழிக்காலத்தில் தோன்றும் மேகக் கூட்டங்கள் எழுப்பும் இடிகளை ஒத்த பெருங்குரலில் அரற்றினான்.

இந்தக் காட்சியை ஏன் குறிப்பிட்டேன் என்றால், கும்பகன்னனுடைய வலிமை அப்படிப்பட்டது. திருமாலின் வாயிற்காவலர்களான ஜெய-விஜயர்கள், அவர்கள் பெற்ற சாபத்தின் காரணமாகத் திருமாலின் பகைவர்களாக மூன்று பிறவிகள் எடுத்தார்கள் என்பது புராணம். இரணியன்-இரணியாட்சனாக முதற் பிறப்பும், இராவணன்-கும்பகன்னனாக இரண்டாவது பிறப்பும், கம்சன்-சிசுபாலனாக மூன்றாவது பிறப்பும் எடுத்தார்கள் என்றொரு செய்தி உண்டு. பாரதக் கதையைப் பாடும்போது வில்லி, சிசுபாலன் வதையைச் சொல்லும்போது இந்தக் கதையைச் சொல்கிறார்:

அரக்கர்தம் குலத்துக்கு அதிபதியாகி, யாண்டுபோய் மீண்டும் அங்குரித்துத் தருக்கடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும் தமையனும் ஆனார் சிரக்குலையுடனே புயவரை திரையும் சிந்தஅச் சிந்துவின் இடையே சரக்குவை சொரிந்தான் அமலன் அவ்வுகத்துத் தசரதன் தன்வயிற் றுதித்தே.

மீண்டும் அவர்கள் இருவரும் அரக்கர் கூட்டத்திற்குத் தலைவர்களாய், தம்பியான கும்பகன்னனும், அண்ணனான இராவணனுமாகப் பிறந்தார்கள். அந்த (திரேதா) யுகத்தில் தசரதனுடைய மகனாக அவதாரம் செய்த திருமால் அவர்கள் இருவரையும் தன் சரங்களின் குவையால், தலைகளும் தோள்களும் அறுந்து விழுமாறு செய்தான்.

கம்பன் இன்னொன்றும் சொல்கிறான். கும்பகன்னன் வதைக்குப் பிறகு, இராவணனுடைய இன்னொரு மகனான அதிகாயன் போர்க்களத்துக்கு வரும்போது, அவனுடைய வரலாற்றை வீடணன் எடுத்துச் சொல்லும்போது இந்தக் குறிப்பு வருகிறது.

‘விதியால், இவ் உகம்தனில், மெய் வலியால் மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்; கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல் அதிகாயன்; இது ஆக அறைந்தனெனால்.’

‘ஆதியில், அரக்க இனத்தின் தொடக்கமாகப் படைக்கப்பட்ட மது, கைடபர் என்ற இரு அரக்கர்களில் மது, கும்பகன்னனாகவும், கைடவன் அதிகாயனாகவும் பிறந்தனர். அவர்களுள், என் முன்னவனான கும்பகன்னன் (மது) விதிப்படி இறந்துபட்டான். இதோ, கைடவனின் மறுபிறப்பான அதிகாயன் வந்திருக்கிறான்.’

எனவே, எந்தக் கதையின்படி பார்த்தாலும், இராமன் ஒருவனால் அன்றி, வேறெவராலும் கொல்லப்பட முடியாதவர்களாக நின்றவர்கள் இராவணனும், கும்பகன்னனும். அப்படிப்பட்ட கும்பகன்னனோடு போர் மலைந்தான் மாருதி; ‘இனி உன்னோடு பொருவதில்லை,’ என்று விலகியும் சென்றான்.

ஆனால் சுக்ரீவன் கும்பகன்னனை விடுவதாக இல்லை. மாருதி விலகிய பிறகு, கும்பகன்னனைச் சுக்ரீவன் எதிர்த்தான். இரண்டு பேருக்கும் இடையே நிகழ்ந்த கடுமையான போரில், மலைகளைப் பறித்துப் பறித்துக் கும்பகன்னன் மீது சுக்ரீவன் எறிய எறிய, கும்பகன்னன் சிரிக்கிறான். ‘ஏற்று ஒரு கையினால், இதுகொல் நீஅடா, ஆற்றிய குன்றம் என்று,’ சுக்ரீவன் வீசிய மலையை (அது வான்வழி வந்துகொண்டிருக்கும் போதே) கையினால் பற்றி, ‘இதுதானே நீ வீசிய குன்று,’ என்று சிரித்தவாறு, ‘அளவில் ஆற்றலான்,’ அளவில்லாத ஆற்றலோடு, ‘நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து நீங்கெனா நூற்றினான்,’ கையால் (அந்த மலையை) மணலாகப் போகும் வண்ணம் பிசைந்து, (காற்றில் கலக்குமாறு) ஊதி விட்டான்.

அடுத்தது என்ன செய்யலாம் என்று சுக்ரீவன் சிந்திக்கும் நேரத்தில், சுக்ரீவன் மீது தன் மிகச் சிறந்த சூலத்தை எறிந்தான் கும்பகன்னன். பார்த்தவர்கள் எல்லாம் பதறுகிறார்கள். இந்தப் போரை, அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மாருதி குறுக்கே புகுந்தான்.

‘பட்டனன் பட்டனன்’ என்று, பார்த்தவர் விட்டு உலம்பிட, நெடு விசும்பில் சேறலும்,

கும்பகன்னனின் தவறாத சூலம் பாய்ந்து வருவதைப் பார்த்த அனைவரும் பதறினார்கள். ‘ஐயோ! சுக்ரீவன் அழிந்தான்,’ என்று வாய்விட்டு அலறினார்கள். (கும்பகன்னன் எறிந்த சூலம்) வான் வழி வந்துகொண்டிருக்கும்போதே,

தத் கும்பகர்ணஸ்ய புஜ ப்ரணுன்னம் ஷ¥லம் ஷிதம் காஞ்சனதாம யஷ்டிம் க்ஷ¢ப்ரம் ஸமுத்பத்ய நிக்ருஹ்ய தோப்ரியா பபஞ்ச வேகேன ஸ¤தோங்நிலஸ்ய (வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 67, சுலோகம் 62)

பொன்னாபரணங்களால் பொலிந்த கும்பகர்ணனின் வலிய கரம் வீசிய சூலத்தை (உடனடியாகத்) தாவி, எட்டிப் பிடித்த மாருதி, அதனை மிக்க வேகத்துடன் முறித்துப் போட்டான்.

எட்டினன் அது பிடித்து, இறுத்து நீக்கினான்; ஒட்டுமோ, மாருதி, அறத்தை ஓம்புவான்?

அந்தச் சூலத்தை உடனடியாகப் பற்றினான். முறித்துப் போட்டான். மாருதி தருமத்தைக் காப்பன் அல்லனா? சொன்ன சொல்லை மீறி ஒன்று செய்வானா? அவன் கும்பகன்னனை எதிர்க்கவில்லை. சுக்ரீவனை அபாயம் நேரும் முன்னர் காத்தான்.

இரண்டு கவிஞர்கள் சொல்வதும் ஒன்றேதான். இரண்டு பேரும் சற்றே வேறுபட்ட விதங்களில் சித்திரம் தீட்டியிருந்தாலும், சொல்ல வரும் வார்த்தை ஒன்றுதான். சத்தியம் தவறாதவன் ஆஞ்சநேயன்.

சுக்ரீவனோடு நடைபெற்ற போர் வலுக்க, வலுக்க, ஒரு கட்டத்தில் சுக்ரீவன் மயங்கிச் சரிந்தான். ‘தலைவனைச் சிறைப்பிடித்துவிட்டால், மொத்த சைனியமும் நிலை குலைந்து போகும்,’ என்றெண்ணிய கும்பகன்னன் அவனை எடுத்து, கக்கத்தில் இடுக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு, நகரத்தை நோக்கிச் செல்வதானான். இப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில், தன் உயிர் நண்பனை, ‘காற்றும், நெருப்புமாய்க் கலந்து விளையாடி வளர்ந்தவனை,’ கண்ணெதிரில் பகைவன் தூக்கிச் செல்லவும், அந்தப் பகைவனைத் தடுக்கவோ, எதிர்க்கவோ இயலாதபடி, தான் சற்று முன்னே செய்த சபதம் வந்து வழி மறிக்கவும் ‘இன்ன வழியை மேற்கொண்டு இவனைத் தடுக்கலாம்,’ என்று அறியாதவனாகிப் போனான் அனுமன்.

‘ஒருங்கு அமர் புரிகிலேன், உன்னொடு யான்’ என, நெருங்கிய உரையினை நினைந்து, நேர்கிலன், கருங் கடல் கடந்த அக் காலன், காலன் வாழ் பெருங் கரம் பிசைந்து, அவன் பின்பு சென்றனன்.

கரிய கடலைத் தாண்டிய கால்களை உடைய அந்த அனுமன், ‘உன்னோடு நான் இனிமேல் போர் புரிய மாட்டேன்,’ என்று சற்று முன்னே சொன்ன சொற்களை நினைத்தவாறு, எமன் வாழ்வதான தன் இருகரங்களையும் (செய்வதறியாமல்) பிசைந்தவண்ணம் (சுக்ரீவனைக் கக்கத்தில் இடுக்கியவாறு செல்லும்) கும்பகன்னனின் பின்னே செல்வதானான்.

‘நான் இப்போது பேருருக் கொண்டு இந்தக் கும்பகர்ணனைக் கொல்லவா? என் கைக் குத்தில் இவன் இறந்துபட்டால், சுக்ரீவனும் விடுவிக்கப்படுவான்; மற்றெல்லா வானரரும் மகிழ்வர்,’ என்று ஒரு கணமும், ‘இல்லை. நான் அவ்வாறு செய்ய வேண்டாம். சுக்ரீவன் தன்னைத் தானே விடுவித்துக்கொள்வான். (எதிரியின் கையிலிருந்து அவனை நான் காத்ததாக ஆகக் கூடாது. அவனுடைய ஆற்றலை அவன் காட்டி மீளட்டும்.) அதுவரையில் நான், சிதறிக் கிடக்கும் இந்தச் சேனையை ஒழுங்குபடுத்துகிறேன்,’ என்று இந்தத் தருணத்தில் அடுத்த செயலில் இறங்கினான்,’ என்று வால்மீகி குறிப்பிடுகிறார். (வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 67, சுலோகம் 72-80)

இக்கட்டான இந்தக் கணத்திலும், தான் சொன்ன சொல்லின்படி நிற்க வேண்டிய கட்டாயத்தை மேற்கொண்டு, வாய்மையைக் காத்த வல்லவனாக எழுகிறான் அனுமன்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று

என்றாரல்லவா தேவர்? எந்தத் தருணத்திலும் பொய்யாமை பொய்த்துப் போகாத வண்ணம், (வாய்மை தவறாமல்) நின்றால், வேறு எந்த அறத்தையும் செய்ய வேண்டியதே இல்லை. ஏனெனில் வாய்மையே பெரிய அறம்.

தன்னைக் காத்தவர்களை அறம், தான் காக்கும் என்பார்கள். அனுமன் தவறவிடாத வாய்மை, அவனைத் தவறவிடவில்லை. இந்தத் தருணத்தில்தான் இராமன் குறுக்கிடுகிறான். கும்பகன்னனைத் தன் அம்புகளால் நிறுத்துகிறான். உணர்வு பெற்ற சுக்ரீவன், கும்பகன்னனின் பிடியிலிருந்து நழுவி அவனுடைய காதுகளையும், மூக்கையும் கடித்து எடுத்துக்கொண்டு, இராமனின் அண்மைக்குப் பாய்கிறான்.

மறுபடியும். இரு கவிஞர்களும் சொல்ல வரும் சம்பவம் ஒன்றே. நிகழும் விதந்தான் சற்றே மாறுபடுகிறது. இந்தக் காட்சியில் மயிர்க் கூச்சம் உண்டாகும் அளவுக்கு வெளிப்பட்டுத் தோன்றுவது, கும்பகன்னின் போராற்றல் மட்டுமன்று; சத்தியத்தால் கட்டுப்பட்டு நிற்கும், தடுக்க இயலாத சந்தர்ப்பத்திலும் சத்தியத்தைக் காத்து நின்ற அனுமனின் பேராற்றலும்தான்.

தொடர்வேன்…

அன்புடன்
ஹரி கிருஷ்ணன்.

அனுமன்-60 : தந்தையுமானவன்…

மருந்து மலையைக் கொணர்ந்ததும், மறுபடியும் எடுத்த இடத்தில் கொண்டுபோய் வைத்ததும், கொண்டு வந்த மலையினின்றும் புறப்பட்ட காற்று பட்ட மாத்திரத்தில் எழுபது வெள்ளம் சேனையும், இலக்குவனும் எழுந்ததும் (எழுந்தவர்களின் கணக்கில் வான்மீகத்தின்படி இராமனையும் உள்ளிட வேண்டும்; கம்பனில் அவ்வாறில்லை என்பதையும் கண்டோம்) ஒரு புறமிருக்க, தான் செய்த மகத்தான செயலுக்காக எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்காத, ஏதோ இன்னொரு அன்றாடச் செயலை எவ்வளவு சாதாரணமாகச் செய்து முடித்து, அலுவலகம் முடிந்ததும் நாமெல்லாம் திரும்புவோமோ, அவ்வாறு வெகு இயல்பாக, தான் செய்த இந்தச் செயலின் அளவையோ, திறத்தையோ, தன்மையையோ ஒரு சிறிதும் எண்ணிப் பார்க்கவோ, பெருமிதமுறவோ செய்யாதவனாகத்தான் அனுமனை – இது வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் பார்த்தது போலவே – நாம் இந்தக் கட்டத்திலும் சந்திக்கிறோம்.

சொல்லப் போனால், வான்மீகத்தில் சஞ்சீவி பர்வதத்தை அனுமன் கொண்டு வந்ததும் வானரரும் மற்றவரும் எழுந்தைச் சொல்லுகிறார்; அனுமன் மலையைத் திரும்பக் கொண்டு வைக்கச் செல்வதைச் சொல்லுகிறார். மறுபடி இராமனிடத்தில் மீண்டு வருவதைச் சொல்லுகிறார்.

ததோ ஹரிர்கந்த வஹாத்மஜஸ்து தமோஷதீ ஷைலமுதக்ரவேகஹ நிநாய வேகாத்திமவந்தமேவ புனஷ்ச ராமேன ஸமாஜகாம் (வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 74, சுலோகம் 77)

என்று வான்மீகி இந்தச் சர்க்கத்தை முடிக்கிறார். ‘நறுமணத்தைப் பரப்புபவனான வாயுவின் புத்திரன், மிக அதிகமான வேகத்தோடு மருந்து மலையை இருந்த இடத்தில் திரும்ப வைத்து, இராமனோடு மீண்டும் வந்து சேர்ந்துகொண்டான்.

உயிர்த்தெழுந்த இலக்குவனோ, சுக்ரீவனோ, இராமனோ, அல்லது வேறெவருமேயோ அனுமனுடைய ஆற்றலைப் புகழ்ந்து சொல்வதைப் போலவோ, நன்றி பாராட்டுவது போலவோ, மற்றெந்த வகையிலுமோ எந்த மொழியும் அவனிடம் பேசவில்லை. அனுமன் அவ்வாறு ஒரு சொல்லை எதிர்பார்க்கவும் இல்லை. மேற்படி சுலோகத்துடன் முடிகின்ற எழுபத்து நான்காம் சர்க்கத்துக்கு அடுத்த சர்க்கத்தில், ‘அடுத்ததாக என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையோடும், இலங்கைக்குத் தீ வைக்க வேண்டும் என்ற முடிவோடும் எழுந்துவரும் சுக்ரீவனோடு அடுத்த ஆலோசனைக்குப் போய்விடுகிறான்.

இந்தக் கட்டத்தில் மட்டுமன்று; இன்னொரு முறையும் அனுமன் மருந்துமலையைக் கொண்டுவந்தான். இரண்டாவது முறை கொண்டு வந்தது, இலக்குவனுக்காக. அவனுக்காக மட்டும். இராவணனோடு நடக்கும் கடைசி கடைசியான போர்களின் தொடக்கத்தில் – மூலபல சேனையின் அழிவுக்குப் பிறகு – வீடணன் மீது கோபம் கொண்டு இராவணன் தன் வேலை வீசினான். மண்டோதரியைத் திருமணம் செய்து தரும்போது அவளுடைய தந்தையான மயன் தந்த வேல் அது. சற்றும் தடுக்க இயலாததாகிய அந்த வேலை, இடையில் புகுந்து தன் மார்பில் ஏற்றுத் தரையில் வீழ்ந்த இலக்குவனுக்காக இரண்டாம் முறை மருந்து மலையைக் கொண்டுவந்தான் அனுமன். மருந்துகளால் மீண்டும் பொலிவோடு இலக்குவன் எழுந்து வந்த சமயத்திலும் இராமன் வாக்காக வான்மீகி பின்வருமாறு சொல்கிறார்.

ஏஹ்யோஹீத்யரப்வீத் ராமோ லக்ஷ்மணம் பரவீரஹ ஸஸ்வஜே காடமாலிங்கத பாஷ்பபர்யாகுலேக்ஷணஹ

அப்ரவீச்ச பரிஷ்வஜ்ய ஸெளமித்ரிம் ராகவஸ்ததா திஷ்ட்யா த்வாம் வீர பஷ்யாமி மரணாத் புனராகதம்

நஹி மே ஜீவிதேனார்த்தஹ ஸீதையா ச ஜயேன வா கோ ஹி மே ஜீவிதேனார்த்த ஸத்வயி பஞ்சத்வமாகதே

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 101, சுலோகம் 47, 48, 49)

‘வல்லவர்களாகிய எதிரிகளை அழிப்பவனான இராமன், இலக்குவனைத் ‘வா’ என்றழைத்தவாறு தன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ‘வீரனே! அதிர்ஷ்ட வசமாக, சாவின் வாயிலிருந்து நீ மீண்டுவருவதைக் காண்கிறேன். நீயில்லாமல் நான் வாழ்ந்துதான் என்ன பயன், சீதையால்தான் என்ன பயன், நான் வென்றுதான் என்ன பயன்? நீ பஞ்ச பூதங்களோடு கலந்திருப்பாயேயானால் (இறந்திருந்தால்) என்னுடைய எந்த காரியம் முடிக்கப்பட்டதாகும்? என்ன முடிந்தென்ன, முடியாமலென்ன? என் வாழ்வின் பொருள் என்னவாயிருக்கும்?’

இந்த இடத்திலேயும் அனுமனைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. அனுமன் செய்த செயலின் தன்மையைக் குறித்த நெகிழ்ச்சியானதாகவோ, மகிழ்ச்சியானதாகவோ இராமனோ, மற்றெவருமோ அவனிடத்தில் சொல்லவில்லை.

இராமனுடைய மகிழ்ச்சி முழுவதும், இலக்குவன் மீண்டு எழுந்ததைக் குறித்தே இருக்கிறது. இலக்குவனே தன் வாழ்வின் ஊன்றுகோல், ஆதாரத்தானம், பற்றுக் கோடு என்பதைத் தவிர இராமன் வேறு எதுவும் குறிப்பிடவில்லை. (எல்லாவற்றையும் சேர்த்து வைத்து, கடைசிக் காட்சியில் மொத்தமாக தழுதழுக்கப் போகிறான். அது வேறு கதை.)

இதில் என்ன பெரிய வியப்பு என்றால், ‘இவ்ளோ பெரூசா செஞ்சுட்டோமில்ல! நம்மளப் பத்தி ஒரு வார்த்த பேசுவாரில்ல!’ என்ற எதிர்பார்ப்போடு அருகில் வந்து நின்றாவது, பாராட்டை எதிர்பார்க்கும் நோக்கத்துடன் இராமனுடைய முகத்தைப் பார்த்தபடியாவது அனுமன் நிற்கிறானா என்றால், அப்படி ஒரே ஒரு காட்சியும் இல்லை.

அவன்பாட்டுக்கு அவன் அடுத்த செயலை நோக்கிச் சென்றுவிடுகிறான். வேறு யாரேனுமாக இருந்திருந்தால், ‘இவ்வளவு செய்தும் ஒரு வார்த்தை பேசவில்லையே! ஒரே ஒரு வார்த்தை கூட வேண்டாம்; ஒரு புன்முறுவல் குளிர்விக்குமே!’ என்றேனும் எண்ணியிருப்பர். யாரேனும் என்ன யாரேனும்! நாம் என்ன குறைந்தோம்! எந்தவிதத்தில் மாறுபடுகிறோம்! எத்தனை முறை நம் அலுவல் வாழ்க்கையில் நாம் எண்ணியிருப்போம்! ‘Have a heart boss! Won’t you just say ‘neat work’ at least!’ என்று நினைக்காதவர் நம்மில் யாராவது உண்டா?

(ஒரு முறை என் மேலதிகாரி ஒருவர், மேலதிகாரிகள் தன்னிடம் பணியாற்றுபவர்களை மனம் விட்டுப் பாராட்டத் தவறுவதைப் பற்றி வருத்தத்துடன் குறிப்பிட்டார். ‘Bosses never see the good work of their subordinates,’ என்று தொடங்கி மிகுந்த ஏமாற்றம் கலந்த தொனியில் அன்று என்னிடம் பேசினார். ‘என்னடா இது! இவரைப் பற்றி இவரே இப்படிச் சொல்லிக்கொள்கிறாரே,’ என்று நான் நினைத்தால், அவர் குறிப்பிட்டது அவருடைய மேலதிகாரியைப் பற்றி என்பது பின்னால்தான் தெரியவந்தது!)

எதற்காக இவ்வளவும் சொன்னேன் என்றால், தன் செயலுக்காக, யாராலுமே செய்ய முடியாத செயல்களுக்காக, யாருடைய பாராட்டையுமோ, நல் வார்த்தையுமோ எதிர்பார்த்தவனல்லன் மாருதி. அவன்பாட்டுக்கு மலையைத் தூக்கி வருவான்; திரும்பக் கொண்டு வைப்பான். ஏதோ ஒரு பேப்பர்-வெயிட்டைத் தூக்கி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் உருட்டி விளையாடியவன் எழுந்து போவதைப் போல, தன் செயலின் தன்மையைச் சற்றும் கருதாதவனாகி, அடுத்த செயலை நோக்கிப் போய்க்கொண்டே இருப்பான். இது மாருதியின் தன்மைகளில் பெரிய தன்மை. எல்லா விதத்திலும் தன்னிறைவு – தன் நிறைவு என்று பிரித்து எழுதினால்தான் அந்த ‘நிறைவு’ என்ற சொல்லின் அவசியம் புலப்படும் – அடைந்தவர் மட்டுமே எந்த மனோபாவத்துடன் காணப்படுவாரோ அந்த நிலை. It is a sign of internal strength. யாருக்கும் எளிதில் கைவராத, ஆனால் எல்லோரும் மிக முயன்று பயின்று அடைய வேண்டிய மனோபாவம். தன்மை. இது எளிதில் கைவரக் கூடியதன்று. கடுமையான பயிற்சியும், சாதனையுமே இந்த நிலையில் ஒருவரை நிறுத்தும். அப்படி எதுவும் தேவைப்படாமல் மிக இயல்பாகவே அந்த நிலையில் நின்றவன் மாருதி.

ஆனால், கம்பன் இந்த விஷயத்தில் எந்தக் குறையையும் வைக்கவில்லை. முதல் முறை மருந்துமலை வந்து அனைவரும் எழுந்தபோது அனுமனைத் தழுவிக்கொண்டான் இராமன். ‘இராமனின் திருமேனியைத் தீண்டுவது, ‘ என்பது பேறுகளில் மிகப்பெரும் பேறாகக் கருதப்பட்ட ஒன்றல்லவா?

எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு உழுத மார்பினான், உருகி, உள் உறத் தழுவி நிற்றலும், தாழ்ந்து, தாள் உறத் தொழுத மாருதிக்கு, இனைய சொல்லுவான்.

மனமுருகிப் போன இராமன், சீதையின், குங்குமக் குழம்பு தீற்றப்பட்ட, மார்பகங்கள் அழுந்திய தன் மார்புக்குள்ளே முழுக்க இழுத்து அனுமனைத் தழுவினான். (எப்போதும் போல் நாணத்துடன்) அனுமன் உடனே அவன் தாளில் பணிந்தான்.

அவனை நோக்கி இராமன் சொல்லுவான்:

‘முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது, என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர் மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்; நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்!

எங்களுடைய தொன்மையான குலத்தின் நெறி தவறாமல் வாழ்ந்தவனும், என்னால் உண்டான துயரத்தால் தன் உயிரை விட்டவனுமான தசரதனுக்குத்தான் நாங்கள் முதலில் பிறந்தோம். அந்த நாங்கள் இறந்தாகிவிட்டது. இதோ நிற்கிறோமே இப்போது, இந்தப் பிறவி எங்கள் மறுபிறவி. நல்ல நெறியில் நின்று ஒழுகுபவனே! நாங்கள் இப்போது உனக்குப் பிறந்திருக்கிறோம்.

‘எங்க அப்பா இனிமே நீதான்,’ என்று இராமன் தழுதழுத்தான். ‘பழியும் காத்து, அரும் பகையும் காத்து, எமை வழியும் காத்தனை, நம் மறையும் காத்தனை,’ என்றான். ‘இந்திரசித்தனின் பிரமாத்திரத் தாக்குதலுக்கு ஆற்றாது வீழ்ந்தோம் என்ற பழி எங்களுக்கு வராமல் காத்தாய். பகைவர்களை நாங்கள் தொலைப்பதற்கும் வழி செய்தாய்.

எம் குலம் இத்துடன் முடியாமல், தொடர்ந்து வளர்வதற்கா வழியையும் வைத்தாய். வேத நெறியையும் காத்தாய்,’ என்று நெகிழ்ந்து நெகிழ்ந்து பேசும் இராமனைக் காண்கின்றோம். மற்ற எல்லோரும் அனுமனைச் சூழ்ந்துகொண்டு நன்றி பாராட்டக் காண்கின்றோம். அவன் என்ன செய்கிறான்? சாம்பவான் சொல்லக் கேட்டு, மருந்து மலையை அதன் இடத்தில் திரும்ப வைக்கப் புறப்பட்டுப் போய்விடுகிறான். தன் புகழைக் கேட்டுக்கொள்ளும் சக்தியற்ற செவிகள், அனுமன் செவிகள்.

நாம் மேலே குறிப்பிட்டோமே, அந்த இரண்டாவது முறையாக மருந்து மலையைக் கொணர்ந்தது, கம்பனில் – வான்மீகத்தில் எங்கே நிகழ்கிறதோ, அதே, அந்த இடத்தில் – ‘வேல் ஏற்ற படலத்தில்’ நிகழ்கிறது. கொண்டு வந்த மருந்தினால் எழுந்ததும், இலக்குவன் சொல்கிறான்:

எழுந்து நின்று, அனுமன் தன்னை இரு கையால் தழுவி, ‘எந்தாய்! விழுந்திலன் அன்றோ, மற்று அவ் வீடணன்!’ என்று, விம்மித் தொழும் துணையவனை நோக்கி, துணுக்கமும் துயரும் நீக்கி, ‘கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன்’ என்று உவகை கொண்டான்.

இலக்குவன் எழுந்து நின்றான். அனுமனைத் தன் இரு கரங்களால் தழுவிக்கொண்டான். ‘அப்பா! (என் தந்தையே!) வீடணனுக்கு ஒன்றும் ஆகவில்லையே? அவன் நலமாக இருக்கிறானா?’ என்று கேட்டுத் தெளிவுபெற்றுக் கொண்டு, தன்னை வணங்கி நிற்கும் தன் துணைவனான வீடணனைப் பார்த்து, அவன் காயம் படாமல் நிற்பதைக் கண்டு தன் மனத்தில் கொண்ட அச்சத்தையும், துயரத்தையும் நீக்கினான். ‘அண்ணி இதோ திரும்பிவிடுவாள். இராவணன் அழிந்தான்,’ என்று மகிழ்ச்சி எய்தினான்.

இராமனால், தன்னுடைய தந்தை என்று போற்றப்பட்டான். இலக்குவனால் அதே விதமாக, ‘தந்தையே’ என்று அழைக்கப்பட்டான். இராவணன் இறந்ததைச் சானகிக்கு அறிவிப்பதற்காக அசோக வனத்துக்குச் சென்ற போது, அனுமன் தனக்குச் செய்த பேருதவிகளால் கரைந்து போயிருந்தாள் தேவி.

‘ஏழை, சோபனம்! ஏந்திழை, சோபனம்! வாழி, சோபனம்! மங்கல சோபனம்! ஆழி ஆன அரக்கனை ஆரியச் சூழி யானை துகைத்தது, சோபனம்!’

‘(அனுபவிக்க ஒண்ணாத துயரங்களை எல்லாம் அனுபவித்து) வாடியவளே, உனக்கு மங்கலம். (Poor thing என்று சொல்வோமல்லவா, அதே பொருளை உடையதுதான் இங்கே பயிலும் ‘ஏழை’). மங்கல அணிகலன்களைப் பூண்டவேள, உனக்கு மங்கலம். தீய குணங்களின் கடலாக விளங்கிய அரக்கனை, உலகத்தோரின் தலைவனாக விளங்கக் கூடிய யானையானது, தன் கால்களால் மிதித்துத் துகைத்துத் தள்ளிவிட்டது,’ என்று செய்தியை அனுமன் விரிக்க விரிக்க, அங்கே சீதையிடமிருந்து எந்தப் பேச்சையும் காணோம். அவளால் பேச இயலவில்லை. என்ன பேசுவது என்பதையே மறந்த நிலையில் இருந்தாள்.

சில கணங்கள் அப்படிப்பட்டவை. உணர்ச்சியின் உச்சத்துக்குப் போகும்போது, வெளிப்படுத்த இயலாத ஒரு சூழல் ஏற்படும். ‘Home they brought her warrior dead,’ என்று ஆங்கிலத்தில் ஒரு கவிதை உண்டு. அந்தக் கவிதையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டிய இடம் இது.

அனுமன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். இவளை எப்படிப் பேசவைப்பது என்று அவனுக்குத் தெரியும்.

“யாது இதற்கு ஒன்று இயம்புவல்?” என்பது மீது உயர்ந்த உவகையின் விம்மலோ? தூது பொய்க்கும் என்றோ?’ எனச் சொல்லினான், நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள்.

‘என்னம்மா! ஒண்ணுமே பேச மாட்டேங்கிறீங்க! இது என்ன, ‘என்ன எதிர்மொழி சொல்வது என்று தெரியாத திகைப்பால் ஏற்பட்ட மெளனமா? இல்லை என்றால், ‘இவன் பொய் சொல்றான்’னு நினைக்கிறீங்களா?’ என்று அவளைச் சீண்டினான். அனுமனுக்கு தேவியிடம் உள்ள அன்பும் சரி, பக்தியும் சரி, சலுகையும் சரி, இராமனிடத்தில் அவனுக்கிருந்த எந்த உரிமையைக் காட்டிலும் சற்றே அதிகமானவை.

கரைந்தே போனாள் அம்மை. ‘இவன் நமக்காகச் செய்திருக்கும் காரியங்கள் எத்தகையவை!’ என்று வரிசையாக எண்ணிப் பார்த்தாள். ‘உனக்கு நான் செய்வதென்றால் ஒன்றே ஒன்றுதான் செய்ய முடியும்,’ என்றாள்.

‘உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என் தலையினால் தொழவும் தகும்-தன்மையோய்!

மூன்று உலகங்களையும் தந்தாலும் அவை நீ எனக்குச் செய்த உதவிகளுக்க ஈடாகாது. (இதை நான் வெறும் உபசாரத்துக்காகச் சொல்லவில்லை.) ஏனெனில், நீ செய்த உதவிகளுக்கு அவை எந்த விதத்திலும் இணையாக மாட்டா. அதற்கு மேல், நீ செய்த உதவியோ, என்றென்றும் நிலையான விளைவைத் தந்தது. அதற்கு ஈடாக மூன்று உலகங்களையே தந்தாலும், அவை அழியக் கூடியவை. அழியாத உதவியைச் செய்த உனக்கு, அழியக் கூடிய எதையும் திரும்பத் தருதல் பொருந்தாது. உன்னை என் தலையால் தொழுவது ஒன்றே பொருந்தும்.

‘தசரதனுக்குப் பிறந்தோம். இதோ, இன்று உனக்கு மறுபடியும் பிறந்திருக்கிறோம். நீயே எம் தந்தை,’ என்று பெருமாள் சொல்லியாகிவிட்டது. இளைய பெருமாளும் அதையே சொல்லியாகிவிட்டது. இதோ, பிராட்டியின் வாயால், அதையே கேட்டாகிறது.

இப்படி ஒரு பேறு எந்தப் பாத்திரத்துக்குக் கிட்டியது! தசரதனைக் கூட, ‘அவரைத் தந்தை என்று நீ வேண்டுமானால் சொல்லிக்கொள்; என்னைப் பெற்றவன், பெற்றவள், குரு, தெய்வம் என்று எல்லாம் நீதான்,’ என்று சொன்னவன் இளையவன். இராமாயணப் பாத்திரங்களிலேயே பிரம்மாண்டமான வடிவெடுத்து நிற்கிறான் அனுமன்.

அனுமன் பாத்திரப் படைப்பின் கடைசிக் கட்டத்திற்கு வந்திருக்கிறோம். மீதத்தையும் காண்போம்.

தொடர்வேன்…

அன்புடன்
ஹரி கிருஷ்ணன்.

அனுமன்-59 : மருந்தாகித் தப்பா மலை (பகுதி 2)

கம்பனால் சாம்பன் என்றும், சாம்பவான் என்றும் அழைக்கப்படும் ஜாம்பவான் மிகவும் வயதான கரடி. பழுத்த அனுபவசாலி. அனுமனுக்கே மறந்துபோன ஆற்றலை நினைவுபடுத்தியவன். சாம்பவந்தன் என்பது இவனுடைய முழுப் பெயர். பாலகாண்டத்தில், யார் யார் என்னென்ன வடிவங்களைத் தாங்கிப் பிறக்கப் போகிறார்கள் என்று முடிவுசெய்து சொல்லும் கட்டத்தில், ‘பின்னர் வானவரை நோக்கிப் பிதாமகன் பேசுகின்றான். முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன்…’ ‘வானவரை நோக்கிப் பேசிய பிரமன், கரடிகளின் மன்னான ஜாம்பவனாகப் பிறக்கப் போவது நான் என்று முன்னரே சொல்லியிருக்கிறேன்,’ என்று பிரமன் வாக்காகக் கம்பன் குறிப்பிடுகிறான். ஆகவே, சாம்பன், பிரமனுடைய அம்சம்; அல்லது அவன் மகன். சாம்பவதி என்றொரு மகளும், சாம்பன் என்ற பெயரனும் சாம்பவானுக்கு உண்டென்ற போதிலும், கம்பன் இவனை ‘சாம்பன்’ என்றே குறிப்பிடுகிறான்.

வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவன் சாம்பன். எவ்வளவு வயதானவன் என்றால்,

‘வேதம் அனைத்தும் தேர்தர, எட்டா ஒரு மெய்யன் பூதலம் முற்றும் ஈரடி வைத்துப் பொலி போழ்து, யான் மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர, மேரு மோத இளைத்தே தாள் உலைவுற்றேன் விறல் மொய்ம்பீர்!

என்று ‘யார் கடல் தாவ வல்லார்?’ என்ற கேள்வி எழும்போது மயேந்திரப் படலத்தில் சொல்கிறான் சாம்பன்.

‘வாமனனாய் வந்து, திரிவிக்கிரமனாய் வளர்ந்து, இரண்டே அடிகளில் அனைத்து உலகங்களையும் வென்ற தன்மையை நான் உலகெங்கும் பறையறைந்தவாறு சென்றேன். அந்தச் சமயத்தில் மேரு மலையில் இடறி விழுந்தேன். ஆகவே என் காலுக்குப் பழைய வலிமை இல்லை,’ என்று சொல்கிறான். வாமனாவதாரக் காலம் தொட்டே வாழ்பவன். அவனுக்குத் தெரியாத ஒரு பொருளில்லை. தேர்ந்த அறிஞன். வானரர்களுக்கு வழிகாட்டி. ஆலோசகன். எனவேதான் இன்றளவும், பேரறிஞர்களை, ‘ஜாம்பவான்’ என்று குறிக்கும் பழக்கம் நிலவுகிறது.

‘சாம்பன் எங்கே?’ என்று அனுமன் கேட்க, ‘அவனை நான் கண்டிலேன். அவன் உயிரோடுதான் இருக்கிறானா, இல்லையா என்பதே தெரியவில்லை,’ என்று வீடணன் சொல்லவும், ‘அவன் அமரத்துவம் பெற்றவன். இறக்கும் தன்மை என்பது அவனுக்குக் கிடையாது,’ என்று அனுமன் விடையிறுத்து, சாம்பனைத் தேடிக் கண்டடைந்தனர். வந்திருப்பவர் யார் யார் என்று பார்த்து உணரக் கூட முடியாத நிலையில், சக்தியற்று, கொஞ்சம் நினைவுடன் கிடந்தான் சாம்பன். அருகில் வந்த அனுமனும், வீடணனும் கூட, தம்மை இன்னார் என்று அறிவித்த பிறகே உணரும்படியான மயக்க நிலை.

மயக்கம் தெளிந்தவனான சாம்பன், போர்க்களத்தின் நிலைமையைக் கேட்டறிந்தான். ‘மாருதி! இப்போது எழுபது வெள்ளம் சேனையும் சரி; இராம இலக்குவர்களும் சரி, எழுவது உன் கையில் இருக்கிறது,’

‘எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும், முழுதும் இவ் உலகம் மூன்றும், நல் அற மூர்த்திதானும், வழு இலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த! பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி.

எழுபது வெள்ளம் வானர சேனை, இராம இலக்குவர் அனைவரையும் மட்டுமல்ல. எழப் போவது இந்த மூன்று உலகங்களும்தான்; தரும தேவதையும்தான்; மறைகளும்தான். இப்போது இத்தனைப் பேரும் எழுவது உன் கையில் இருக்கிறது. எனவே சற்றும் தாமதிக்காமல், உன் முழு வேகத்தையும் காட்டி உடனே போ.

நான்கு மூலிகைகளைக் கொண்டுவரச் சொல்லி அனுமனைப் பணிக்கிறான் சாம்பன். மூலிகைகளின் பெயர்களைச் சொல்கிறார் வால்மீகி; பலன்களைச் சொல்லவில்லை – பெயர்களே பலன்களைச் சொல்வதால். ஒவ்வொரு மூலிகையும் என்னென்ன செய்யும் என்பதைச் சொல்கிறான் கம்பன். பெயர்களைக் குறிக்கவில்லை.

ம்ருதஸஞ்சீவினி சைவ விஷல்யகரணீமபி ஸ¤வர்ணகரணீம் சைவ ஸந்தானீம் ச மஹெளஷதீம் (வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 74, சுலோகம் 33)

‘மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும், மெய்வேறு வகிர்களாகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும், மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம்மருந்தும், உள; நீ, வீர! ஆண்டு ஏகி, கொணர்தி’ என அடையாளத்தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்.

மாண்டவர்களை மீண்டு எழச் செய்வது ஒரு மூலிகை. அங்கங்கள் துண்டு துண்டாகப் போயிருந்தாலும் இணைக்கக் கூடியது ஒரு மூலிகை. (புதைந்திருக்கும்) ஆயுதங்களை (உடலை விட்டுக் கிளம்பி) எழச் செய்வது ஒன்று; வடுக்கள் ஏதும் இன்றி, உடலின் நிறத்தை முன்புபோல் செய்யக் கூடியது ஒன்று என நான்கு மூலிகைகள் உள்ளன. அவற்றைக் கொண்டுவருவாய் என்று அடையாளம் உரைத்தான் சாம்பன்.

இப்போது இரண்டு கவிஞர்களுடைய கூற்றையும் இணைத்துப் பார்ப்போம். போன உயிரை மீளச் செய்வதான ம்ருதசஞ்சீவினி, உடலைத் துளைத்து உள்ளே புதைந்திருக்கும் ஆயுதங்களை நீக்க வல்லதும், காயங்களை ஆற்ற வல்லதுமான விசல்யகரணி, வெட்டப்பட்ட அங்கங்கள் அல்லது உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கக் கூடிய ஸந்தினி, காயம் பட்ட வடு இன்றி, உடலைப் பழைய வண்ணத்துடன் மீட்டுத் தருவதாகிய சுவர்ணகரணி என நான்கு மூலிகைகள்.

மருந்தைத் தேடிச் சென்ற அனுமன், மலையைப் பெயர்த்து வந்த கதை நமக்குத் தெரியும். ஆனால் இங்கே குறிப்பிடவேண்டிய செய்தி ஒன்றுண்டு. எந்த மலைக்குப் பின் எந்த மலை வரும், ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு, சஞ்சீவி பர்வதத்தை அடைய எவ்வளவு தூரம் போகவேண்டும் போன்ற விவரங்கள் கம்பனில் காணப்படுகின்றன. இவற்றை உரிய துறை வல்லார்கள் ஆய்ந்து பார்த்தல் அவசியம். ஏதோ கற்பனையான விவரங்கள் என்று ஒருபுறம் தள்ளற்குரியன அல்ல இவை. ஒரு முக்கியமான காலக் குறிப்பைப் பாருங்கள்.

மைந்தம் நலம் ஜ்யோதிர்முகம் த்விவிதம் சாபி வானரம் விபீஷணோ ஹனூமான்ச தத்ருஷாதே ஹதான் ரணே

ஸப்தஷஷ்டிர்ஹதாஹ கோட்யோ வானராணாம் தரஸ்வினாம் அஹ்னஹ பஞ்சமஷேஷேண வல்லபேன ஸ்வயம்புவஹ (வா. இரா. யுத்தகாண்டம், சர்க்கம் 74, சுலோகம் 11, 12)

மயிந்தன், நளன், ஜ்யோதிர்முகன், துவிதன், முதலான அறுபத்தேழு கோடி வானர வீரர் அந்தக் களத்தில் சிதறுண்டு கிடப்பதை வீடணனும், அனுமனும் நாளின் ஐந்தாவதும், கடைசியுமானதுமான பொழுதில் கண்டார்கள்.

ஒரு பன்னிரண்டு மணிநேரப் பகற் பொழுது ஒவ்வொன்றும் ஆறு நாழிகைகள் கொண்ட (ஒரு நாழிகை: இருபத்து நான்கு நிமிடம்) ஐந்து கடிகைகளாகப் (ஒரு கடிகை: இரண்டு மணி நேரமும், இருபத்து நான்கு நிமிடங்களும்) பிரிக்கப்பட்டிருந்தன. ப்ராத, ஸங்கவே, மத்யான, அபராஹ்ன, ஸாயன என்று ஒவ்வொரு கடிகைக்கும் பெயர்.

அதாவது, பகற்பொழுதின் கடைசிப் பகுதியில் வீடணனும், அனுமனும் வானர வீரர்களின் உடல்கள் கிடப்பதைக் கண்டனர்.

கம்பன் சொல்கின்ற கணக்குப்படி, இராமன் வரும்போதே இருட்டத் தொடங்கிவிட்டது. ‘கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக் கொண்டான்; அள்ளி நுங்கலாம் ஆர் இருட்பிழம்பினை அழித்தான்,’ என்று கம்பன் குறிப்பிடுகிறான்.

‘கையில் கொள்ளிக் கட்டையைப் போல் சுடர்விடுகின்ற ஆக்னேயாஸ்திரத்தை (தீ-அத்திரம்) எடுத்துக் கொண்டான்.

எடுத்துக் குடித்துவிடலாம் போன்ற அடர்த்தியோடு இருந்த இருளைத் தீய்த்தவண்ணம் களத்தின் ஊடே சென்றான்’ என்று கவிஞன் சொல்கிறான். வீடணன் வருவது அதற்கும் சற்றுப் பிறகு. வீடணன் அனுமனைச் சிறிது நேரத்தில் உணர்வுபெறச் செய்கிறான். அதன் பிறகு சாம்பனை இருவரும் கண்டு, அவனுடைய ஆலோசனைப்படி அனுமன் இலங்கையை விட்டு, மூலிகை மலைக்காக இமயமலைத் தொடர் நோக்கி வான் வழியே கிளம்புகிறான். அப்போது இரவு.

இராமன் வரும்போதே, ‘அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பு,’ எடுத்துக் குடித்துவிடலாம் போன்ற அடர்த்தியான, பளபளக்கக் கூடிய கருமையான இருட்டு. கருப்பு வண்ணமானது, அடர்த்தியாக ஆக, மின்னும். இருட்பிழம்பு என்றான் பாருங்கள்! தீப்பிழம்புதான் தெரியும் நமக்கு. கவியின் கண்ணுக்குத்தான் இருட்பிழம்பு தோன்றும். ஆகவே, வால்மீகியின் கணக்குப்படியும் சரி; கம்பனுடைய கணக்குப்படியும் சரி. அனுமன் இலங்கையை விட்டுக் கிளம்பும் சமயத்தில் அங்கே இரவு. நன்கு இருட்டிவிட்டிருந்தது.

அனுமன் வானூர்ந்து செல்லும் வன்மையை நீண்ட சித்திரமாகத் தீட்டுகிறான் கம்பன். அந்த வேகத்தால் நிகழ்வன, அப்போது அவன் உடல் விசைத்திருந்த தன்மை எல்லாவற்றையும் விவரமாகத் தருகிறான். அங்கே கயிலையைத் தாண்டி, ஏமகூடத்தைத் தாண்டி மேருவைச் சென்று அடைகிறான். மேருவைத் தாண்டி, உத்தரகுருவைச் சேர்ந்தான். அங்கே சூரியன் தெரிகிறது.

அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த வள்ளல், உத்தரகுருவை உற்றான். ஒளியவன் கதிர்கள் ஊன்றி, செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி, வித்தகன், ‘விடிந்தது!’ என்னா, ‘முடிந்தது, என் வேகம்!’ என்றான்.

மேருமலையை நீங்கி அப்பால் சென்று உத்தரகுருவை அடைந்தான். அங்கே அடர்ந்த இருளை நீக்கியவாறு சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ‘அடடா! அதற்குள் விடிந்துவிட்டதா! என்ன வேகமாய் நான் வந்து என்ன பயன்!

விடிவதற்கு முன்னால் அங்கே போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தேனே! இங்கேயே விடிவாகிவிட்டதே!’ என்று மயங்கினான் அனுமன். மனக்கலக்கம் அடைந்தான்.

அடுத்த கணம், சூரியன் இருக்கும் திசையைக் கவனித்தான்.

கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான், – ‘கதிரின் செல்வன் மேல் திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு மாற்றினான், வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் சாற்றினார்’ என்ன, துன்பம் தவிர்ந்தனன் – தவத்து மிக்கான்.

காற்றும் வேகம் குறையும்படியான விரைவில் செல்லும் தவத்தில் மிக்கவனான அனுமன், சூரியன் மேற்கு திசையில் இருப்பதை நோக்கினான். ‘என்ன மடையன் நான்! சூரியன் மேற்கிலா உதிக்கும்! இது விடியல் இல்லை.

அஸ்தமனம். சூரியன் மேரு மலையின் வலதுபக்கத்தில் உள்ளவர்களுக்கு (மற்ற பகுதியில் இருட்டான பிறகு) மேற்கில் தோன்றும் என்று வேதங்களைக் கற்று உணர்ந்தவர்கள் சொல்வார்களே,’ என்று துன்பம் தீர்ந்தான்.

உலகத்தின் ஒரு பகுதியில் இருட்டும், இன்னொரு பகுதியில் வெளிச்சமும் ஒரே நேரத்தில் விளங்கும் என்பதும், ஒரு பக்கத்தில் இரவான பின்னர், இன்னொரு பக்கத்தில் சூரிய அஸ்தமனம் நிகழும் என்பதும் மிக விரைவான வான் வழிப் பயணம் மேற்கொள்ளும் நம் காலத்தில் அறிந்திருப்பதில் ஒரு வியப்பும் இல்லை. இலங்கையில் இரவும், உத்தரகுருவில் மாலையுமாக இருக்கும் செய்தியை ‘வேத நூல் வல்லார் அறிவர்,’ என்று அனுமன் வாய்மொழியாகக் கம்பன் சொல்வதில் செய்தி இருக்கிறது. இலங்கையும், உத்தரகுருவும் வேறு வேறு time zone என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. மூலிகைகளைத் தேடப் பொறுமையும், அவகாசமும் இல்லாமல் மருந்து மலையையே பறித்து எடுத்துக்கொண்டு, இலங்கைக்குத் திரும்புகிறானே அனுமன், அப்போது நினைவாக மறுபடியும் காலக் குறிப்பைத் தருகிறான் கம்பன்.

இந்தப் பக்கத்தில் மருந்து மலை வான்வழியாக வந்திருக்கிறது. காற்றைக் கிழித்துக்கொண்டு, மலையுடன் அனுமன் வரும் வேகத்தால், கடல் அலைகள் கொந்தளித்து உயர்ந்து எழுந்தன; ‘கார் வரை இடை இடை பறித்து விண் ஏற, இற்று இடை தடையிலது உடற்றுறு சண்டமாருதம்,’ என்கிறான் கம்பன். மலையால் கிழிக்கப்பட்ட காற்று, தடையேதுமின்றிக் கடுமையாக வீசுகின்ற காரணத்தால் வடதிசையில் (அனுமன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துகொண்டிருக்கிறான்) பெருத்த ஒலி உண்டாகியது. காற்று சண்டமாருதமானது. ஒலி நிறைந்ததாகியது. ஒவ்வொரு விவரத்தையும் சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு துல்லியமான, இன்றைய விஞ்ஞானம் ஒப்புக்கொள்ளக் கூடிய விவரங்கள் இவை என்பது புலப்படும். (மலையைப் பெயர்த்து எடுக்க முடியுமா, கொண்டு வரமுடியுமா என்ற விவரங்களுக்குள் போகவில்லை நான்.

அந்தத் திறக்கில் நம் அறிவு இன்னும் மூடியே கிடக்கிறது. ஆனால், மற்ற விவரங்கள் நமக்குத் தெரிந்த – அந்த நாளில் தெரிந்திருக்க முடியாது என்று நாம் நம்பும் – உண்மைகளோடு ஒத்துப் போகின்றன.

மருந்து மலையிலிருந்து வீசும் காற்றால் வானரர் உயிர்பெற்று எழுந்து ஆரவாரிக்கின்றனர். அந்தச் சமயத்தில் இராணனுடைய அரண்மனையில் – இந்தக் கூட்டம் ஒரு வழியாகச் செத்து ஒழிந்தது என்ற மகிழ்ச்சியில் – குடித்துக் கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகுந்த கள்ளை அருந்தி, உடல் வேட்கை கொண்டவர்களாக ஆண்களும் பெண்களும் சேர்ந்து கலந்து கிடக்கிறார்கள். அந்தச் சமயத்தில் கலைந்த ஆடைகளை எடுத்து உடுத்தத் தொடங்கிய அரக்க மகளிர் –

கயல், வருகாலன் வை வேல், காமவேள் கணை, என்றாலும், இயல் வருகிற்கிலாத நெடுங் கணார், இணை மென் கொங்கைத் துயல்வரு கனக நாணும், காஞ்சியும், துகிலும், வாங்கி, புயல் பொரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார்.

மீனுக்கும், யமனுடைய காலதண்டத்துக்கும், மன்மதன் எய்யும் நீல மலராகிய அம்புக்கும் உவமை சொல்லப்பட்டாலும், இவை ஒன்றும் இணையாகாத கண்களை உடைய அரக்க மகளிர், (களைந்து வைத்திருந்த) தம் மார்பின் அணிய வேண்டிய பொன் சங்கிலியையும், இடையில் அணிய வேண்டிய மேகலையையும், புடவையையும் எடுத்துத் (கள் மயக்கத்தால்) தம்முடைய நீண்ட கூந்தலில் அணியத் தலைப்பட்டனர்.

அதாவது, இலங்கையில் இன்னமும் இரவு நேரம்தான். இலங்கையிலிருந்து அனுமன் கிளம்பியபோது இரவாகத் தொடங்கியிருந்தது. உத்தரகுருவை அடையும்போது மாலைப் போதாக இருந்தது. மறுபடியும் இலங்கையை அடைகையில் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

இந்தக் காலக் குறிப்புகளையும், கண்டங்கள் இடம் நகரும் (continental drift) விவரங்களையும் கையிலெடுத்து ஆய்வோர் அறிவுலகத்துக்கு மிகப் புதியதும், வியப்பானதுமான செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். நம்மிடையே அப்படி ஒரு அறிஞன் கிளம்ப அனுமன் அருளட்டும்.

தொடர்வேன்…

அன்புடன்ஹரி கிருஷ்ணன்.

அனுமன்-58 : மருந்தாகித் தப்பா மலை (பகுதி 1)

அதிகப்பாடல்களைச் சேர்க்காமல் கம்பராமாயணம் மொத்தம் பத்தாயிரத்துக்குச் சற்று அதிகமான விருத்தங்களைக் கொண்டது என்றால், பாலகாண்டம் முதல் சுந்தரகாண்டம் வரை ஐந்து காண்டங்கள் ஆறாயிரம் விருத்தங்களால் ஆனவை.

யுத்தகாண்டம் மட்டுமே நான்காயிரத்துக்குச் சற்று அதிகமான விருத்தங்களைக் கொண்டது. அளவால் இராமாயணத்தில் பாதிக்குச் சற்றே குறைவானது யுத்தகாண்டம். இந்த யுத்த காண்டத்தில் நடைபெறும் போர்களில் மிக நீண்ட போர், இலக்குவனுக்கும், இந்திரசித்தனுக்கும் நடைபெறுவது. மொத்தம் மூன்று தனித் தனிப் போர்கள். இந்த மூன்று போர்களில் இரண்டில் ஓங்கி நிற்பது இந்திரசித்தனின் கையே. முதல் போரில் நாகாத்திரத்தால் கட்டினான்.

இரண்டாவது போரில் பிரமாத்திரத்தைப் பயன்படுத்திப் பேரழிவை உண்டாக்கினான்.

யுத்த காண்டத்தின் அமைப்பிலும் சரி, விவரிப்பிலும் சரி, வால்மீகியின் அடிப்படைச் சம்பவங்களை அப்படியே வைத்துக்கொண்டு – அங்கே நாகத்திரம் உண்டா, இங்கேயும் உண்டு; அங்கே இந்திரசித்தன் பிரமாத்திரம் செலுத்தினானா, இங்கேயும் உண்டு – அவை நிகழும் விதத்தைப் பெருமளவுக்கு மாற்றியிருக்கிறான் கம்பன்.

எடுத்துக்காட்டாக ஒன்று சொல்லவேண்டும் என்றால், வால்மீகியில், இந்திரசித்தனின் நாகத்திர மற்றும் பிரமாத்திரக் கட்டுகளில் அகப்படுபவர்களில் இராமனும் ஒருவன். கம்பன் இந்த இரண்டு இடங்களிலும், இந்திரசித்தனின் அத்திரங்களால் பாதிக்கப்படாதவனாகவே இராமனைச் சித்திரிக்கிறான். யுத்தம் நடைபெறும் வைப்பு முறைகளிலும் ஏராளமான மாறுதல்கள் காணப்படுகின்றன. வால்மீகி விவரிக்கும் முதற் போரில் நாம் இந்திரசித்தனைக் காண முடிகிறது. கம்பனுடைய சித்திரத்தில் இராவணன் மட்டும்தான் தென்படுகிறான். கம்பனுடைய மாறுதல்கள் ஒவ்வொன்றும் நுட்பமானவை. காரண காரியங்களுடன் கூடியவை. தர்க்கபூர்வமானவை. ஆயினும், வால்மீகியின் அடிப்படைச் சித்திரத்தை ஒட்டியே நடப்பவை.

அப்படிப்பட்ட மாறுதல்களுக்கு உட்பட்டுள்ள இடங்களில் ஒன்று பிரமாத்திரப் படலம். இதற்கு முன்னால் ஒரு முறை இந்திரசித்தனின் பிரமாத்திரப் பிரயோகத்தைக் கண்டோம். (அனுமன் 43: பிரமாத்திரக் கட்டு). ஆனால் அது சுந்தர காண்டத்தில் அனுமன் ஒருவனை மட்டுமே குறி வைத்து எய்தது. அங்கே அழிவு என்று எதுவுமே நிகழவில்லை.

அனுமனுடைய செயல்களைக் கட்டும் அளவுக்கு மட்டுமே சுந்தர காண்டத்தில் அது பயன்பட்டது.

ஆனால் யுத்த காண்டத்தில், அதுவும் நாகாத்திரத்தைக் கொண்டு இலக்குவனைக் கட்டிய பிறகு, ‘இனிமேல் இந்த நாகங்களை விலக்க யாராலும் இயலாது –

தான் விடின் விடும், இது ஒன்றே; சதுமுகன் முதல்வர் ஆய வான் விடில், விடாது; மற்று, இம் மண்ணினை எண்ணி என்னே! ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்; வேறு உய்தி இல்லை; தேன் விடு துளவத் தாராய்! இது இதன் செய்கை’ என்றான்.

தேன் ஒழுகும் துளசி மாலையை அணிந்தவனே! இந்த நாகக் கட்டுகள் தாமாக விலகினால்தான் உண்டு. அவ்வாறன்றி, பிரமன் முதலான எந்த தேவர்கள் வந்து முயன்றாலும் இவற்றை விலக்க முடியாது. அவ்வாறிருக்கும் போது, மண்ணுலகைச் சேர்ந்த மற்றவரகளால் என்ன செய்ய முடியும்! இந்த நாகக் கட்டுகளும், தாமாகத் தளர்வன அல்ல. எந்த உடலைப் பற்றியுள்ளதோ, அந்த உடல் சிதைந்தால் ஒழிய, அந்த உடலில் இருந்து உயிர் நீங்கினால் ஒழிய, இவை நீங்கா.

என்று வீடணன் நாகத்திர வரலாற்றைச் சொல்ல, அன்று கூட இருந்த துயரைக் களைந்தது கருடனின் வருகை.

மீண்டெழுந்த இலக்குவனும், வானர சைனியமும் மறுமுறை போரைத் தொடங்கக் கிளம்புகின்ற சமயத்திலேயே, ‘அண்ணா! நான் இந்திரசித்தனுக்கு எதிராகப் பிரமாத்திரத்தைப் பயன்படுத்தப் போகிறேன்,’ என்று சொன்னதும், ‘அப்படிச் செய்வதைத் தவிர்ப்பாய்,’ என்று இராமன் அவனுக்குச் சொல்லித் தடுத்ததை முன்னர் கண்டோம். (அனுமன் 30: வாய்க்கு வந்த இதயம்). அன்றைய போர், மிக நீண்டதொரு போர். அன்று மாலையில், இந்திரன் முதலான தேவர்களும், முனிவர்களும் மற்ற வானவர்களுமாக இலக்குவனை எதிர்த்துப் போர்க்களத்துக்கு வந்திருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினான் இந்திரசித்தன், மகோதரனின் உதவியோடு. ‘இதென்ன வியப்பு! இவர்களோடு நமக்கென்ன பகை! ஏன் இவ்வாறு போருக்கு வந்திருக்கிறார்கள்!’ என்று இலக்குவன் அனுமனிடத்தில் வினவிக்கொண்டிருக்கும் போதே இந்திரசித்தன், மேகக் கூட்டங்களுக்குப் பின்னாலிருந்துகொண்டு பிரமாத்திரத்தைப் பிரயோகித்தான்.

அந்தச் சமயத்தில் ஆயுதங்களுக்குச் செய்ய வேண்டிய பூசைகளைச் செய்வதற்காக இராமன் யுத்த களத்தை விட்டு வெகு தொலைவு அப்பால் சென்றிருந்தான். வீடணனை, ‘இரவும் பகலும் நம் படை போரிட்டுக் களைத்திருக்கிறது.

‘அருந்துதற்கு உணவு வரவு தாழ்ந்தது.’ உண்பதற்கான உணவோ இன்னும் வந்தபாடில்லை. ‘வீடண! வல்லையின் ஏகி, தரவு வேண்டினேன்,’ வீடணா! உடனே சென்று உணவு தயாராவதை மேற்பார்வையிட்டு உடனே கொண்டு வா,’ என்று சொல்லிச் சென்றிருந்தான். எனவே, களத்தில் இப்போது இராமனும் இல்லை. வீடணனும் இல்லை.

திறமையாக எதிர்த்துக் கொண்டிருந்த போதிலும், மாயப் போர் வல்லானாகிய இந்திரசித்தன் எதிர்பாராத கணத்தில் செலுத்திய பிரமாத்திரத்தால் தாக்குண்டான் இலக்குவன். ‘கையைப் பின்புறம் கட்டிவிட்டு, சண்டைக்கு அனுப்புதல்,’ என்பதைப்போல் அன்று தெய்வப் படைகள் எதனையும் பயன்படுத்தக் கூடாது என்ற ஆணையுடன் இலக்குவனைக் கட்டுப்படுத்தியிருந்தான் இராமன். உயிரே போகின்ற தருணமாக இருந்தாலும், அண்ணனின் ஆணைக்கு எதிராக ஒரு காரியம் செய்யமாட்டான் இலக்குவன். அவன் அண்ணனின் ஆணையை மீறியவை இரண்டே இரண்டு கட்டங்களில்தான்.

பொன்மானைத் துரத்திச் சென்ற இராமனைப் போய்ப் பார்த்து வருமாறு சீதை அவனைக் கட்டாயப்படுத்திய – வேறு வழியே இல்லாத – சூழ்நிலை ஒன்று. இராமாயணத்தின் கடைசியில், வைகுந்தத்துக்குத் திரும்புமாறு அழைக்க வந்திருக்கும் எம தர்மனோடு தனியிடத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று முளைத்து, ‘உடனடியாக இராமனைச் சந்திக்க அனுமதிக்காவிட்டால் இராமனையும், அயோத்தியையும் சபிப்பேன்,’ என்று பிடிவாதம் பிடித்த துர்வாச முனிவருடைய வேகத்தைத் தாங்க முடியாத நிலை இரண்டு. இந்த இரண்டாவது முறை மீறிய காரணத்துக்காத்தான் இலக்குவன் சரயு நதியில் பாய்ந்து தன்னை மடித்துக்கொள்கிறான். இராமாவதாரம் முடிய வேண்டிய காரணத்துக்காக நேர்ந்த நிகழ்வு இது. இவற்றை இலக்குவனை ஆயும்போது விரிப்போம்.

இந்திரசித்தன் செலுத்திய பிரமாத்திரத்தினின்றும் இன்னும் பல ஆயுதங்கள் வெடித்துச் சிதறிக் கிளம்பித் தாக்குகின்றன. களம் முழுதும் அழிவுமயம். இலக்குவன் ஒரு பக்கம் வீழ்ந்து கிடக்கிறான். சுக்ரீவன் ஒரு புறம்; சரபன், சுசேடணன், வினதன், கெந்தமாதனன், இடும்பன், ததிமுகன் என்று எண்ணிறந்த வானரத் தலைவர்கள் நெடுகிலும் கிடக்கிறார்கள். எழுபது வெள்ளம் அளவினதான மொத்த வானர சேனையும் தரையில் கிடக்கிறது. இந்த நிலையில் தன் ஆயுதங்களுக்கப் பூசையிடச் சென்றிருந்த இராமன் திரும்புகிறான். சற்று நேரத்துக்கு முன்னால் துடிப்புடன் விளங்கிய சேனை முழுவதும் தரையில் கிடக்கிறது. யாருடைய துணையால் அவன் வனவாசக் காலத்தைக் கழித்தானோ, யார் அவனுடைய உயிரின் உயிரோ, யார் சீதையினும் மேலான அபிமானத்தைப் பெற்றவனோ, யார் இல்லாமல் அவனால் இருக்க முடியாதோ, அந்த இலக்குவன் களத்தில் உயிரற்றவன் போல் கிடக்கிறான். அவனை மடியில் கிடத்துவதும், மார்பைத் தொட்டுப் பார்ப்பதும், மூச்சு இருக்கிறதா என்று மூக்கில் கைவைப்பதும், ‘இதோ நானும் உன்னுடன் வந்து சேருகிறேன்,’ என்று கதறுவதுமாக துயரக் கடலிலிருந்து மீள முடியாதவனான இராமன் இலக்குவனின் உடலுக்கு அருகிலேயே மூர்ச்சித்து வீழ்கிறான்.

இந்த நேரத்தில், உணவு ஏற்பாடுகளை முடித்தவனான வீடணன் களத்துக்குத் திரும்புகிறான். ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பெருஞ்சேனை அசைவதற்கு ஒருவரின்றி கிடக்கிறது. அங்கே கிடக்கும் ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டே வந்து இராமனைக் காண்கிறான். அவன் உடலில் காயம் இல்லாத காரணத்தால், அவன் மயங்கிக் கிடக்கிறான் என்பதை உணர்கிறான். என்ன மாதிரியான ஒரு கணம் இது! சில மணி நேரங்களுக்கு முன்னால்தான் இவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டார்கள். இது என்ன காரணத்தால் நிகழ்ந்திருக்கிறது, யார் இதனை நிகழ்த்தியிருக்கக் கூடும் என்பது வீடணனுக்குத் தெரிந்த ஒன்றுதான்.

அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்ற இந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆக நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின் நோக்கி, சிந்தையின் உணர எண்ணி, தீர்வது ஓர் உபாயம் தேர்வான்.

இந்த நிலை எய்தக் காரணம் அந்தணன் படை – பிரமாத்திரம் – என்பதை உணர்ந்தான். இந்தப் படைக் கலத்தைச் செலுத்தக் கூடிய அரக்கர்களில் இப்போது மிகுந்திருப்பவர்கள் இரண்டே பேர். இராவணன் ஒருவன். இந்திரசித்தன் மற்றொருவன். இப்போது இந்தப் அத்திரத்தைச் செலுத்தியிருப்பது இந்திரசித்தனே என்பதையும் உணர்ந்தான்.

இலக்குவன் தாக்கப்பட்டு விழுந்திருக்கிறான் என்பதையும், அவன் வீழ்ந்திருப்பதைக் குறித்த வருத்தத்தில் அருகில் மயங்கிக் கிடக்கிறான் இராமன் என்பதையும் உணர்ந்தான். தன்னந் தனியனாக அவன் களத்தில் நிற்கும் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். அவன் மனநிலை எப்படி இருந்திருக்கும்! இந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். கிடப்பவர்கள் அனைவரையும் எழுப்ப வேண்டும். என்ன செய்யலாம் என்று சிந்தித்தான்.

பிரமாத்திரத்திலிருந்து மீள முடியாது என்றாலும், நாக பாசத்திலிருந்து ஆச்சரியமான முறையில் இவர்கள் எழுந்தததைப் பார்த்தவனல்லனா வீடணன்! அறத்துக்கு அழிவில்லை. ஆகவே இவர்கள் மறுபடி எழுவர் என்ற நம்பிக்கை அவனுடைய ஆற்ற ஒண்ணாத் துயரத்துக்கும் மேல் எழுந்தது.

‘வேறு யாராவது இந்த நிலையிலும் ஒன்றும் ஆகாமல், அல்லது அரைகுறை நினைவுடன் இருப்பார்களா,’ என்று ஒரு சிந்தனை ஓடியது வீடணனுக்கு. நல்ல இருள் கப்பியிருந்த இரவானபடியினாலே ஒரு தீப்பந்தத்தைக் கையில் பற்றியபடி, இரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கும் அந்த அளவில் மிகப் பெரிய சைனியத்தைத்துள், உயிரின் அடையாளத்தோடு இருப்பவர் யார் என்று தேடினான். அவன் நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை.

வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச் செங் கண் தீ உக, கனகக் குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட ஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான், காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான்.

அனுமன் கிடந்தான் அங்கே. எப்படி? வாய் மடித்து. இரண்டு கைகளையும் முறுக்கிக் கொண்டு. உடலோ இயங்க ஒண்ணாத நிலையில் கிடக்கிறது. கண்ணிரண்டிலும் சினத் தீ பொங்கி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. செயல்கள் அற்றுப்போய், ஆயிர கோடி யானைகள் சிதறி விழுந்து இறந்து கிடக்க, அந்தப் பிணக்குவியலின் உயரம் மேகங்களைத் தொட, அந்தக் குவியலின் மீது வாயை மடித்தபடி, கைகளை முறுக்கியபடி, இயக்கம் இல்லாமல், மயக்கம் தெளிந்து கொண்டிருந்த நிலையில், சினம் அடங்காமல் கண் வழியாக நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த நிலையில் அனுமனைக் கண்டான் வீடணன்.

இதற்கு முன்னரே பிரமாத்திரத்தை ஏற்றவன் அனுமன் என்பதை அறிந்தவன் அல்லனா, வீடணன்! அவனுடைய நம்பிக்கை உறுதிபட்டது. உயிர் துளிர்த்தது. அனுமனை மடியில் கிடத்திக் கொண்டு, தன் கண்களில் நீர் பெருக, அவன் உடலில் தைத்திருந்த ஒவ்வொரு அம்பையும் எடுத்து நீக்கினான். அனுமனுக்கு உணர்வு திரும்பியது. வீடணனும் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன் அல்லனா! மேகத்திலிருந்து நீர் எடுத்து அனுமன் முகத்தைக் குளிர்வித்தான். அனுமன் எழுந்தான்.

உயிர்ப்பு முன் உதித்த பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி வியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப் பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக, அயர்த்திலன் இராம நாமம் வாழ்த்தினன்; அமரர் ஆர்த்தார்.

மூச்சு திரும்பியது. மயிர்க்கால்கள் சிலிர்த்தன. மெதுவாக வியர்வை வெளிவரத் தொடங்கியது. கண் விழித்தான். மேனி அசைந்தது. (காய்ந்திருந்த) வாயில் (மீண்டும்) நீர் ஊறத் தொடங்கியது. விக்கல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிலையிலும், (விக்கல் பிறந்தவுடன்,) ‘இராம!’ என்று உச்சரித்தான். தேவர்கள் வாழ்த்தினர்.

அனுமன் எழுந்தவுடன், அழுகையும் ஆனந்தமும் ஒன்றாக ஏற்பட்டது வீடணனுக்கு.

‘அழுகையோடு உவகை உற்ற வீடணன்,’ வீடணன் அழுகையும் மகிழ்ச்சியும் ஒரே சமயத்தில் எய்தினான். ‘ஆர்வம் கூர, தழுவினன் அவனை,’ அன்பு மிகுதியால் அனுமனைத் தழுவினான். ‘தானும் அன்பொடு தழுவி,’ அப்படிப்பட்ட வீடணனைத் தானும் தழுவிய அனுமன், ‘தக்கோய்! வழு இலன் அன்றே, வள்ளல்?’ என்றனன், ‘தகுதி வாய்ந்தவனே!

இராமன் நலமாக இருக்கிறானா?’ என்று கேட்டான். எழுந்தவுடன் கேட்ட முதல் கேள்வி. ‘இராமன் நலம்தானே?’ ‘வலியன்’ என்றான்,’ இராமனுக்கு ஒன்றுமில்லை. அவன் நலமே என்று வீடணன் சொல்லக் கேட்டதும், ‘தொழுதனன், உலகம் மூன்றும் தலையின் மேல் கொள்ளும் தூயான்,’ மூன்று உலகங்களும் தம் தலைமேல் வைத்துத் தொழத் தக்கவனான அனுமன், தன் கரங்களைக் குவித்து, இராமனை எண்ணி, தொழுதான்.

அவ்வளவு பெரிய களத்தில், நம்பிக்கை வீடணன் வடிவில் வந்தது. அனுமன் வடிவில் எழுந்தது. ‘சாம்பன் எத்தலையன்? என்றான்,’ வீடணனைப் பார்த்து அனுமன், ‘ஜாம்பவான் எங்கே இருக்கிறான்? அவனை நாம் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்,’ என்று கூறினான்.

மனிதனுடைய முதல் தேவை நம்பிக்கை. ஆனால், நம்பிக்கை, நம்பிக்கையாக நின்றால் போதாது. நம்பிக்கை செயல் வடிவம் கொள்ளவேண்டும். ‘கடுகளவு நம்பிக்கை வைத்து, மலையைப் பார்த்து ‘நகர்வாய்,’ என்று சொன்னால் அது நகரும்,’ என்றார் இயேசுநாதர். ஆனால், நம்பிக்கையானது ‘நகர்வாய்,’ என்று சொல்கின்ற செயல்வடிவம் கொள்ளும்போதுதான் மலை நகரும். இல்லையா?

இதோ, வீடணனாகி நடந்து வந்து, அனுமனாகி எழுந்து நின்ற நம்பிக்கை, சாம்பன் என்ற வழிகாட்டியை நோக்கிச் செல்கிறது. செயலை நோக்கி. செயல் வடிவம் கொள்வதற்காக.

தொடர்வேன்…

அன்புடன்
ஹரி கிருஷ்ணன்.

அனுமன்-57 : ஏற்பது உயர்ச்சி

வீடணனை ஏற்பது பற்றிய எந்தக் கருத்தையும் இதுவரையில் இராமன் வெளியிடவில்லை. சுக்ரீவன் உள்ளிட்ட – சாம்பவான் போன்ற அறிவிற் சிறந்தோரையும் சேர்த்து – வானர, கரடித் தலைவர்கள் எல்லோரும் பேசி முடித்தாகி விட்டது. ஒருவரேனும், ‘வீடணன் ஏற்கத் தகுந்தவனே,’ என்ற கருத்தைச் சொல்லவி ல்லை. ‘ஏற்கக் கூடாது,’ என்ற மையக் கருத்தைப் பல விதங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். இந்தச் சூழ்நி லையில் எதிர்க் கருத்தைச் சொல்ல வேண்டும். மற்றவர்களைப் பார்க்கிலும் அனுமனுக்கு ஒரே ஒரு கூடுதல் தகுதி இருந்தது. இவன் ஒருவன்தான் வீடணனை இலங்கையில் பார்த்திருக்கிறான்; இவன் ஒருவன்தான் அவன் இல்லத்துக்குள் சென்று எல்லா இடங்களையும் கண்டிருக்கிறான். அது மட்டுமில்லை. நீதி, நியாயங்களுக்குக் கட்டுப்பட்டு இவன் இயங்குவதை நேரடியாக அறிந்திருக்கிறான். ஆனால், இந்தக் கூட்டத்தில் உள்ள மற்றவரோ அனுமனின் கருத்துக்கு எதிர்க் கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள். உண்மை என்ன என்பதை அறியாதலோ அனுமன் வெளியிடப் போகும் கருத்து, மற்ற எல்லோருடைய கருத்தினின்றும் மாறுபட்டது. இப்போது தான் எடுத்து வைக்கப் போகும் கருத்தை மற்றவர் செவி தர வேண்டும். ஊகங்கள் இன்னது என்பாரின் நடுவிலே உண்மை எதுவென்பதை வெளிப்படுத்த வேண்டும். தான் சொல்வது உண்மையே என்பதை மற்றவர் உணருமாறு செய்யவேண்டும்.

செயலாளுமை கொண்ட எந்த நிர்வாகிக்கும் இப்படி ஒரு சூழ்நிலையை எப்படிக் கையாளவேண்டும் என்பது தெரி யும். You are simply presenting your case; not arguing for or against. இது கட்சி கட்டுகின்ற, அல்லது, வாதிடுகின்ற களமன்று. வாதாடுதல் என்றால் எடுத்த எடுப்பில் எதிர்க் கருத்தைக் குப்புறக் கவிழ்க்கலாம். ஓங்கி அடிக்கலாம். எதிராளி எவ்வளவு பெரிய முட்டாள் என்பதை மிக வெளி ப்படையாக, நட்ட நடு சபையில் போட்டு உடைக்கலாம். அங்கே இராவணன் முன்னிலையில் – பாரதி சொன்னதைப் போல் – ‘வெடிப்புறப் பேசினான்’ பாருங்கள், அப்படி. ஆனால் அந்த இடத்திலும் மாருதி கட்சி கட்டவில்லை. அறத்தின் பக்கத்தை அழுத்தந் திருத்தமாகப் பேசினான்.

இந்த இடமோ ஆலோசனைக் கூடம். இங்கே வாதங்கள் எழலாம். ஆனால், பேச்சில் நளினம் இருக்க வேண்டும். இந்த இடம், ‘யாரைவிட யாரின் கல்வி பெரியது,’ என்றோ, ‘யார் கருத்து யார் கருத்தை வி டவும் உயர்ந்தது,’ என்றோ சுண்டிப் பார்க்கக் கூடிய மேதைமை-ஆய்வுக் களமன்று. இங்கே காணப்பட வேண்டியது கருத்து. ஒரு செயலின் நன்மை-அன்மைகளின் தன்மையை யெல்லாம் எடுத்துச் சீராக வைக்க வேண்டிய இடம். இங்கே எந்தக் கருத்தையும் பதமாக எடுத்து வைக்க வேண்டும். போட்டு உடைக்க முடியாது. இங்கே கூடியுள்ளவர்கள் அனைவரும் நம்மவர். இவர்கள் யாரையும் கருத்தில் வெல்ல வேண்டும் என்கின்ற தேவையே இல்லை. அப்படி ஒரு வேட்கை, பேச்சாளரின் எந்தச் சொல்லிலும் காணப்படக் கூடாது. இந்தக் களத்தில் – ஆலோசனைக் கூட்டத்தில் – கடைப்பிடிக்க வேண்டிய முதல் பண்பு இது.

இப்படிப்பட்ட சூழலில் தன் கருத்தை வெளியிட – தன் கருத்தை நிலை நிறுத்த (building up a case) – சில வழிமுறைகள் உண்டு. முகமன்; கருத்தை வெளியிடல்; வரம்பு கட்டுதல்; அரண் செய்தல்; முரண்படுதல்; தொகுத்தல்; முடிவைத் தெரிவித்தல் என்று படிப்படியாகத் தன் கருத்தைச் செலுத்த வேண்டும். மொத்தம் பத்தொன்பது விருத்தங்களில் நிகழும் அனுமன் உரை இந்த இலக்கணங்களுக்கு அப்படியே பொருந்துகிறது. தவறு. அப்படிச் சொல்வது மிகத் தவறு. அனுமனுடைய உரையிலிருந்து இந்த இலக்கணங்களை யாரும் கற்கலாம்.

‘கற்றோர்களும், கூர்த்த மதி உடையவர்களும் கூடியிருக்கும் இந்தச் சபையில், மேன்மையான என் நண்பர்கள் எல்லோரும் தங்கள் கருத்துகளைச் சொன்ன பிறகு நான் என்ன சொல்ல இருக்கிறது?’ என்று சபைக்கு முகமன் தெரிவித்தாகிவிட்டது. இப்போது, முடிவெடுக்கும் காரியம் யார் கையில் இருக்கிறதோ, அவனிடத்தில் தெரி விப்பது போலவும், சபையின் காதில் விழுவது போலவும் தன்னடக்கம் புலனாகுமாறு சில சொற்கள் – உண்மையான, உள்ளார்ந்து, உணர்ந்து, சொல்வதை முகமனுக்காக இல்லாமல், நேர்மையாக – சொல்ல வேண்டும்.

‘இணங்கினர் அறிவிலர் எனினும், எண்ணுங்கால், கணம் கொள்கை நும்மனோர் கடன்மைகாண்’ என வணங்கிய சென்னியன், மறைத்த வாயினன், நுணங்கிய கேள்வியன், நுவல்வதாயினான்.

‘சிந்தித்துப் பார்த்தால், தம்மைச் சேர்ந்தவர்கள் அறிவில்லாதவர்களாகத் தோன்றினாலும், (அவர்கள் வெளியி டும் கருத்தைச் சீர்தூக்கி, செம்மை செய்து, அவர்கள் சொல்வதையும்) தம் கணமாகக் – அறிவின் மிக்க தங்களுடைய கருத்துக்குப் பொருந்துவதாகக் – கொள்ளுதல் உன்னைப் போன்றவர்களின் கடமையாகும்,’ என்று சொன்னான்? எப்படிச் சொன்னான்? தலை பணிவாக வணங்கியிருந்தது. ஒரு கையால் வாயை மறைத்தி ருந்தான். தன்னுடைய கோலத்தின் மூலம் தன் பணிவை அனைவருக்கும் தெரிவித்து, நுட்பமான கல்வி-கேள்வி உடைய அனுமன் பேசத் தொடங்கினான்.

முதல் அடி. ‘ஐயா! நான் அறிவற்றவன். இருந்த போதிலும் நான் இங்கே வெளியிடும் என் கருத்தை, உங்கள் அறிவுகொண்டு துலக்கி, பளிச்சிடச் செய்து, அறிவற்ற என்னையும் அறிவின் மிக்க உங்களில் ஒருவராகக் கருத வேண்டும். அறிவற்றோரின் கருத்தையும் சுடரேற்றிக் கொள்வது உங்களைப் போன்றவர்கள் செய்யத்தக்கது.’

ஆமாம். செய்யத்தக்கதுதான். ஐயா தொடங்கும் போது, சுற்றியிருந்தவர்கள் ஆமோதிக்கும் விதத்தில் தலையை அசைத்திருப்பார்கள் அல்லவா? ‘மாருதி போய் இப்படிப் பேசுவதாவது!’ என்று நினைத்தாலும் சரி; ‘என்னவோ விஷயத்துக்கு வரான்,’ என்று நினைத்தாலும் சரி. இந்த முதல் கருத்தை யாரும் மறுக்க முடியாது. கேட்பவர்களின் மன நிலையை இணக்கமானதாக்கி ஆயிற்று.

‘தூயவர் துணி திறன் நன்று தூயதே; ஆயினும், ஒரு பொருள் உரைப்பென், ஆழியாய்! “தீயன்” என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்; மேயின சில பொருள் விளம்பக் கேட்டியால்.

‘இங்கே மனத் தூய்மையும், வினைத் தூய்மையும் உடைய என் நண்பர்கள் பேசினார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் நன்மையை நாடியதுதான். ஒரு பக்கமாக இல்லாமல், உள்ளத் தூய்மையோடும், நேர்மையோடும் வெளிப்பட்ட கருத்துகள்தாம் அவை.’ ம். புரியுது. அப்புறம் என்ன, ‘நல்லதுதான், தூய்மையானதுதான்,’ என்று அங்கே ஒரு ‘இக்கு’ வைக்கிறாய்? ‘ஆனாலும்,’ அதானே கேட்டேன். என்னவோ மாற்றுக் கருத்து சொல்லப் போகிறாய். ‘நான் ஒன்று சொல்கிறேன்.’ சொல்லு. கேட்கத்தானே கூடியி ருக்கிறோம். ‘இவனை நான் தீயவன் என்று ஐயப்படவில்லை.’ முகமன் சொல்லியாயிற்று; சபையைத் தன் வசப்படுத்தியாயிற்று; தன் கருத்தை வெளிப்படுத்தியாயிற்று. இப்போது தன் கருத்துக்கு அரண் கட்ட வேண்டும். ‘மேயின சில பொருள் விளம்பக் கேட்டியால்.’ நான் ஏன் இப்படி ஒரு நினைக்கிறேன் என்பதற்குச் சில காரணங்களைச் சொல்கிறேன். கேளுங்கள்.

இந்தச் சூழ்நிலையில், கருத்தை எடுத்து வைப்பதில் இரண்டு விதமான உத்திகள் உண்டு. எடுக்கும்போதே ஓங்கி ஓர் அடி அடித்துவிட்டு, பின்னால் போகப் போக வலிமை குறைந்த ஆதாரங்களை வைத்தல். இது சில இடங்களில் பயன்படும். சூழலின் தன்மையைப் பார்த்துச் செய்ய வேண்டியது. இன்னொரு வகை. முதலி ல் அவ்வளவாக வலிமையற்ற – ஆனால் உண்மையான – ஆதாரங்களைச் சொல்லி, போகப் போக கருத்தின் வலி மையை ஏற்றிக்கொண்டே போதல். இந்த இரண்டாவது உத்தியை மேற்கொண்டான் மாருதி.

‘ஒருவன் நல்லவனா, அல்லவனா என்பது அவன் முகத்திலேயே தெரியும்,’ என்று தொடங்கினான். ‘ஆமா. முகத்தப் பாத்தா எப்படித் தெரியும்? அழகா இருக்கிறவன் நல்லவன், அசிங்கமா இருக்கிறவன் கெட்டவனா?’ இல்லை. முகத்தை என்று சொன்னால், அதனுடைய அமைப்பை நான் சொல்லவில்லை. அதனுடைய குறிப்பைச் சொல்கிறேன். ‘ஒருவன் பேசும்போது அவன் முகக் குறிப்பைக் கூர்ந்து கவனித்தால், அவன் உள்ளத்தின் தன்மை இன்னது என்பது தானாகப் புலனாகும்.’

‘உள்ளத்தின் உள்ளதை, உரையின் முந்துற, மெள்ளத் தம் முகங்களே விளம்பும்; ஆதலால், கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள் பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ?

வாய்ச் சொல்லை முந்திக்கொண்டு, முகமே இவன் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்ச கொஞ்சமாகச் சொல்லிவிடும். வெளியில் எது பிரகாசிக்கும்? விளங்கித் தோன்றும்? வெளிச்சம், வெளியி ல் வரும் போது பளிச்சென்று தெரியும். வெளிப்படும். இருட்டோ, குறிப்பிட்ட அளவிலான எல்லைக்குள் மட்டுமே அடர்ந்து இருக்கும். வெளியே வரும்போது இருட்டின் தன்மை தோன்றிவிடும். ஆகவே, இவன் பேசுகி ன்ற போது இவன் முகக் குறிப்பு இவன் அகத்தைக் காட்டுகிறது. இது ஒரு காரணம்.

அடுத்ததாக, சுக்ரீவன் தொடங்கி, ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் குறிப்பிட்டார்கள். ‘அண்ணனை மறுதலி த்து, நம்மிடம் வருபவனை எவ்வாறு நாம் நம்ப முடியும்?’ நான் ஒன்று சொல்கிறேன்.

‘வாலி விண் பெற, அரசு இளையவன் பெற, கோலிய வரி சிலை வலியும் கொற்றமும், சீலமும் உணர்ந்து, நிற் சேர்ந்து, தெள்ளிதின் மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான்.

வாலி விண்பெற்றான் என்பதை அறிந்தான்; இளையவன் அரசாட்சி அடைந்தான் என்பதையும் பார்த்தான். இந்த இரண்டு காரியங்களையும் சாத்தியமாக்கிய இராமனின் வில்லாற்றலையும், நியாயம் அறிந்த தன்மைமையயும், நல்லொழுக்கத்தை மட்டுமே நாடும் தன்மையையும் பார்த்தான். உன்னைச் சேர்ந்து, அரசேற்க வந்திருக்கிறான் என்றே கொள்வோமே. (அதில் என்ன பிழை?)

இராமனிடத்தில் பேசப்படும் இந்த விருத்தம், இராமனுக்குச் சுட்டுவது ஒரு கருத்தை. ‘சுக்ரீவனுக்கு அரசாட்சி யை நீ பெற்றுத் தந்ததைப் பார்த்தான்; தனக்கும் அப்படி ஒரு பேறு கிட்டும் என்று வந்தான்.’ இது வீடணனுடைய உள்ளம் அறிவிக்கும் நிலையன்று. ‘சர்தான்யா! அப்படித்தான் இருக்கட்டுமே! என்ன போச்சு இப்போ! நம்ம சுக்ரீவன் செய்யலியா?’ என்று மற்றவர்களை முரண் செய்து, தன் கருத்தை அரண்செய்யும் நி லைப்பாடு.

அப்படியே சுக்ரீவன் பக்கம் திரும்பிப் பாருங்கள். அவன் என்ன உணர்வான் இந்தப் பேச்சிலிருந்து? சுக்ரீவா! மன்னித்துக்கொள். No offence meant. நான் உன்னைத் தவறாகச் சொல்லவில்லை. ஏனென்றால், இப்படி ஒரு ஏற்பாட்டை அமைத்துத் தந்தவனே நான்தான். ஆனாலும் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணனை நீங்கி வந்தவன் எல்லோரும் அறத்தினின்றும் நீங்கியவரும் அல்லர். நம்பகத் தன்மையில் குறைவுபட்டோரும் அல்லர். வாலி அறத்தை நீங்கியவன் என்றறிந்து இராமன் உன்னை அரசேற்றி னான். அதைப் போலவே, இராவணன் அறத்தைப் பேணாதவன் என்று இவன் விலகி வந்திருக்கி றான். அரசை அடைய வேண்டும் என்று எண்ணியிருக்கலாம். அதிலென்ன தவறிருக்க முடியும்? இப்ப, நாம இல்லயா? இராமனிடத்தில் நம் விசுவாசம் குறைவானதா? அண்ணனிடமே விசுவாசம் பாராட்டாதவன், அடுத்தவனிடம் எப்படிப் பாராட்டுவான் என்ற உன் வாதம் ஓட்டை வாதம் அல்லவா?

இத்தனைச் சொற்களில் ஒரு சொல்லும் அனுமானால் பேசப்படவில்லை. ஆனால், மேற்கண்ட விருத்தம் உள்ளோட்டமாக உணர்த்தும் கருத்து இதுதானே! சுக்ரீவன் – சுக்ரீவனும் சரி, மற்றவர்களும் சரி – இனி வாய் திறப்பார்களோ?

அடுத்தது இன்னொன்றை எடுத்துப் போட்டான். ‘எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் பிறிவு அருங் கருணையும், மெய்யும், பேணினான்.’ இராமன், கடல் சூழ்ந்த இந்த உலகத்தைத் தன் தம்பிக்கே கொடுத்த இணையற்ற கருணையையும், அவனுடைய மெய்மையே நாடும் தன்மையையும் எண்ணி இங்கே வந்திருக்கிறான். வாதத்தில் கொஞ்சம் வலு ஏறுகிறது.

மற்ற வாதங்களில் கொஞ்சம் தொட்டுவிட்டு, ‘அரக்கர்களை நம்ப முடியாது,’ என்ற வாதத்துக்குத் திரும்புகி றான். ‘செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்’ என்று சுக்ரீவனும், ‘நெறிதனை நோக்கினும், நிருதர் நிற்பது ஓர்குறி நனி உளது’ நல்ல நெறியில் நிற்பவர்கள் என்றாலும் அரக்கர்கள் வஞ்சனையால் நிற்கும் குறி ஒன்று உண்டு; அதை மறப்பதற்கில்லை,’ என்று ஜாம்பவானும், ‘இவன் வந்திருக்கின்ற காலம் (timing), நூல்கள் சொல்லியிருக்கும் சீலங்கள், எதை நோக்கினாலும் இவனை ஏற்க முடியுமா, இவன் அரக்கன் அல்லனா?’ என்று நீலனும் பேசிய பேச்சைக் குறிவைக்கிறான்.

‘நான் சொல்கிறேன். அரக்கனே ஆயினும் இவன் சீலம் உடையவன். நேர்மையானவன். அற நூல்களைக் கற்றவன். நானே நேரடியாகப் பார்த்தேன். என்னைக் கொல்லச் சொல்லி இராவணன் உத்திரவி ட்டபோது, ‘தூதரைக் கொல்வது தவறு,’ என்று நீதியை எடுத்துரைத்தவன் இவன்.’ ம். இப்ப என்ன பண்ணுவீங்க? நான் நேரில் பார்த்திருக்கிறேன். எனக்கே அனுபவமிருக்கிறது.

‘இவன் ஒழுக்கம் உடையவன் என்று எப்படிச் சொல்கிறேன் தெரியுமா? நான் சீதையைத் தேடி வீடு வீடாகப் போன காலத்தில் இவன் வீட்டையும் முழுக்கச் சுற்றிப் பார்த்தேன். ‘நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும் தந்தன கண்டிலேன்,’ பழிப்புக்கு உரிய மதுவும், நல்ல நெறியில் செல்பவர்கள் உண்ணலாகா இறைச்சியும் இவன் வீட்டில் வைத்திருக்கப்படவில்லை. தானம், தருமம், நீதி என்று இவை மேற்கொண்டு ஒழுகுபவர்கள் இல்லம் எவ்வாறு பொலியுமோ, அவ்வாறு பொலிந்திருந்தது இவன் இல்லம்.’ இதுக்கு மேல என்ன வேணும்?

கடைசியாக ஒன்றைத் தூக்கிப் போட்டான் அனுமன். ‘இத்தனையையும் விட்டுவிடுவோம். அங்கே சானகி மனத்தால் திடப்பட்டு இருக்கின்றாள் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. அவளுடைய ஆவி சோரும்போதெல்லாம் அவளின் தளர்ச்சியை நீக்கியவாறு, அவளை திடப்பட உதவியவாறு அவளருகில் ஒருத்தி இருக்கிறாள். திரிசடை என்பது அவள் பெயர். அவள் வேறு யாரும் அல்லள். இதோ, இந்த வீடணனின் மகள்தான்.’

இவ்வளவும் சொல்லி, ‘வந்திருப்பவன் யாராக இருந்தால்தான் என்ன? தீங்கே செய்வதாக இருந்தாலும் என்ன செய்துவிட முடியும்? ‘தன்னைக் கொண்டுவிடும்,’ என்று கிணற்று நீரைப் பார்த்துக் கடல் நீர் அஞ்சுவதா!’ என்பன போன்று இதற்கு மேலும் சில சொல்லி, கடைசி கடைசியாக

‘ஆதலால், “இவன் வரவு நல் வரவே” என உணர்ந்தேன், அடியேன், உன்றன் வேத நூல் எனத் தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்’ என்று விட்டான்.

‘வேதம் எவ்வளவு விரிவானதோ அவ்வளவு விரிவானதும், எவ்வளவு தூரம் அறிய ஒண்ணததாகி, ‘மறை’ என்று அறியப்படுகிறதோ அவ்வளவு தூரம் அறிவால் அறிய ஒண்ணாததாகிய உன் மனத்தில் நீ என்ன எண்ணியி ருக்கிறாயோ, அதை நான் அறியேன். ஆனால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன்,’ என்று முடித்தான்.

கடைசியாக இராமன் நிகழ்த்திய தொகுப்புரையில் ‘வீடணனை ஏன் ஏற்கலாம்,’ என்பதற்கான காரணங்களை வி ரிக்கிறான். இராமனுடைய பாத்திரத்தின் தன்மையையே காட்டுவன. எனவே அவை அனைத்தையும் இங்கே விரி க்க இயலாது என்றாலும், அவன் உரையில் அனுமனின் உரையைப் பற்றிய குறிப்பை இங்கே காண்போம்:

‘மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி; அன்னது அன்று எனின், பிறிதொன்றானும், வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க, பற்றுதல் அன்றி உண்டோ, அடைக்கலம் பகர்கின்றானை?

இனி வேறு என்ன சொல்லவேண்டி இருக்கிறது? மாருதி சொன்னான் தெள்ளத் தெளிவாக ஆராயந்து, வடித்துச் சொன்னான் பாருங்கள் அதுவே சிறப்பு மிக்கது; நாம் செய்யத் தக்கது. அப்படியே இல்லாவிட்டாலும் (எனக்கு மற்ற எதைப் பற்றியும் கவலை இல்லை. இவனுக்கு அடைக்கலம் தருவதால் நாம்) வெற்றி அடைவதாயினும் சரி; தோல்வியைத் தழுவுவதாயினும் சரி; அழிந்து போவதானாலும் சரி; அழியாமல் என்றென்றும் வாழ்வதானாலும் சரி. அடைக்கலம் என்று கேட்டு வந்திருப்பவனுக்கு அதைத் தருவதே நான் செய்வதற்கு உரி யது. அப்படி வந்திருக்கிறவனை, ‘மாட்டேன்,’ என்று ஒதுக்கலாமோ?’

இராமபிரான் மனத்தை அறிந்து, அதற்கேற்பத் தன் கருத்தைப் பேசியவன் அல்லன் மாருதி. He did not do so to please Rama. ‘இராமன் இப்படித்தான் நினைப்பான்,’ தேர்ந்து, அதற்கொப்ப ஒரு கருத்தைச் சொன்னான் அல்லன். ‘உன் மனத்தில் எனன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது; மற்றவர்கள் எல்லோரும் மறுத்தார்கள்; இருந்த போதிலும் நான் இதைச் சொல்கிறேன். இவன் ஏற்கத்தக்கவனே,’ என்று இராமனுடைய கருத்தை அறிய வாய்ப்பே இல்லாத தருணத்தில் தன் கருத்தை வெளியிட்டான். அடியவன் உள்ளமும், ஆண்டவன் உள்ளமும் ஒன்றே போல் இருந்தன. உயர்ந்ததையே எண்ணி, உயர்ந்ததையே பேசின. ஆகவே அவர்களுடைய கருத்தை ஏற்பதில் யாருக்கும் மாறுபாடிருக்கவில்லை. ஏனெனில், ஏற்பது உயர்ச்சி. உயர்வானதையே உலகம் ஏற்கும்.

அன்புடன், ஹரி கிருஷ்ணன்

அனுமன்-56 : கருத்தறிவித்தல்

எந்த ஒரு நிறுவனமாயினும் – வணிகம் சார்ந்த அல்லது சாராத நிறுவனங்கள் எவையானாலும் – ஒரு கருத்து உருப்பெறுவது எப்போதும் மேலிருந்துதான். மேலே தொடங்கி அது மெது மெதுவாகக் கீழ் நோக்கிப் பரவுகி றது. ஒவ்வொரு அடுக்கைக் கடக்கும் போதும் அது, அந்தந்த அடுக்கில் இருப்போரின் தன்மையை உறிஞ்சிக் கொண்டு அங்கங்கே சிறிதளவு மாற்றம் பெறுகிறது. It simply percolates. ஆனால், அதன் அடிப்படைத் தன்மை மாறுவதில்லை. எனவேதான், மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தக் கூடிய முடிவுகளை எடுப்பதற்காகக் கூட்டப்படும் கூட்டங்களில், இடமறிந்து பேசக் கூடிய நிறுவனத் தலைவர்கள் எடுக்கப் போகும் முடிவில் தங்களுடைய கருத்து என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். தன் வி ருப்பம் இன்னது என்று தெரியுமானால், அது வெளியிடப்படும் கருத்துகளின் தன்மையைப் பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்ந்தே அவ்வாறு செய்வார்கள்.

‘இப்படி ஒரு செயலை மேற்கொள்ளப் போகிறோம். இதனால் நன்மை ஏற்படும் என்று நினைக்கி றீர்களா, அல்லது தீமை ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?’ என்று ஒரு நிறுவனத் தலைவர், தன் கீழ் பணி யாற்றும் பல்வேறு துறைத்தலைவர்கள் கூடியிருக்கும் ஒரு கூட்டத்தில் கேட்பதாக வைத்துக்கொள்வோம். கருத்துகள் எந்தவிதத் தயக்கமும் இன்றி சரளமாக வெளிவரும். ‘இதனால் ஏற்படப் போவது நன்மையா, தீமையா என்று ஆய்ந்து சொல்லுங்கள். நன்மை ஏற்படும் என்றே நான் கருதுகிறேன்,’ என்று தன்னுடைய கருத்தை நிறுவனத் தலைவர் தொடக்கத்திலேயே தெரிவித்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? தெளிவும், உறுதியும் உள்ளவர்கள் மட்டும்தான் அதற்கு மாற்றுக் கருத்து ஏதும் உண்டெனில் அதனை வெளியி டுவார்கள். மற்றவர்களிடமிருந்து வரவேற்பு மட்டும்தான் கிடைக்கும். ஏனெனில், இது நிறுவனத் தலைவருக்கு உகந்த கருத்து. இதை ஆதரித்து மட்டும்தான் பேசுவது நல்லது என்றொரு எண்ணம் தொடக்கத்திலேயே ஊ ன்றப்பட்டுவிடுகிறது. நிறுவனத் தலைவருடைய தன்மையையும், கருத்துச் சுதந்திரத்தை அவர் ஊக்குவிக்கும் போக்கையும் சார்ந்து இந்த நிலையில் சற்றே மாற்றம் தோன்றலாம். ஆனாலும், அவருடைய கருத்து இன்னது என்று தெரிந்த பின்னர் அதற்கு மாற்றுக் கருத்து சொல்லப் பெரும்பாலானவர்களுக்குத் தயக்கமே ஏற்படும்.

இந்தப் பின்புலத்தோடு வீடணன் அடைக்கலப் படலத்தில் இராமன் எடுக்கப் போகும் முடிவு விவாதிக்கப் படும் வி தத்தை அணுகினால், இராமன் எப்படிப்பட்ட தேர்ச்சிபெற்ற நிர்வாகி என்பது புலனாகும். இந்தக் கட்டம் வால்மீகி இராமாயணத்தில் விவரிக்கப்படும் விதத்திலிருந்து பெரிதும் வேறுபடுகிறது கம்ப இராமாயணத்தி ல். மிக இயல்பான உரையாடலாக வால்மீகி விவரிக்கும் இந்த – வீடணனை ஏற்கலாமா, வேண்டாமா – வி வாதம் கம்பனுடைய கைகளில் ஒரு காலை-நேர-வர்த்தகக்-கூட்டம் – a breakfast business meeting – எவ்வளவு சீராக, ஒரே போக்கில் இயங்கும் தன்மையுடன் விறுவிறுவெனச் சுழன்று இயங்குமோ அவ்வாறு இயங்குகிறது.

அடைக்கலம் நாடி வரும் வீடணன், இராமனுடைய முன்னிலைக்கு வந்து சேரும் விதமே கம்பனில் முற்றிலும் வேறுபடுகிறது. சுக்ரீவனாலும் மற்ற வானரங்களாலும் எதிர்கொள்ளப்பட்டு, இவனை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று ஒவ்வொருவர் ஒவ்வொருவிதத்தில் – ஆனால் ஒவ்வொருவரும் ‘வேண்டாம்’ என்ற கருத்தையே வலியுறுத்திய பிறகு – அனுமன்,

ந வாதான் ந அபி ஸம்கர்ஷான் ந ஆதிக்யான் ந ச காமதா வக்ஷ்யாமி வசனம் ராஜன் யதா அர்த்தம் ராம கெளரவாத்

என்று தன் உரையைத் தொடங்குகிறான். (வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 17, சுலோகம் 52). ‘இராமா! அரசனே! நான் வாதம் செய்வதற்காகவோ, (மற்றவர்கள் தெரிவித்த கருத்துக்கு எதி ர்க்கருத்தாகவோ அல்லது) போட்டிக்காகவோ, மற்றவர்களைப் பார்க்கிலும் சிறந்தவன் என்று நிலைநாட்டிக் கொள்ளவோ, அல்லது ஒரு பக்கமாகச் செலுத்தப்படும் வேட்கை உணர்வினாலே இவ்வாறு பேசவில்லை. நம்முடைய (விவாதத்துக்கு உரித்தான) இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதியே பேசுகிறேன்.

என்று தொடங்கி, ஏன் வீடணன் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் என்று விவரித்த பிறகு இராமனுடைய உரை தொடங்குகிறது.

மமாபி து விவக்ஷ¡ அஸ்தி காசித் ப்ரதி விபீஷணம் ஷ்ருதம் இச்சாமி தத் ஸர்வம் பவத்பி ஷ்ரேயஸி ஸ்திதா (மேற்படி, சர்க்கம் 18, சுலோகம் 2)

விபீஷணனைப் பற்றிய என் கருத்தை நானும் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய நலத்தை நாடுவதில் கருத்தூன்றியுள்ள நீங்கள் அனைவரும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு தொடங்கும் இராமனின் உரை, ‘அடைக்கலம் நாடி வந்தவனை ஏற்கத்தான் வேண்டும்,’ எனத் தொடர்ந்து, வீடணனை ஐயுற்றுப் பேசும் சுக்ரீவனுக்கு, ‘அது பிசாசாயினும் சரி; அரக்கனாயினும் சரி; யட்சனாயினும் சரி. எனக்குத் தீங்கிழைக்க யாராலும் முடியாது. ‘அங்குலி அக்ரேண தான் ஹன்யாம் இச்சான் ஹரி கணா ஈஷ்வர,’ (மேற்படி, சுலோகம் 23 முன் பாதி) நான் விரும்பினால், வானரக் கூட்டங்களி ன் தலைவனே, என் விரல் நுனியால் கொல்வேன்,’ என்று அறுதியிட்டுச் சொல்வது வரை செல்கிறது. Rama gets assertive, if not a bit aggressive.

வால்மீகியின் விவரிப்பும் சரி; கம்பனின் விவரிப்பும் சரி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை உடையவை. வால்மீகியின் சுக்ரீவன், இராமனுக்கு நண்பன். கம்பனின் சுக்ரீவன், இராமனிடத்தி ல் அடைக்கலம் புகுந்தவன். இந்த வேற்றுமையைக் கவனத்தில் இருத்தினால்தான், கம்பன் ஏன் இந்த இடத்தில் தன் சித்திரத்தை வேறுபடுத்திக் காட்டுகிறான் என்பது புலனாகும். இராமன் என்னும் அரசனிடத்திலே (சரி, அரசு துறந்திருக்கும் அரசனிடத்திலே) சுக்ரீவன் என்னும் அரசன் பேசுகின்ற விதமும், இராமன் என்ற அரசு துறந்திருக்கும் அரசனிடத்தில் அடைக்கலம் புகுந்தவனான சுக்ரீவன் பேசும் விதமும் ஒன்றே போல் இருக்க முடியாது. இந்த வேறுபாடுகளை வீடணன் பாத்திரத்தை ஆயும் போது விரிவாகப் பார்ப்போம். இவற்றைப் பேச இது இடமில்லையாயினும் இராமன்-சுக்ரீவன் உறவு முறையில் தான் செய்திருக்கும் இந்த மாறுதலைத் தொடர்ந்து, எந்தெந்த இடங்களில் என்னென்ன மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்பதையும்; எவ்வாறு இழைத்தால் – இழைத்தால் மட்டுமே – நாடகத்தின் இயல்பான ஓட்டமும், பாத்திரப் படைப்பின் தன்மையும் கெடாமல் இருக்கும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துக் காட்சிகளை அமைத்திருக்கும் கம்பனென்ற கவிகளுக்கெல்லாம் கவியை வியக்காமல் இருக்க முடியவில்லை.

நண்பர்களுக்கிடையில் நடக்கும் உரையாடலாக வால்மீகி தீட்டிய சித்திரத்தின் சில தீற்றல்களை மட்டும் நம்முடைய தற்போதைய தேவைக்கான அளவு எடுத்து வைத்தேன். இப்போது கம்ப சித்திரத்தின் பக்கம் தி ரும்புவோம்.

அனுமனால் அனுப்பப்பட்ட மயிந்தன்-துமிந்தன் ஆகிய இருவரும் வீடணனையும், அவனோடு கூட வந்தி ருக்கும் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய – இராவணனின் போக்கை வெறுத்த – நான்கு அரக்கர்களையும் (நால்வரும் இராவணனின் அமைச்சர்களாக விளங்கியவர்கள்; வீடணன் முதன்மையான அமைச்சன்) சந்தித்துப் பேசி, அவர்கள் நோக்கத்தை அறிந்து, அவர்களை தனி யாக அமரவைத்துவிட்டு, இராமனிடத்தில் வந்து செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். வீடணனுடைய நோக்கம் இன்னது என்பதை உரைக்கிறார்கள். இராமனைச் சுற்றிலும் வானர, கரடித் தலைவர்கள் நிற்கி றார்கள். வால்மீகியில் நிகழ்வது போன்ற உரையாடல் எதுவும் இல்லை. தன்னைச் சுற்றி ஒரு பார்வை பார்க்கிறான் இராமன்.

அப்பொழுது இராமனும் அருகில் நண்பரை, ‘இப் பொருள் கேட்ட நீர் இயம்புவீர். இவன் கைப்புகற்பாலனோ, கழியற்பாலனோ – ஒப்புற நோக்கி, நும் உணர்வினால்’ என்றான்.

இதோ (மயிந்தன்-துமிந்தன் ஆகிய) இந்த இருவரும் சொன்னதை எல்லோரும் கேட்டீர்கள். உங்களுடைய மதி நுட்பத்தால் ஆய்ந்து சொல்லுங்கள். (நம்மை நாடி வந்திருக்கும் வீடணனாகிய) இவன், அடைக்கலமாக ஏற்றுக்கொள்ளத் தக்கவனா, அப்புறமாகத் தள்ளத் தக்கவனா?

இந்தக் கூட்டம் முடியும் அளவிலும் இராமன் பேசுவது இந்த இரண்டே வாக்கியங்கள்தாம். ‘இவன் ஏற்றுக் கொள்ளத்தக்கவனா இல்லையா என்பதை உங்கள் மதி நுட்பத்தால் ஆய்ந்து எனக்குச் சொல்லுங்கள்.’ கவனி யுங்கள். இராமன், தன் கருத்து இன்னது என்பதைத் தெரிவிக்கவில்லை. தேர்ந்த நிர்வாகிகள் எவ்வாறு தம் கருத்தை மறைத்துக்கொண்டு, மற்றவர்கள் சரளமாகவும், தயக்கமின்றியும் தங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவி க்க வழி ஏற்படுத்திக் கொடுப்பார்களோ அவ்வாறு இரண்டே வாக்கியத்தில் தன்னுடைய தொடக்க உரையை முடித்துக் கொள்கிறான். அதைத் தொடர்ந்து, ஒவ்வொருவராக எழுந்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவி க்கும்போது குறுக்கிட்டுப் பேசுவதோ, ‘நான் விரும்பினால் என் ஒற்றை விரல் நுனியால் எவனாக இருந்தாலும் கொல்வேன்,’ என்பன போன்ற உணர்ச்சி மிகுந்த வாக்கியங்களைச் சொல்வதோ இல்லை. முற்ற முழுக்க அமைதியாக இருந்து மற்றவர்களைப் பேச அனுமதிக்கிறான் என்பது நோக்கத்தக்கது. (ஆயின், வால்மீகியின் சித்திரம் குறைவுபட்டதென்று சொல்லப் புகுந்தேனல்லன். நாம் மேலே சொன்னபடி, அதன் பி ன்னணி வேறு; இங்கே கம்பன் விவரிப்பின் பின்னணி வேறு.)

இந்தக் கூட்டத்தில் சுக்ரீவனின் முதல் உரை, வால்மீகியை ஒட்டியே அமைகிறது. அங்கே,

சுதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா கிமமேஷ ராஜனீசர ஈத்ரீஷம் வ்யாஸானம் ப்ராப்தம் ப்ராதாரம் ய பரித்யஜேத்

கோ வாம ச பவேத்தஸ்ய யமேஷ ந பரித்யஜேத் (வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 18, சுலோகம் 5 மற்றும் 6 முன்பாதி)

இந்த அரக்கன் துஷ்டனாகட்டும், இல்லாமல் போகட்டும். (அதைப் பற்றி என்ன?) தன் அண்ணனையே ஒருவன் புறக்கணித்தான் (காட்டிக் கொடுத்தான்) என்றால் மற்ற யாரை அவன் புறக்கணிக்க மாட்டான்?

என்று எவ்வாறு பேசுகிறானோ அவ்வாறே கம்பனின் சுக்ரீவனும் பேசுகிறான்.

‘வெம்முனை விளைதலின் அன்று; வேறு ஒரு சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று; தம்முனைத் துறந்தது, தரும நீதியோ? செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்?

அண்ணனை இவன் ஏன் விட்டு நீங்கினான்? அதற்குக் காரணம் என்ன? அவன் என்ன இவனோடு போர் தொடுத்தானா? இல்லையென்றால் பாரமான (பாறைகளை) இவன் மீது வீசிக் கொல்லக் கருதி னானா? அவ்வாறு செய்யாத போது இவன் அண்ணனைத் துறந்தது ஏன்? அரக்கரில் நல்லவர் என்று ஒருவர் உண்டா?

‘வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள், சீர்க்கு உறவாய், இடைச் செறுநர் சீறிய போர்க்கு உறவுஅன்றியே போந்தபோது, இவன் ஆர்க்கு உறவு ஆகுவன், அருளின் ஆழியாய்!

வீரக் கழலை அணிந்த இராவணன் வாழ்ந்த காலத்தில் அவனோடு சேர்ந்து வாழ்ந்துவிட்டு, அவனுடன் அத்தனை இன்பங்களையும் துய்த்துவிட்டு, இடையில் போர் மேற்கொண்டு பகைவர் வந்த போது அண்ணனுடன், அவனுடைய போருக்கு உறவாகாமல், பகைவரிடம் வந்து தஞ்சம் புகுவானானால், இவன் யாருக்குத்தான் உறவாக முடியும்?

Faux pas என்று சொல்வார்கள். தவறான, ரசக்குறைவான நடத்தை. அதுவும் பொது இடத்தில்; எல்லோருக்கும் முன்னிலையில். சுக்ரீவர் இவ்வளவு தூரம் வரிந்துகட்டிக் கொண்டு, ‘அண்ணனை விட்டு நீங்கிய வீடணனை,’ இடக்காகப் பேசிக்கொண்டு வரும்போது, ‘நீ என்ன செய்தாய்?’ என்றொரு கேள்வி எழ இடமி ருக்கிறது என்பதனை உணரவில்லை. அதற்கும் ஒரு வரம்பு கட்டிக்கொள்கிறான் கம்பனின் சுக்ரீவன். ‘அவனென்ன சண்டை போட்டானா? பெரிய பாறைகளை வீசிக் கொல்ல நினைத்தானா?’ என்று அவன் எழுப்பும் கேள்வியில் ‘எங்க அண்ணனாவது அதையெல்லாம் செய்தான்,’ என்ற செய்தி மறைமுகமாக வெளிப்படுகிறது. இருந்த போதிலும், சுக்ரீவனுடைய பேச்சைக் கேட்கும் போதே சிறிய புன்னகை செய்துகொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒருவருடைய கருத்துக்கும் மறுமொழி ஏதும் சொல்லாமல் – ஏன், முகக் குறிப்பாலும் தன் உள்ளத்தில் தோன்றுவனவற்றை வெளிக்காட்டாமல் – அடுத்தது, அடுத்தது என்று ஒவ்வொருவராக இராமன் அழைக்க, ஒவ்வொருவரும் சுக்ரீவனின் கருத்தையே ஒட்டிப் பேசுகிறார்கள். இவர்களில் நீலனுடைய பேச்சு கவனிக்கத் தக்கது. ‘எதிரியின் பக்கத்திலிருந்து யார் யாரை நம் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்,’ என்று இலக்கணம் சொல்கிறான் நீலன். நீலனுடைய இந்தப் பேச்சும், சன் த்சுவின் Art of War இதைக் குறித்துச் சொல்லும் இலக்கணமும் மிக நெருக்கமாக ஒத்துப் போவதைக் காணலாம். இவையெல்லாம் விரிவாக நோக்கத் தக்கன. பின்னால், உரிய இடத்தில் காண்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னாலும், வீடணனை ஏற்பதை யாரும் விரும்பவில்லை என்ற கருத்தைச் சுற்றியே – வான்மீகத்தைப் போலவே – அனைவரின் பேச்சும் சுழல்கிறது.

அனைவரும் பேசி முடிக்கும் வரையில் அனுமன் அமைதியாக இருந்தான். இது வான்மீகம் காட்டும் சித்தி ரத்தைத் தலை கீழாக மாற்றி அமைத்த அனுமனின் குணசித்திரம். அங்கே அனுமன்தான் வீடணனை ஏற்பது பற்றி பேசப் புகுந்து, உரையாடலைத் தொடங்கி வைக்கிறான். இங்கே, அனுமனின் உரையே கடைசி உரை. அதாவது தலைவரின் முடிவுரைக்கு முந்திய உரை. இராமன் தன்னை அழைத்துப் பேசச் சொல்லும் வரையில் அசையாமல் இருக்கிறான் அனுமன். ஒரு கருத்தரங்கம் நடைபெறும்போது காட்ட வேண்டிய பெரிய பண்பு இது. நிறுவனங்கள் நடத்தும் வாராந்தர, மாதாந்திரக் கூட்டங்களிலும், தேர்ந்த நலம் பொருந்தி யவர்கள் இப்படிப்பட்ட பண்பை வெளிக்காட்டுவதைக் காணலாம். தன் முறை வரும்வரையில் அமைதியாகக் காத்தி ருத்தலும், அடுத்தவர் பேசும்போது குறுக்கிடாமல் இருத்தலும் ஒவ்வொரு நிர்வாகியும் இத்தகைய தருணங்களில் மேற்கொள்ள வேண்டிய ஒன்று. இராமனும் சரி; அனுமனும் சரி, இந்த விதியை மிகத் துல்லியமாக அனுசரி ப்பதைக் காண்கிறோம். எல்லோரும் முடித்தார்கள். கடைசி கடைசியாக அனுமனைப் பார்த்தான் இராமன்.

‘உறு பொருள் யாவரும் ஒன்றக் கூறினார் செறிபெருங் கேள்வியாய்! கருத்துஎன், செப்பு’ என, நெறி தரு மாருதி என்னும் நேர்இலா அறிவனை நோக்கினான், அறிவின் மேல் உளான்.

அறிவினால் போய் எட்டித் தொட முடியாதவனாகிய (முழு முதலான) இராமன், ‘பெரிய கல்வி கேள்விகளை உடையவனே, ஆஞ்சநேயா! நாம் இப்போது செய்யத்தக்கது என்ன என்பது பற்றி எல்லோரும் தங்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லிவிட்டார்கள். உன் கருத்து என்ன? (ஏன் வாய் மூடி இருக்கிறாய்?) சொல்,’ என்றான்.

‘இவ்வளவு பேர் பேசிவிட்ட பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது?’ என்ற படி எழுந்தான் மாருதி.

‘எத்தனை உளர், தெரிந்து எண்ண ஏய்ந்தவர், அத்தனைவரும், ஒரு பொருளை, “அன்று” என, உத்தமர், அது தெரிந்து உணர, ஓதினார்; வித்தக! இனி, சில விளம்ப வேண்டுமோ?

இவ்வளவு உத்தமமான அறிவுடைய (இந்தக் கூட்டத்தில் பேசிய) பெருமக்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்! எவ்வளவு ஆழமாகவும், நுட்பமாகவும் தெரிந்து எண்ண வல்லவர்கள் எல்லோரும்! அத்தனைப் பேரும், ‘இது ஏற்கத் தகுந்தது அன்று, ‘ என்று உத்தமமானவர்களாகச் சொன்னார்கள். சொல்வதை மனம் கொள்ளுமாறு, உணருமாறு சொன்னார்கள். இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டுமோ?

எல்லோரும் சொன்ன கருத்துக்கு எதிர்க் கருத்து சொல்லும் முன்னால், அவைக்குச் சொல்லும் முகமன். ‘உங்கள் எல்லோருடைய கருத்தையும் மறுக்கப் போகிறேன்,’ என்பதற்குச் செய்யும் பூர்வ பீடிகை. அங்கே வீடணனை ஏன் ஏற்க வேண்டும் என்று தன் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்ல வேண்டியது மட்டுமின்றி, ‘அண்ணனை வி ட்டு அகன்று வந்தவன்,’ என்று தன் நிலை உணராது பேசிய சுக்ரீவனுடைய மனம் நோகாமல் அவன் பேசியது தவறு என்பதையும் சுட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் இருந்தது மாருதிக்கு. ஏனெனில், அவனன்றோ, இராம-சுக்ரீவ உறவை உருவாக்கியவன்!

தொடர்வேன்…

அன்புடன்
ஹரி கிருஷ்ணன்.

அனுமன்-55 : இலக்குகளை நிர்ணயிப்பதும், அடைவதும்…

இன்றைய உலகத்துக்கு இராமாயணத்திலிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா என்றொரு கேள்வி எழுமானால், ‘நிறைய,’ என்பதுதான் விடையாக இருக்கும். ‘அதென்ன அப்படி இருக்க முடியும்,’ என்று தோன்றலாம். அன்றைய சூழல்களும் இன்றைய சூழல்களும் ஏராளமான மாறுதல்களுக்கு உட்பட்டவை அல்லவா, சூழலும், வாழ்க்கை முறையும், வாழ்வை அணுகும் விதமும் இன்ன பிறவும் மாறிய பிறகும் அங்கே கற்றுக்கொள்ள அப்படி என்னதான் இருக்கும் என்றும் தோன்றலாம். ஆனால், என்றுமே மாறாத சில அம்சங்கள் உண்டு, வாழ்வில். எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான நடத்தைகள், பண்பு நலன்கள், முன்மாதிரிகள் என்று ஏராளமானவை உண்டு. அந்த விதத்தில் இராமாயணமும் சரி, மகாபாரதமும் சரி, தன்னகத்தே மிகப் பல முன்னுதாரணங்களைக் கொண்டவையாக விளங்குகின்றன. விழியுள்ளவன் பார்க்கக் கடவன்.

வாழ்வின் எந்தத் துறையில் ஈடுபட்டவாராயினும் சரி. இராமாயண, பாரதங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டியவை அவரவர்க்குத் தனித் தனியாக இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, நிர்வாகத் துறையைப் பார்த்தால், ஒவ்வொரு நிர்வாகியும் அறிந்திருக்க வேண்டிய கலை கூட்டங்களை நடத்துவது. வாராந்தர, மாதாந்தரக் கூட்டங்களைக் கூட்டுவதும், தன்னிடத்தில் அல்லது தன்னோடு பணியாற்றுபவர்களின் கருத்துகளை அறிவதும் ஒவ்வொரு நிர்வாகியும் செய்வதுதான். ஆனால், பெரும்பாலான கூட்டங்கள் இலக்கற்றுச் சுற்றிச் சுழலும். நிகர லாபம் சமோசாவும் தேநீரும். கூடவே, அடுத்த கூட்டம் வரையில் எடுத்துக் கூட பார்க்க எண்ணாத கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள்!

ஒரு கூட்டத்தை நடத்துவது எப்படி, விவாதத்துக்கு எடுத்துக் கொண்டுள்ள பொருளை விவரிப்பது எப்படி, துவக்க உரை எப்படி அமைய வேண்டும், என்ன மாதிரியான துவக்க உரை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்…. எல்லா வகையான விவரங்களும் கதை வடிவில் அரங்கேறுகின்றன.

இராமாயணத்தில் இவ்வாறு நடைபெறும் மூன்று கூட்டங்கள் முக்கியமானவை. தசரதன் நடத்தும் முதற் கூட்டம். இராமனுக்கு முடி சூட்டுவது பற்றி. இராமன் நடத்தும் இரண்டாவது கூட்டம். வீடணனுக்கு அடைக்கலம் தருவது பற்றி. இராவணன் நடத்தும் மூன்றாவது கூட்டம். யுத்தம் தொடங்கப் போகிறதே, என்ன செய்யலாம் என்று கேட்கத் தொடங்கிய கூட்டம்.

இந்தக் கூட்டங்களில் பங்கேற்க யார் யார் அழைக்கப்படுகிறார்கள், இரகசியம் என்பது எப்படிக் காப்பாற்றப்படுகிறது, ஒவ்வொரு நிர்வாகியும் – தசரதன், இராமன், இராவணன் – எப்படிப் பேச்சைத் தொடங்குகிறார்கள், எப்படி விவரங்களைத் தருகிறார்கள், எப்படித் தங்களுக்கு வேண்டிய விவரங்களைப் பெறுகிறார்கள், இன்றைய நிர்வாகச் சூழலில் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறதே, (கருத்துத்) திறவாண்மை – transparency – அது எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது, தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு எவ்வளவு தூரம் மதிப்பளிக்கபடுகிறது, எடுக்கப்படும் முடிவுகளுக்கும் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கும் மாறுபாடு இருந்தால், தேவையான விளக்கங்கள் அளிக்கப்படுகின்றனவா…. எவ்வளவோ சொல்லலாம் இந்த மூன்று கூட்டங்களையும் சற்றே கூர்ந்து கவனித்தால், ஒப்பிட்டுப் பார்த்தால். இந்த ஒப்பீட்டைச் செய்ய உகந்த இடம் வீடணன் அடைக்கலப் படலம்தான். ஆனால் இந்த ஆய்வுக்கு ஏற்ற பின்புலமோ, வீடணன் பாத்திர ஆய்வுதான். அப்போது எல்லா விவரங்களையும் பார்க்கலாம்.

என்றாலும், இப்போது அனுமனுடைய பாத்திரப் படைப்பின் தன்மையை வெளிக்கொணரும் அளவுக்கு நமக்குத் தேவையானதைக் காண்போம்.

வீடணன் அடைக்கலப் படலம் இரண்டு விதங்களில் அனுமனின் சிறப்பை வெளிப்படுத்துகிறது என்று நாம் குறிப்பிட்டோம். (அனுமன் 53: இடையில் கொஞ்சம் வீடணன்) வீடணன் வாய் மொழியாக, அனுமன் இலங்கையில் விளைத்த போராற்றல் வெளிப்பட்டுத் தோன்றிய விதத்தைப் பார்த்தோம். தன்னடக்கம் மிகுந்தவனாகவும், தன் பெருமையைப் பேசத் தெரியாதவனாகவும் நின்ற மாருதி இலங்கையில் விளைத்தது ஏதோ சில – கைகலப்பு என்பதற்கும் மேலான – போர்கள் என்பதும், தன் வாலுக்கு வைக்கப்பட்ட தீயை வைத்தவர்கள் ஊருக்கே திருப்பிவிட்டதுமான – இன்னொரு சாமர்த்தியமான, ஆற்றல் மிக்கதே ஆயினும், கொளுத்திப் போட்டுவிட்டுத் திரும்பிய குரங்கு வேலை என்பது போன்ற தோற்றத்தைத் தருகின்றன.

ஆனால் உண்மையில் நோக்கத் தக்கது எது என்றாலோ, விளைத்தது எது என்பதை விடவும், விதைத்தது எது என்பதுதான். இதைத்தான் நாம் முன்னொரு அத்தியாயத்தில் கண்டோம். (கொடுத்த காரியமும் எடுத்த காரியமும்… அனுமன் 40). அனுமன் அன்று இலங்கையில் நடத்தியது ஒரு முன்னோட்டம். ஆனால், மிகத் தெளிவான, திட்டமிடப்பட்ட, விரைவான, வினாடிக்கு வினாடி மாறக் கூடிய சூழலில், முடிவெடுக்க மேலிடத்தார் அருகில் இல்லாத நிலையில் மிகக் கூர்மையாக, மிக ஆழமாக, மிக கவனமாக, மிக மிகத் திறமையாக நடத்தப்பட்ட ஆட்டம் அது. அன்று அனுமன் நடத்தியது ஏதோ இன்னொரு கைகலப்பும், கட்டுக்கடங்காத சூழலில் கட்டுப்படுத்தப்பட்டு, கட்டப்பட்டு எதிரியின்பால் கொண்டு செல்லப்பட்டபோது பேசிய பேச்சும், சும்மா ஏதோ ஊர் முழுக்கத் தீ வைத்துவிட்டுத் திரும்பியதும் அன்று. அன்று அனுமன் விதைத்தது அச்சத்தை. ‘பெண்களின் கூந்தல் பொசுங்கிப் போன நாற்றம் என்ன முயன்றாலும் போக மாட்டேனென்கிறது,’ என்று இராவணனே தன்னுடைய மந்திராலோசனைக் கூட்டத்தில் குறிப்பிடுகிறான்.

‘ஊறுகின்றன கிணறு உதிரம்; ஒண் நகர் ஆறுகின்றில தழல்; அகிலும் நாவியும் கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு நாறுகின்றது. நுகர்ந்திருந்தம் நாம் எலாம்.

கிணற்றில் என்ன தண்ணீரா ஊறுகிறது! எந்தக் கிணற்றைப் போய் எட்டிப் பார்த்தாலும் குருதியல்லவா நிறைந்திருக்கிறது! ஒளி பொருந்திய இந்த நகரத்தைப் பொசுக்கிய தழலின் தீவிரம் இன்னும் ஆறியபாடில்லை.

அகிலும், கஸ்தூரியும் இட்டு நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்த மங்கையர்களின் கூந்தலில் எல்லாம் முடி பொசுங்கிய நாற்றம் அடிக்கிறது. (வெட்கம் கெட்டுப் போய் இந்த நாற்றத்தையும்) முகர்ந்து கொண்டுதானே இருக்கிறோம் நாம் எல்லாம்!

அந்தப் பொசுங்கிப் போன வாடை பொறுக்காமல் இராவணன் போய் ஒரு வார காலம் தேவலோகத்தில் தங்கியிருந்தானாம். வீடணன் இராமனிடத்தில் தெரிவிக்கிறான்.

‘விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த கலங்களோடும், அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள் இலங்கை வேந்தனும், ஏழு நாள் விசும்பிடை இருந்தான்!

(உடைந்து விழுந்த மலை முகடான) இலங்கை அன்று எப்படி வெந்தது என்பதைச் சொல்ல வேண்டுமானால், வேறெதையும் குறிப்பிட வேண்டியது இல்லை. அன்று அணிந்திருந்த மாலை, சந்தனம் மற்றும் அணிகலன்களோடும், அன்று உடுத்தியிருந்த ஆடையோடும், (மாற்றுத் துணி கூட இல்லாமல்) இலங்கை வேந்தன் ஏழு நாள் தேவலோகத்தில் போய் தற்காலிகமாக இருக்கை கொண்டான்.

அனுமன் இலங்கையில் விளைத்த போரும், இராவணனோடு நடத்திய உரையாடலும், அதன் பின்னர் வைத்த தீயும் அவ்வளவு ஆழமான விளைவை ஏற்படுத்தியிருந்தது, இலங்கை முழுவதும். இராமனும், எழுபது வெள்ளம் அளவினதான வானர சேனையும் வந்து இலங்கையில் இறங்கும்போது, ‘ஒரே ஒரு குரங்கு வந்து போனதற்கே இலங்கை எரிந்ததே! இத்தனைக் குரங்குகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்!’ என்ற பீதி பரவ வேண்டும். அனுமன் அடைய நினைத்த இலக்கு அது. தன் கூட்டத்தார் உள்ளே நுழையும் போது, ‘வெறும் குரங்குகள்தாம் வந்திருக்கின்றன,’ என்ற நினைப்பு சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டு, கொஞ்சமேனும் அச்சத்தோடு – பெரிய தலைவர்கள் இல்லாவிடினும் – மற்ற அரக்கர்கள் அணுக நினைப்பர் அல்லவா, அந்த எண்ணமே அனுமன் நிர்ணயித்துக் கொண்ட முதல் இலக்கு.

இலக்குகளை நிர்ணயிப்பதும், அடைவதும் என்று சொல்வார்கள் நிர்வாகிகள். Goal Setting and Achieving. ஜோஸ் சில்வாவும் பர்ட் கோல்ட்மேனும் (Jose Silva and Burt Goldman) இணைந்து எழுதிய Silva Mind Control Method of Mental Dynamics விரும்பிய இலக்கை நிர்ணயிப்பதற்கும், நிர்ணயித்த இலக்கை அடைவதற்கும் ஐந்து அடிப்படை விதிகளைச் சொல்வார்கள்.*

1. என்ன பயிரடப் போகிறாய் என்பதைத் தீர்மானி. அதற்கான விதைகளைத் தேர்ந்தெடு. கேரட் விதைகளைப் பயிரிட்டால், டர்னிப் விளையப் போவதில்லை.

2. நிலத்தைத் தயார் செய். (தொழிலறிவர்கள், உண்மையான வேலையில் செலவிடுவதைக் காட்டிலும், தயார் செய்வதில்தான் அதிக நேரத்தைச் செலவிடுவார்கள். முதிர்ச்சியற்றோர், சுருக்கமாகவும், விரைவாகவும் முடிப்பதாக நினைத்துக் கொண்டு தயார்செய்வது என்னும் முக்கியமான வேலையை விட்டுவிடுவார்கள். நிலத்தைத் தோண்ட வேண்டும்; உழ வேண்டும், கொத்த வேண்டும்; ஊட்டச் சத்தைப் பரப்ப வேண்டும். நிறைந்த பயனை எதிர்பார்ப்பாயானால்.

3. விதைகளை விதை. (தொடங்கு. விதைகள் பொட்டலங்களிலோ அல்லது உன் சட்டைப் பையிலோ முளைப்பதில்லை. அவற்றை விதைக்காமலேயே விட்டுவிட்டால், அவை முளைக்குமா, வளருமா என்ற கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது!)

ஜோஸ் சில்வாவின் பட்டியலோடு அன்று இலங்கையில் அனுமன் விளைத்ததையும், விதைத்ததையும் ஒத்திட்டுப் பாருங்கள்.

இந்த மூன்று காரியங்களும் நடைபெற்றிருப்பது தெரியவரும். விதி எண் நான்கும், ஐந்தும் – வளர்த்தலும், அறுவடை செய்தலும் – இப்போது பேச ஒண்ணாதவை. அனுமன் விதைத்த விதை எவ்வாறு வளர்ந்தது; எப்படி எல்லோரும் சேர்ந்து வளர்த்தார்கள்; எப்படிப் பயனை அறுவடை செய்தார்கள் என்பதையெல்லாம் பேச இது நேரமில்லை. எனினும், இலக்கை நிர்ணயிப்பதற்கும், அடைவதற்குமான செயல்பாட்டில் ஐம்பது சதத்துக்கும் மேற்பட்ட செயல்களை அனுமன் தனி ஒருவனாக நின்று செய்திருக்கிறான் என்பது கவனிக்கத் தக்கது.

அதைவிடவும் அதிகமாகக் கவனிக்கத் தக்கது, இவ்வளவு பெரிய ஆற்றல் வாய்ந்த செயல்களைச் செய்திருக்கிறேன் என்று வந்து இந்த இடத்தில் பேசக் கூட பேசாமல், அடுத்த காரியத்தில் முனைப்பாக இறங்கியது. ‘தனக்கு ஒரு நன்றி தெரிவிக்கக் கூட யாருக்கும் தோன்றவில்லையே,’ என்ற எண்ணம் கூட ஏற்படாமல், செயல் ஒன்றே கருத்தாக இறங்கித் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருந்த தன்மை. அதை விடவும் அதிகமாகக் கவனிக்க வேண்டியது, இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்ட இராமன் மனம் பெரிதும் மகிழ்ந்து போய் பாராட்டிய போது, நாணிக் கோணிக்கொண்டு அவன் நின்ற விதம்!

உண்மையிலேயே பெரியவர்களுக்குத் தன்னைப் பற்றிப் பேசிக்கொள்ள வேண்டியதான தாகம் இருப்பதில்லை. That need is never felt; in fact, it does not exist.

இது நடந்தது, வீடணனுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்ட பிறகு. ‘இலங்கைக் கேள்விப் படலம்’ என்றும், ‘ஒன்னார் வலி அறி படலம்,’ என்றும் அறியப்படும் படலத்தில். இதற்கு ஒரு படலம் முந்தியது ‘வீடணன் அடைக்கலப் படலம்.’

அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் வீடணனை ஏற்பதா, வேண்டாமா என்று இராமன் விவாதிக்கும் கட்டம். சுக்ரீவன் தலைமையிலான வானர சேனையோடு அமர்ந்து ஆலோசிக்கும் இடம். இங்கேதான் அனுமனின் முதிர்ச்சியையும், இராமனுடைய மனத்தை அவன் அறிந்திருந்த விதத்தையும், ஒரு வேளை அவனுக்கு இது ஏற்புடையதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று கருத இடங்கொடுக்கும் சூழ்நிலையில் ‘உன் கருத்து என்ன என்பது எனக்குத் தெரியாது; ஆனால் செய்யத் தகுந்தது இது,’ என்று தன் கருத்தை – தன் கருத்தை ஒத்த கருத்தை வேறு யாருமே, சுக்ரீவன் உட்பட சொல்லவில்லை என்ற போதிலும் – வெளிப்படுத்திய நேர்மையையும், துணிச்சலையும் நாம் காண முடிகின்ற காட்சி இது.

தொடர்வேன்…

அன்புடன்
ஹரி கிருஷ்ணன்.

அனுமன்-54 : தன் புகழ் பேசக் கேட்டால்…

இலங்கையில் உள்ள மிகச் சிறந்த அரக்க வீரர்களையும் அவர்களுடைய எண்ணிப் பார்க்க ஒண்ணாத ஆற்றலையும், வரங்களையும், படைகளின் அளவையும், அகழியின் அமைப்பு, கோட்டையின் அமைப்பு, காவல் வீரர்களின் எண்ணிக்கை என மிக விரிவாக இலங்கை மூதூரின் சிறப்பை விரித்துப் பேசுகிறான் வீடணன். அகம்பன், கும்பன், நிகும்பன் (கும்ப நிகும்பர்கள் கும்பகன்னனின் மக்கள்) விலங்கு நாட்டத்தன் (விரூபாக்ஷன்), மாபெரும் பக்கன் (மஹாபார்ஸ்வான்) என்று பலருடைய ஆற்றலைச் சொல்லி, இராவணனின் ஆற்றலைச் சொல்லி, எப்படிப்பட்ட காவலை உடையது அந்த நகரம் என்று விவரிக்கும்போது, அசோகவனத்தில் உள்ள கட்டுக் காவலைக் குறிப்பிடுகிறான் வீடணன். உடனே அவனுக்கு அசோகவனத்தில் அனுமன் செய்யத் தொடங்கிய செயல்கள் நினைவுக்கு வருகின்றன.

இவ்வளவு காவலும், கட்டும், பாதுகாப்பு அமைப்பும் உள்ள இலங்கையின் உள்ளேதான் ஊடுருவிப் போய், சானகியை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அவளுடன் உரையாடி, அத்துடன் நிற்காமல் கணக்கில்லாத சாகசங்களை ஒரே ஒரு நாள் கால அவகாசத்துக்குள் நிகழ்த்தியவன் அனுமன் என்ற எண்ணம் அவனுள் உதிக்கிறது. அன்று அரசவையில் அவனைப் பார்த்த போது, அவனுடைய உரையைக் கேட்ட போது, அவன் சொன்ன செய்தியில் இருந்த நீதியை உணர்ந்த போது, இவ்வளவு நாள் தன்னால் தடுக்க முடியாததாக இருந்த கொடுமையை எதிர்க்கவேண்டும் என்றொரு ஆழமான எண்ணம் தன் உள்ளத்தில் ஆழமாக ஊன்றப்பட்டது என்பதும் நினைவுக்கு வந்தது. கடைசி கடைசியாக, ‘போயும் போயும் வானரம் ஒன்று வந்து இந்த நகரத்தை எரித்துவிட்டுப் போனதே!’ என்று மந்திராலோசனை சமயத்தில் கொதித்துக் கொண்டிருந்த அண்ணனிடம், ‘அண்ணா! இது என்ன, ஒருவனால் அழிபடக் கூடிய நகரமா! ஒருவரால் தாண்டக் கூடிய கட்டுக் காவலா! ஒருவரால் சுட்டுத் தீய்க்கப்படக் கூடிய நகரமா இது! ஒன்றை உணரவேண்டும் நீ. வந்தது வெறும் குரங்கன்று. வெந்தது குரங்கால் மட்டுமன்று. சானகியின் கற்புத் திறம் எரித்தது இந்த ஊரை. அவளை மீட்பதற்காக வந்திருப்பவர்கள் யார் என்று எண்ணுகிறாய்!

‘சிந்த மா நாகரைச் செரு முருக்கிய கரன், திரிசிரத்தோன், முந்த மான் ஆயினான், வாலியே, முதலினோர் முடிவு கண்டால், அந்த மான் இடவனோடு, ஆழி மா வலவனும், பிறரும், ஐயா! இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே?

தேவர்கள் சிதறி ஓடும்படி அவர்களுடைய மாநகரத்தைப் போரில் அழித்த கரன், திரிசிரன், மாரீசன், (அவ்வளவு ஏன், உன்னை வால் கொண்டு பிணித்த) வாலி முதலானோர் இவர்களுடைய கைக் கணைகளுக்கு அழிவுற்றனர் என்றால், (இவர்களை எளிதாக எண்ணிவிடலாமோ!) இடக்கையில் மானை ஏந்திய சிவன், பாற் கடலில் துயிலும் பரந்தாமன், பிரமன் போன்றோர் வரிசையிலே வைத்து எண்ணத் தக்கவர்ளால் அன்றி வேறு யாராலாவது இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய முடியுமா?

இன்னம் ஒன்று உரை செய்கேன்; இனிது கேள், எம்பிரான்! இருவர் ஆய அன்னவர் தம்மொடும் வானரத் தலைவராய் அணுகி நின்றார், மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர்; அவரொடும் மாறுகோடல் கன்மம் அன்று; இது நமக்கு உறுதி என்று உணர்தலும், கருமம் அன்றால்.

இன்னமும் ஒன்று சொல்கிறேன் கேள். அந்த இரண்டு பேருக்கும் துணையாக நிற்கும் வானரத் தலைவர்கள் வேறு யாரும் அல்லர். என்றென்றும் நம்முடைய பகைவர்களாக விளங்கும் தேவர்கள். அவர்களோடு பகைகொள்ளுதல் நமக்கு நன்மையைத் தராது

என்றெல்லாம் எடுத்துச் சொல்ல வைத்ததற்கும், கடைசியில் அண்ணனைக் காட்டிலும் அறமே பெரிது என்று அவனை விட்டு நீங்கியதற்கும் முதற் காரணன் அனுமனே என்பதும் வீடணன் நினைவுக்கு வந்தது. இராவணன் சபையிலே அன்று அனுமன் நிகழ்த்திய உரை வேறு யாரை எட்டியதோ இல்லையோ, வீடணனிடத்திலே பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது.

சானகியைச் சிறை வைத்துப் பத்து மாத காலம் கழிந்திருந்த போதிலும், அவ்வளவு காலமும் இராவணனுடைய செயலை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் இருந்தானல்லவா வீடணன்! (ஆயினும், சானகியைப் பெரிதும் திடப்படுத்தி வைத்திருந்தவர்கள் வீடணனின் மனைவி சரமையும், மகள் திரிசடையும். விவரங்களை வீடணனை ஆயுங்கால் காண்போம்.)

இப்படிப்பட்ட எண்ணங்கள் அலைமோதியிருக்க ஒரு கண நேரத்துக்கேனும் வேண்டும் வீடணன் மனத்தில். எண்ணியதும் இராமனிடத்தில் சொல்லலானான். ‘ஈடுபட்டவர் எண்ணிலர்.’ அந்த அசோக வனத்துக்குக் காவல் நின்றவர்கள் எண்ணில் அடங்காதவர்கள். ‘தோரணத்து எழுவால் பாடுபட்டவர் கடல் மணலினும் பலராம்.’ தோரண வாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடியை உருவிக் கொண்டு அன்று அனுமன் புறப்பட்ட போது, அந்தத் தடியாலே படாத பாடுகளைப் பட்டவர்களின் எண்ணிக்கையோ கடல் மணலினும் அதிகம். ‘எத்தனைப் பேர் காவல் இருந்தால் என்ன?

அன்றைக்கு அனுமன் ஒரே ஒருவனாக நின்று அத்தனைப் பேரையும் வதைத்தான் அல்லவா? ‘சூடு பட்டது தொல்நகர்,’ இந்த அனுமன் அந்தத் தொன்மையான நகரத்தை எரித்தான். ‘அடு புலி துரத்த ஆடுபட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்.’

ஆயிரக்கணக்கான ஆடுகளை ஒரே ஒரு புலி துரத்தினால் அவை என்ன பாடு படுமோ அத்தனைப் பாடுகளைப் பட்டனர் அரக்கர்கள்.

எண்பதினாயிரம் கிங்கரர்களை அனுப்பி வைத்தான் இராவணன், இவனைப் பற்றிக்கொண்டு வருவதற்கு.

‘வெங்கரத்தினும், காலினும், வாலினும் வீக்கி,’ இவனுடைய கொடிய கைகளாலும், கால்களாலும், வாலாலும் அடியுண்டு, ‘சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார்.’ பொங்கி வந்த முப்புரங்களையும் ஒரு சிரிப்பினாலே எவ்வளவு எளிதாகச் சங்கரன் அழித்தானோ, அவ்வளவு எளிதாக இந்த அனுமன் அழித்தான். பஞ்ச சேனாதிபதிகளை அனுப்பினான் இராவணன். பெரும் பராக்கிரமசாலிகள் அவர்கள். என்ன ஆயிற்று!

தானைக் கார்க் கருங் கடலொடும், தமரொடும், தாமும், யானைக் கால் பட்ட செல் என, ஒல்லையின் அவிந்தார்.

கருங்கடலைப் போலே ஆரவாரித்துக் கொண்டு கிளம்பிய சேனையோடும், தம் சுற்றத்தாரோடும், தாமும், ஒரு யானையின் கால் ஊன்றினால் எப்படி ஆயிரக்கணக்கான செல் (சிதல், கறையான்) அழியுமோ, அவ்வாறு இந்த அனுமனின் பேராற்றலால் ஒரு கணத்தில் அனைவரும் அழிந்துபட்டனர்.

ஐயா! ‘கருங்கடல் நெருப்பின் வாய்த்த அக்கனை,’ கடலுக்கடியில் விளங்கும் வடமுகாக்கினியைப் போன்ற கோபத்தை உடைய அக்ககுமாரனை, ‘வரிசிலை மலையடும் வாங்கி,’ கையில் பிடித்த வில்லோடு ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து, ‘தேய்த்த அக்குழம்பு உலர்ந்தி இலங்கையின் தெருவில்,’ இவன் தேய்த்துக் கொன்றானே, அப்போது ஒழுகிப் பெருகியதே அக்கனின் குருதி, அது இன்னமும் இலங்கையின் தெருக்களில் உலர்ந்தபாடில்லை. அதுதான் போகட்டும்.

அன்று இலங்கைக்கு இவன் வைத்த தீ எப்படி அணைந்தது தெரியுமா?

‘சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச் சின்னம் ஆனவர் கணக்கு இலர்; யாவரே தெரிப்பார்? இன்னம் ஆர் உளர், வீரர்? மற்று, இவன் சுட எரிந்த அன்ன மா நகர் அவிந்தது, அக் குருதியால் அன்று.

சொர்ணம் (பொன்) கொண்டு கட்டப்பட்ட மதிலை உடைய இலங்கையில் அன்று எத்தனைப் பேர்கள் இவனால் துகைக்கப்பட்டு சின்னபின்னமாயினர் என்று கணக்கிட்டுச் சொல்லவும் முடியுமோ? அப்படிக் கணக்கிட்டுச் சொல்லக் கூடியவர் யாராவது இருக்கிறார்களோ? அப்படிக் கணக்கிடத்தான் இன்னமும் யாராவது மிகுந்திருக்கிறார்களா! இவன் வைத்த தீயால் எரிந்தது மாநகரம். அரக்கரின் குருதி வெள்ளம் கிளம்பியது பார், அந்த வெள்ளத்தால் அவிந்ததே தவிர, வேறெப்படி அணைந்தது அந்தத் தீ!

அறம் பெரிது; அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதை ஆழ உணர்ந்தவனே ஆயினும், நான் வளர்ந்த சூழலும், வளர்ந்த இடமும் என்னுள்ளே ஆழ ஊன்றிக் கிடந்த அற உணர்வு என்னும் வித்து முளைப்பதற்கு, வெளிப்பட்டுத் தோன்றுவதற்கு ஏதுவானதாக இருந்திருக்கவில்லை. இதோ, அனுமனை நான் அன்று இராவணன் சபையிலே கண்ட காட்சியும், அவன் ஆற்றிய காரியமும், அவனுடைய பேச்சும் என்னுள் அறத்தைக் கிளர்ந்தெழச் செய்தன. நான் உன்னிடம் அடைக்கலம் கேட்டுவந்தேன் என்றால் அதற்கு என்ன காரணம் என்று எண்ணுகிறாய்?

‘காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின் வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று;

வெம்மையான அம்புகளைத் தேர்ந்து அவற்றினாலே நீ கரன் முதலாய அரக்கரை அழித்ததையும், வாலியைக் கொன்றதையும் கேட்டதனால் அன்று. அவற்றால் மட்டுமன்று. இன்னொரு காரணமும் உண்டு.

… … … … … … … … … … … … … … … … அவ் இலங்கை தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப் போந்தவா கண்டும், நான் இங்குப் புகுந்தது – புகழோய்!’

காவலில் சிறந்த இலங்கை மூதூர் அன்று எரியுண்டதைக் கண்டேனல்லவா! (சானகி எனும் பெயர் உலகின் தம்மனை ஆனவள் கற்பினால் வெந்தது’ – உலகத்தின் அன்னையான சானகியின் கற்பின் திறமே இலங்கையை எரித்தது என்பதையும், அது வெளிப்பட்டது அனுமனின் மூலமே என்பதையும் நான் உணரும்படியாக இலங்கை எரிந்ததைக் கண்டேனல்லவா, அதனாலும்) இத்தனை ஆயிரக்கணக்கான அரக்கர்களை வென்று வீழ்த்திய இவனுடைய ஆற்றலைப் பார்த்தும் அல்லவா, இவனை ஆட்கொண்ட உன்னிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்!

என்னவோ பக்கத்து ஊருக்குப் போய், அங்கே இருப்பவரைப் பார்த்துவிட்டு வந்து செய்தி உரைத்தவனைப் போல், நிகழ்ந்த பேராபத்துகளையும், அவற்றைத் தான் ஒடுக்கி வென்ற விதத்தையும் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இவ்வளவு காலம் (இலங்கை சென்று திரும்பி, கிட்கிந்தையை விட்டுக் கிளம்பி கடற்கரையை வந்தடைய இரண்டு வார காலம் ஆனது) தன்னுடைய ஆற்றலால் விளைந்த செய்திகளைப் பேசாமல், அடுத்தடுத்து செய்ய வேண்டிய காரியத்திலேயே மனம் பற்றி நின்ற அனுமனைப் புன்னகையோடு திரும்பிப் பார்த்தான் இராமன். அவன் அடைந்த வியப்புக்கும், மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் ஓர் அளவும் உண்டோ!

‘கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்; ஊட்டினாய், எரி ஊர் முற்றும்; இனி, அங்கு ஒன்று உண்டோ? கேட்ட ஆற்றினால், கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும் மீட்டிலாதது, என் வில் தொழில் காட்டவோ? வீர!’

ஏம்ப்பா! இதோ இவன் சொல்கிறானே, இதை வைத்துப் பார்த்தால், எத்தனையோ இலட்சக்கணக்கான ஆண்டுகளாக இராவணன் தேடிச் சேர்த்து வைத்திருந்த படைச் செருக்கில் பாதிக்கும் மேல் நீ ஒருவனாகவே அழித்துவிட்டாய் போலிருக்கிறதே! இலங்கையை வேறு தீ மூட்டி அழித்திருக்கிறாய் என்று உணர்கிறேன். ஓகோ! இப்போதல்லவா புரிகிறது! நீ ஒருவனே சீதையை மீட்டுத் திருப்பிக் கொண்டுவந்திருந்திருப்பாய். இருந்த போதிலும், என் வில் தொழிலை நான் காட்டுவதற்கு எனக்கொரு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதனால் அந்தச் செயலைச் செய்யாது விட்டுவிட்டாயா?

அடுத்ததாகக் கம்பன், இராமன் வாய்மொழியாக ஒரு வார்த்தையைச் சொல்கிறான். இந்த அவதாரம் முற்றிலும் இராமன் தன்னை மனிதனாகவே உணர்ந்திருந்தான். இராவணன் வதைக்கு இந்த உணர்வே ஆதாரக் கோடு. இந்த உணர்வையும் மீறித் தன்னையே முழு முதலாக உணர்ந்து ஒரே ஒரு கணம் இராமன் பேசுவதாக ஒரு விருத்தம் அமைத்தான்.

‘என்னது ஆக்கிய வலியடு அவ் இராவணன் வலியும் உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்! முன்னது ஆக்கிய மூஉலகு ஆக்கிய முதலோன் பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.’

என்னுடைய நல்வினையே ஒன்று திரண்டு வந்ததைப் போன்ற வடிவுடையவனே! எனக்கு முன்னால் சென்று அந்த இராவணனின் வலிமையையும் மீறிய செயல்களைச் செய்த காரணத்தால், என் வலிமையையும் நீ உன்னது ஆக்கிக் கொண்டாய். மூன்று உலகங்களையும் படைக்கும் முதலோன், பிரமன், அமரும் இடத்தில் உன்னை அடுத்ததாக அமர வைக்கப் போகிறேன்.

அடுத்த பிரமன் நீயே.

கேட்டுக் கொண்டிருந்த அனுமன் எழுந்தான். வேறு யாராவதாக இருந்தால் பெருமை நிலை கொள்ளாமல் குதித்தாடியிருந்திருப்பார்கள்.

என்று கூறலும், எழுந்து, இரு நிலன் உற இறைஞ்சி, ஒன்றும் பேசலன் நாணினன், வணங்கிய உரவோன்; நின்ற வானரத் தலைவரும் அரசும், அந் நெடியோன் வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார்.

என்று இராமன் சொன்னதும் அனுமன் எழுந்தான். நிலத்தில் தன் முழு உடலும் படும்படியாக நெடுஞ்சாண் கிடையாக இராமனின் அடியில் விழுந்தான். சுற்றி நின்ற வானரத் தலைவர்களும் மற்றவர்களும் அவன் நிகழ்த்திய ஆற்றல் மிகுந்த செயல்களைக் கேள்வியுற்று, வீடு பேறு பெற்றதைப் போல் மகிழ்ந்தார்கள். இராமனின் காலில் விழுந்து எழுந்த அனுமனோ, அதற்குப் பிறகு ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றுகொண்டான். எதுவும் பேசவில்லை. நாணத்தால் ஆட்கொள்ளப்பட்டான்.

தன் புகழ் கேட்டால், தன் பெருமை பேசப்பட்டால் ஏக்கழுத்தம் செய்வார்களாம் மற்றோர். ஏக்கழுத்தம் என்றால் தலை ஆகாயத்தைப் பார்க்கின்ற அளவுக்குக் கழுத்து மேல் நோக்கி நிமிருதல். தன்னை அருகில் வைத்துக் கொண்டு இராமன் முன்னிலையில் தன் பெருமையை வீடணன் பேச, தன்னைத் தன் நாயகன் வியந்து பாராட்ட, நாணத்தால் ஆட்கொள்ளப்பட்டு தலை கவிழ்ந்து, கையால் வாய் மறைத்து நின்றான் அனுமன்.

தொடர்வேன்…

அன்புடன்
ஹரி கிருஷ்ணன்.

அனுமன்-53 : இடையில் கொஞ்சம் வீடணன்

கம்பன் படைத்த காட்சிகள், கம்பன் மாற்றிய காட்சிகள் என்று பட்டியலிட்டால் வால்மீகியின் மூலத்திலிருந்து வேறுபட்ட கோணத்தில் செய்யப்பட்ட அத்தகைய காட்சிகளின் தொகுப்பில் முதல் பத்தில் இடம்பெற வேண்டியது வீடணன் அடைக்கலப் படலம். சாதாரணமாக வீடணனுடைய பாத்திரத்துக்கு உரிய உன்னதம் புறந்தள்ளப்பட்டு, ‘துரோகி’ என்பதானதொரு தன்மையே அதிகம் பேசப்படுகிறது. இப்படிப்பட்ட ‘துரோகி’ என்பதான சித்திரிப்பு வங்காளத்திலிருந்து தொடங்குகிறது. அரவிந்தரை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்துகொண்டிருந்த ‘வந்தே மாதரம்’ என்ற பத்திரிகையில் கோபால கிருஷ்ண கோகலேயைக் குறிப்பி ட்டு ‘வீடணனே, வெளியேறு’ என்ற தலைப்பில் 1906ஆம் ஆண்டில் ஒரு தலையங்கம் வெளிவந்தது என்று ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் குறிப்பிடுகிறார். தன்னை அது எவ்வாறு பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யது என்பதையும் சாஸ்திரியார் குறிப்பிடுகிறார். “I was naturally hurt very much very much by the reference to my master Gokhale, but I was still more hurt by the use of the name Vibishana to signify a traitor. I had been brought up to believe that Vibhishana was a Bhakta of the first order…..,” என்று அவர் சொல்கிறார்.

வட இந்தியாவில் – குறிப்பாக வங்காளத்தில் – துரோகியாகக் கருதப்படும் வீடணன், தென்னிந்தியாவில் அற வழியிலேயே நிற்கும், உறவுகளைக் காட்டிலும், அல்லவழியில் நடக்கும் அண்ணனைக் காட்டிலும், அறமே கைக்கொள்ளத் தக்கது என்று அவனுக்கு உண்மையிலேயே உரிய, சரியான தோற்றத்தில் காணப்படுகிறான் என்றால், அதற்குப் பெரிய காரணமாகக் கம்பனைத்தான் குறிப்பிட முடியும். சீனிவாச சாஸ்திரியார் போன்ற, கம்பனைக் கையாலும் தொட்டுப் பார்த்திருக்க வாய்ப்பில்லாத வால்மீகி இராமாயண மேதைகள் கூட வீடணனை இந்தக் கோணத்திலிருந்துதான் பார்த்தார்கள் என்றால், அவரே குறிப்பிடுவது போல், ‘I had been brought up to believe that Vibhishana was a Bhakta of the first order.’ வீடணன் தலை சிறந்த பக்தன் என்ற நம்பிக்கையோடு நான் வளர்க்கப்பட்டேன்.

வவேசு ஐயர் வீடணனைக் குறித்த இப்படிப்பட்ட வடக்கு – தெற்கு கருத்து பேதத்தைக் குறிப்பிடுகிறார். வடக்கில், அதிலும் குறிப்பாக வங்காளத்தில் அவனை ‘துரோகி’ என்று இராமாயண ஆய்வாளர்கள் குறிப்பி டுவதை எடுத்துச் சொல்லி அதனுடைய காரணத்தை விளக்கும்போது ஒன்று குறிப்பிடுவார் ஐயர். “The effect of this noble abhayapradana, however is almost utterly spoiled when Valmiki makes Rama ask Vibishana, at the very moment that he falls at this feet, to tell him all about the defences of Lanka and the army of the Rakshasas.” வந்து, அடி தொழுத அதே காட்சியிலேயே, அதே இடத்திலேயே, இலங்கையைப் பற்றிய விவரங்களை இராமன் கேட்கத் தொடங்குகிறான். வீடணன் மீது சுமத்தப்படும் களங்கத்துக்கு இது முதற் காரணம் என்பார் ஐயர். கம்பனுடைய சித்திரிப்பிலும் ‘இலங்கை கேள்விப் படலம்’ உண்டு. ஒரே ஒரு சர்க்க அளவில், அதிலும் ஒரு முப்பது சுலோகங்களுக்குள் (நான் சொல்வது ‘இலங்கைக் கேள்விப்’ பகுதியை மட்டும்) வால்மீகி முடித்துவிடும் இந்தக் காட்சியை ஒரு தனிப் படலமாகவே செய்கிறான் கம்பன், இந்தக வீடணன் மீது தீற்றப்பட்டிருக்கும் களங்கத்தை முற்ற முழுக்கக் களைந்தவன் கம்பன்; அவனுடைய ஆசையைக் காட்டிலும் அகத்தையும்; அண்ணனைக் காட்டிலும் அறத்தையும் பின்பற்றும் உள்ளார்ந்த வி ழைவையே, அப்படிப்பட்ட விழைவை மட்டுமே சரியான கோணத்தில் சித்திரித்திருக்கிறான் கம்பன். வவேசு ஐயர் சொல்கிறார்: “And it is as a Bhakta that Kamban delineates him. That is why he takes care that he does not anywhere put into his mouth such selfish sentiments as Valmiki does not hesitate to put.” வீடணன் பாத்திரத்தைக் கத்தி மேல் நடப்பதுபோல் மிகமிக எச்சரிக்கையாகக் கையாள்கிறான்.

வீடணனைப் பற்றிய முழு ஆய்விற்கு இது நேரமில்லை. அது தனியே பார்க்க வேண்டிய ஒன்று. ஆனால், இந்த வீடணன் அடைக்கலப் படலம் இரண்டு விதங்களில் அனுமனுடைய பாத்திரச் சிறப்பை வெளிப்படுத்தும் அருமையான இடம். எனவே நாம் இப்படி வீடணனைப் பற்றிய இப்படிப்பட்ட முன்னோட்டத்தைக் கொடுக்க நேர்ந்தது.

இலங்கையைப் பற்றிய செய்திகளை இராமனிடத்திலே வீடணன் சொல்லியே ஆகவேண்டும். அது கதைப் போக்குக்கும், வீடணன் இராமனிடத்திலே வந்து சேர்ந்திருப்பதற்கான அற நோக்கத்திற்கும் அடிப்படையான ஒன்று. ஆனால் காட்சி விவரிப்பு, சம்பவங்கள் நடைபெறும் விதம், இராமன் அப்படியரு கேள்வியை எழுப்புதவதற்கான சூழல், அந்தக் கேள்வி வந்து விழும் விதம் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறான் கம்பன்.

நாடி வந்தவனுக்கு அடைக்கலம் அளிப்பதே தன்னுடைய தலையாய கடமை என்று, ‘இவன் இராவணனால் அனுப்பப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும்,’ என்று சொல்கின்ற சுக்ரீவனைப் பார்த்து

அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம ஆநய ஏனம் ஹரி ஷ்ரேஷ்டா தத்தம் அஸ்ய அபயம் மயா

விபீஷணோவா ஸ¤க்ரீவா யதிவா ராவணா ஸ்வயம் (வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 18, சுலோகம் 33 மற்றும் 34 முதல் அரையடி)

(என்னிடத்தில் வந்து ஒரே ஒரு முறை ‘நான் உன் அடைக்கலத்தை நாடுகிறேன் என்று சொல்பவன் யாராக இருந்தாலும் அவனுக்கு) எதனாலும், யாரிடத்தும் பயம் ஏற்படாது அபயம் தருவேன். குரங்குகளில் சி றந்தவனே! இது என் விரதம். வந்திருப்பது விபீஷணனாயினும் சரி; அல்லது இராவணனே ஆயினும் சரி; ‘தத்தம் அஸ்ய அபயம் மயா,’ அவனுக்கு என் அபயம் அளிக்கப்பட்டாகி விட்டது. Protection has already been granted.

என்று காருண்யத்தின் மிக மிக உச்சத்தில் நின்று இராமன் பேசுகிற பேச்சு மயிர்க்கூச்சம் உண்டாக்கக் கூடிய ஒன்று. இந்தக் காட்சிகளை அவசியம் கருதி இங்கே சுருக்கமாகப் பார்க்கிறோம். விரிவாக நோக்கத் தக்க காட்சிகள் இவை. உரிய இடத்தில் செய்வோம்.

இராமனுடைய முன்னிலைக்குக் கரங் குவித்தபடி வரும் வீடணன், கூட வந்திருக்கும் மற்ற நான்கு அரக்கர்களோடு அவன் பாதத்தில் வீழ்ந்து

அனுஜோ ராவணஸ்ய அஹம் தேன ச அஸ்மி அவமானிதா பவந்தம் ஸர்வ பூதானாம் ஷரண்யம் ஷரணம் கதா (மேற்படி, சர்க்கம் 19, சுலோகம் 4 (முன் அரையடி) மற்றும் 5 (பின் அரையடி)

‘நான் இராவணனின் உடன்பிறந்தவன். அவனால் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன். (அண்ட கோளத்தி ல்) அனைத்தும் சரணம் அடையத்தக்கவனான உன்னிடம் சரண் புகுந்திருக்கிறேன்,’ என்று வணங்கினான்.

பவந்தம் ஸர்வ பூதானாம் ஷரண்யம் ஷரணம் கதா பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தனானி

பவத் கதம் ஹி மே ராஜ்யம் ச ஜீவிதம் ச சுகானி ச தஸ்ய தத்வசனம் ஷ்ருத்வா ராமோ வசனமப்ரவீத்

(மேற்படி, சுலோகம் 5-6)

உயிர்களெல்லாம் சரண்புகத் தக்கவனான உன்னைச் சரண் புகுந்தேன். இலங்கையாகிய என் நாட்டையும், (அங்கே உள்ள) என் உறவினரையும், என் செல்வத்தையும், சுகங்களையும் ‘பவத்கதாமி,’ உன்னிடம் ஒப்புவிக்கி றேன். இப்படி விபீஷணன் சொல்லக் கேட்ட இராமன் சொல்வதானான்.

‘வந்திருப்பவன் இராவணனேயாயினும் சரி; அவனுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டாயிற்று,’ என்று சொன்ன இராமனுடைய விடையை எடுத்துச் சொல்லும் வால்மீகியின் வாக்கில், ‘அப்படியே! உனக்கு நான் அடைக்கலம் தந்தேன்!’ என்பன போன்ற – இந்த நேரத்தில், இந்த இடத்தில் சொல்லியே தீர வேண்டிய, அவசியமான – சொற்கள் காணப்படவில்லை. மயிர்க்கூச்சம் உண்டாகும்படியாக சுக்ரீவனிடம் ‘இராவணனே ஆயினும் சரி; அடைக்கலம் தந்தாகிவிட்டது,’ என்று சொன்னவன், இங்கே, வீடணன் வந்து காலில் விழுந்து அபயங் கேட்கும் போது அவனுக்கு விடையாகச் சொல்வதை வால்மீகி (இராமன் வாய்மொழியாகவே) இவ்வாறு உரைக்கி றார்:

வசஸா சாந்தவயித்வைனம் லோசனாப்யம் பிபானிவா ஆக்யாஹி மம தத்வேன ராக்ஷஸானம் பலாபலம். (மேற்படி, சுலோகம் 7)

(விபீஷணனுடைய) இந்தச் சொற்களைக் கேட்ட இராமன், அவனை மலர்ந்த கண்களால் பார்த்து, இனிமையான குரலில் அவனிடம் கேட்டான்: ‘எனக்குச் சொல். உண்மையாகவே. அரக்கர்களுடைய பல, பலவீனங்கள் என்ன?’

ம்ருதுபாஷி, பூர்வபாஷி என்று பேசுவார் வால்மீகி இராமனை. மென்மையாகப் பேசுபவன். தன்னிடத்தில் சொல்லப்படும் சொல்லுக்கு விளக்க மொழி தேவைப்படாத அளவுக்கு (அல்லது தன்னிடம் செய்யப்படும் வாதத்துக்கு எதிர்வாதம் ஏற்பட முடியாத வகையில்) முன்னதாகவே, முந்தி மொழிபவன் என்று பொருள். ஆனால், இந்த முக்கியமான கட்டத்தில், வால்மீகி தீட்டியுள்ள சித்திரத்தின் நாடகப் பாங்கு சற்றே தொய்கி றது என்பது வெளிப்படை. இராமனும் சுக்ரீவனும் சந்திக்கும் கம்பராமாயணக் காட்சியை நாம் பார்த்தோம். ‘உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும்,’ என்று இராமன் கேட்கும் போது, ‘முரணுடைத் தடக்கை ஓச்சி,’ என்று தொடங்கி சுக்ரீவன் வாலியைப் பற்றிப் பேசுவதைக் கேட்டோம். (பார்க்க: அனுமன் 12: ‘என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…’) (http://www.harimozhi.com/Article.asp? id=56)

அங்கே சுக்ரீவன் பேசியது எப்படிச் சடக்கென்று தடம் மாறுகிறதோ, அப்படியே இங்கே இராமன் பேசுவதும் தடம் மாறுகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. “The effect of this noble abhayapradana, however is almost utterly spoiled when Valmiki makes Rama ask Vibishana, at the very moment that he falls at this feet, to tell him all about the defences of Lanka and the army of the Rakshasas,” என்று வவேசு ஐயர் இதைத்தான் குறிப்பிடுகிறார்.

வீடணனிடத்திலே இலங்கையைப் பற்றிய செய்திகளைக் கேட்டு அறிவது என்பது ஒரு முக்கியமான போர்த் தந்தி ரம் என்பதை மறுப்பற்கே இல்லை. போர்த் தந்திரங்களில், ஒற்றறியும் விதத்தைப் பற்றிச் சொல்லும் போது, எதிரியின் ஆட்களில் யார் யாரை ஒற்றறியப் பயன்படுத்தலாம் என்று ஐந்து வகையானவர்களைக் குறிப்பி டுவார். (Sun Tzu, The Art of War)

‘Worthy men who have been degraded from office, criminals who have undergone punishment; also favourite concubines who are greedy for gold, men who are aggrieved at being in subordinate positions… … Officials of these several kinds should be secretly approached and bound to one’s interests by means of rich presents. In this way you will be able to find out the state of affairs in the enemy’s country, ascertain the plans that are being made against you and moreover, disturb the harmony and create a breach between the sovereign and his ministers.’ (XIII Use of Spies)

இந்த அளவுகோலின்படி, வீடணன் Worthy men who have been degraded from office என்ற வகையில் அடங்குகிறான். இவனிடத்தில் தேவையான விவரங்களைக் கேட்டறிவது யுத்த முறைகளில் ஒன்று. இதி ல் தவறோ, முறைகேடோ, தருமமற்ற செயலோ ஏதும் இல்லை. ஆயினும், எடுத்த எடுப்பில், மற்ற எதைப்பற்றியுமே பேசாமல் இராமன் இராக்கதர்களின் பல, பலவீனங்களையும், இலங்கையின் அமைப்பையும் கேட்பது கம்பனை உறுத்தியிருக்கிறது. இந்தக் காரணத்தைதானே ‘வட இந்தியாவில் – குறிப்பாக வங்காளத்தி ல் – வீடணனை சகோதர துரோகியாகச் சித்திரிக்கப்படுவதன் அடிப்படையாக ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்தி ரியார் சுட்டிக் காட்டுகிறார்? இதே காரணத்தைதானே வவேசு ஐயர் ரசக் குறைவானதாக எடுத்துக் காட்டுகி றார்?

கம்பனுக்கு வருவோம். கம்ப இராமாயணத்தில் இந்தக் காட்சி நடை பெறுவது, வீடணனுக்கு அடைக்கலம் தரப்பட்ட பகற் பொழுது கழிந்து, இரவில். விபீடணனுக்கு இலங்கையின் மகுடத்தைச் சூட்டுவிப்பதாக உறுதி யளித்து, எந்தவிதமான பிரதி பலனையும் எதிர் பாராமல், அடைக்கலம் தருவது ஒன்றே தன் கொள்கையாக, அவனுக்கு இலக்குவனைக் கொண்டு கடல் நீரால் அடையாள மகுடாபிஷேகம் செய்வித்து,

‘பல் நெடுந்தானை சூழப் பகலவன் சேயும் நீயும் மன்நெடும் குமர! பாடிவீட்டினை வலம் செய்க’

பலவிதமான சேனைகளும் உங்களைப் புடை சூழ, இலக்குவா, சுக்ரீவனையும் உடனழைத்துக் கொண்டு, இவனுக்கு நம் படைகளை எல்லாம் காட்டுவாயாக. நம் படைகள் தங்கியிருக்கும் பாடி வீடுகளைச் சுற்றிக் காட்டுவாயாக. நம்முடைய முழு சேனாபலத்தையும் இவன் உணரச் செய்வாயாக,’ என்று சொல்லி விடை தருகி றான் இராமன். (வீடணன் அடைக்கலப் படலத்தை நாம் இப்போது ஆயவில்லை என்பதால் வால்மீகி இராமாயணத்தோடு இந்தக் காட்சியை இப்போது முழுமையாக ஒப்பிடவில்லை.)

பகைவனின் தம்பி அடைக்கலம் கேட்டு வந்திருக்கிறான். மறு பேச்சுப் பேசாமல் அடைக்கலம். அடுத்த கணத்தி ல் அவனுடன் தன் தம்பியையும் துணைவனையும் அனுப்பி, தங்களின் முழு சேனையையும் பார்வையிடச் செய்யும் உடனடி நம்பகம். ‘நீ எங்க ஆள். உன்னை நான் நம்புகிறேன். போய் சேனை முழுக்கவும் பாத்துட்டு வா.’

இரவாகிறது. இராமன் தனித்திருக்கிறான். நிலவைப் பார்த்தபடி, சானகியின் நினைவால் வாடியிருக்கி றான். சுக்ரீவன் அப்போது தனியாக இருக்கும் இராமன் அருகில் வந்து அமர்கிறான். ‘நீ தேய்வது என் காரியம்? நிரப்பும் சிந்தையை மேயவன் தன்னொடும் எண்ணி இனித் தூயது நினைக்கிலை?’ என்று மென்மையாகவும், அன்பாகவும் கடிந்துகொள்கிறான், ‘இன்னும் என்னப்பா இப்படி மனசப் போட்டு உழப்பிக்கி ற? இதென்ன காரியம்? இதப் பாரு, வந்திருக்கிறான் பார் விபீஷணன், அவனைக் கூப்பிடு. அவனிடம் பேசு. அடுத்தது என்ன செய்யலாம் என்று சிந்தி,’ என்று இராமனுக்குச் சுக்ரீவன் சொல்கிறான். அவன் பேச்சால் தெளிவடைந்த இராமன், ‘போய் அவனை அழைத்து வா,’ என்கிறான். பேச்சு மெல்ல மெல்ல விரி கிறது. விவரங்களைச் சொல்வதற்காகக் கை கூப்பியபடி எழுந்து நிற்கிறான் வீடணன். ‘எழுதலும் இருத்தி என்றிராமன் ஏயினான்.’ நிக்காதே. சும்ம உக்காரு. உட்கார்ந்தபடியே பேசு.

வீடணன் பேச்சில் இலங்கையின் அமைப்பும், அங்குள்ள ஒவ்வொரு இராக்கதனின் தனித் தனிப் பெருமையும் வெளி ப்படுகிறது. வால்மீகியின் வீடணன் தருகின்ற விவரங்களை விடவும் மிக அதிகமான விவரங்களைத் தருகிறான் என்றாலும், இது நிகழ்கின்ற விதத்தால், இயல்பாகவும், உறுத்தாததாகவும் நிகழ்கிறது.

அது சரி. நடுவில் இதென்ன வீடணன் கதை என்கிறீர்கள்? அதுதானே? அங்கே அனுமன் தன் செயல்களைச் சொல்லாமல் விட்டான் அல்லவா? அவன் இலங்கையில் செய்த காரியங்கள் இதுவரையில் இராமனுக்கோ, சுக்ரீவனுக்கோ தெரியாமலேயே நிற்கின்றன அல்லவா? அந்தச் செயல்கள் இராமனின் திருச்செவி சேர்வதற்கான களம் உருவாகிறது.

தொடர்வேன்…

அன்புடன்
ஹரி கிருஷ்ணன்.